மும்பை தீ விபத்து: குழந்தை உட்பட 8 பேர் பலி!

மும்பையில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு மாத குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை அந்தேரியில் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இ.எஸ்.ஐ.சி கம்கார் மருத்துவமனையில் நேற்று (டிசம்பர் 17) மாலை 4 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டதில் எட்டு நபர்கள் உயிரிழந்துள்ளனர், 145 நபர்கள் படுகாயமடைந்துள்ளனர், 28 நபர்கள் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றனர். தீயை அணைக்க மூன்று மணி நேரத்துக்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராடினர். இந்த விபத்தில் ஆறு மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. மற்றொரு பெண்ணும் பளுதூக்கியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். உயிரிழந்த மற்ற ஆறு நபர்களில் நால்வரின் அடையாளத்தை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜன்னல் ஏசியில் ஏற்பட்ட குறைந்த மின்னழுத்தத்தால் தீ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. 325 படுக்கைகளைக் கொண்ட இந்த மருத்துவமனை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. தீ விபத்து பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப மருத்துவமனையின் கட்டமைப்பு இல்லாததால் உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீ பற்றிக்கொண்ட பிறகு புகை தரையிலிருந்து எழுந்து கட்டடம் முழுவதும் பரவியுள்ளது. மருத்துவமனையின் முகப்பு கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளதால், புகையின் நடுவே எந்தப் பக்கம் தப்பித்துச் செல்வதென்பது விளங்கவில்லை.
பெரும்பாலான காயங்களும், உயிரிழப்புகளும் மூச்சுத்திணறலாலேயே ஏற்பட்டுள்ளது. விபத்து பற்றி அதிகாரி ஒருவர் பேசுகையில், “தரைத் தளத்தில் ஏராளமான ரப்பர் ரோல்கள் இருந்துள்ளன. அவை எளிதில் தீப்பற்றிக்கொள்ளக்கூடிய பொருட்களாகும். குறைந்த மின்னழுத்தத்தால் ஏற்பட்ட தீ, ரப்பர் ரோல்களால் பெருகியிருக்க வேண்டும். பின்னர் குழாய் வழியாக தீ மேற்பகுதியை நோக்கிச் சென்றுள்ளது. நான்காவது மாடிதான் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ஏனெனில், புகை நீண்ட நேரம் நான்காவது மாடியில் தேங்கியிருந்துள்ளது” என்று கூறினார். இம்மருத்துவமனை உரிய சான்றிதழ்களைக் கூட பெறவில்லை என்பது அதிகாரிகளின் குற்றச்சாட்டு.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.