ஐபிஎல் 2019: யாரை, எப்படி தேர்ந்தெடுத்தார்கள்?
சிவா
ஐபிஎல் 2019 சீசனுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று (டிசம்பர் 18) நடைபெற்றது. ஏலத்தில் நடைபெற்ற இறுதி முடிவுகளைத் தாண்டி, ஒவ்வொரு வீரரைத் தேர்ந்தெடுப்பதிலும் அணிகளுக்கிடையே ஏற்பட்ட போட்டி எப்படி இருந்தது என்பதை இங்கு பார்க்கலாம்.
ஏலத்தில் முதல் வீரராக அறிவிக்கப்பட மனோஜ் திவாரி விற்கப்படாமலே போனார். இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடிய சத்தேஸ்வர் புஜாராவும் விற்கப்படவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் ஷிம்ரோன் ஹெட்மியர் 4.2 கோடிக்கு பெங்களூர் அணியினால் வாங்கப்பட்டார். சமீபத்தில் இந்தியாவுடன் விளையாடியபோது அசத்திய ஷிம்ரோனின் அடிப்படை விலை ஐம்பது லட்சமாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் உயர்ந்த விலையை, ஹைதராபாத் அணியுடன் இடையே சேர்ந்து உயர்த்தியது. ஆனால், பெங்களூர் அணி ஒரு வழியாக 4.20 கோடியில் முடித்துவைத்தது.
நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் மற்றும் மார்டின் குப்தில் ஆகியோர் விற்கப்படவில்லை.
ஆல் ரவுண்டர்ஸ் லிஸ்டில் முதலாவதாக விற்பனைக்கு வந்த கிறிஸ் வோக்ஸ் மீது யாருமே ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அடுத்ததாக வந்த கார்லஸ் பிரத்வைடுக்கு எல்லா அணிகளும் முன்வந்தன. பஞ்சாப், கொல்கத்தா அணிகளுக்கிடையேயான போட்டியில் கொல்கத்தா அணிக்கு 5 கோடிக்கு ஏலம் விடப்பட்டார் பிரத்வைட்.
யுவராஜ் சிங் 1 கோடி அடிப்படை விலைக்கு அறிவிக்கப்பட்டார். ஆனால், எந்த அணியும் அவர் மீது ஆர்வம் காட்டவில்லை. எனவே, விற்கப்படாதவர்கள் பட்டியலில் சேர்ந்தார் யுவராஜ்.
ஐபிஎல் போட்டிகளில் மிக முக்கியமான ஆட்டங்களை மாற்றியமைத்த அக்சர் பட்டேல் 1 கோடி அடிப்படை விலையாக அறிவிக்கப்பட்டு, பஞ்சாப், டெல்லி அணிகளின் மோதலில் 5 கோடிக்கு டெல்லி அணிக்கு விற்கப்பட்டார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரண் 75 லட்சம் என்ற அடிப்படை விலைக்கே அறிவிக்கப்பட்டார். ஆனால், டெல்லி, பஞ்சாப், பெங்களூர் அணிகளின் போட்டியினால் 4.20 கோடி வரை அவரது விலை உயர்ந்தது. கடைசியில் பஞ்சாப் அணிக்கு 4.2 கோடிக்கு விற்கப்பட்டார்.
காயத்தினால் அவதியுற்று ஓய்வில் இருக்கும் ரித்துமன் சஹா 1.20 கோடி என்ற அடிப்படை விலைக்கே ஹைதராபாத் அணியினால் வாங்கப்பட்டார்.
கடந்த வருடம் 11.5 கோடிக்கு விற்கப்பட்டு, அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஜெய்தேவ் உனத்கட் 1.5 கோடி என்ற சாதாரண அடிப்படை விலைக்கே பட்டியலிடப்பட்டது விமர்சனங்களை எழுப்பியது. ஆனால், அனைத்து விமர்சனங்களையும் உடைத்து இந்த ஏலத்தில் 8.4 கோடிக்கு ராஜஸ்தான் அணியால் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார் உனத்கட். தொடக்கத்தில் ராஜஸ்தான், டெல்லி அணிகளால் ஏறிய விலையை சென்னை அணியும் உள்ளே நுழைந்து எகிற வைத்தது. 7 கோடிக்கும் மேலாக பஞ்சாப் அணியால் விலை பேசப்பட்ட பின்பு சென்னை அணி பின்வாங்கியது. ஆனால், ராஜஸ்தான் அணி ஒரே பிடியாக நின்று 8.4 கோடிக்கு உனத்கட்டை வாங்கிய பிறகே ஓய்ந்தது.
இஷாந்த் ஷர்மா 75 லட்சத்துக்கு அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டு 1.1 கோடிக்கு டெல்லி அணியால் வாங்கப்பட்டார். ராஜஸ்தான் அணி இல்லையென்றால் அவர் அடிப்படை விலைக்கே வாங்கப்பட்டிருப்பார்.
லஷித் மலிங்கா அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வீரர். ஆனால், அவரை அடிப்படை விலையான 2 கோடிக்கே வாங்கிவிட்டது மும்பை அணி.
மொஹமத் ஷமி மீது முதல் ஆளாக ஆர்வம் காட்டியது சென்னை அணி. ஆனால், ராஜஸ்தான் உள்ளே புகுந்து விலையை ஏற்றியதும், அங்கு நடைபெற்ற ஏலப் போரிலிருந்து சென்னை பின்வாங்க பஞ்சாப் உள்ளே நுழைந்து 4.8 கோடிக்கு வாங்கிவிட்டது.
அதிகபட்சம் 25 வீரர்களைத் தான் வாங்கமுடியும் என்பது தெரிந்து தான் ராஜஸ்தான் களமிறங்கியதா? என்ற கேள்வி எழும் அளவுக்கு எல்லா ஏலத்திலும் பங்கெடுக்கிறது ராஜஸ்தான் அணி. 50 லட்சத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட வருண் ஆரோன், டெல்லி-ராஜஸ்தான் போட்டியினால் 2.40 கோடிக்கு ராஜஸ்தானுக்கே விற்கப்பட்டார்.
முழு உறுதியுடன் சென்னை அணி விலைக்கு வாங்கியவர் மோஹித் ஷர்மா. 50 லட்சத்துக்குத் தொடங்கிய ஏலத்தை பஞ்சாப், சென்னை, டெல்லி, மும்பை அணிகள் போட்டியிட்டு 5 கோடி வரை கொண்டு வந்து சென்னை அணியிடம் கொடுத்துவிட்டனர்.
இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டன் ஆயுஷ் பதோனி எவ்வித அசைவுமின்றி விற்கப்படாதவர்கள் பட்டியலுக்கு நகர்த்தப்பட்டார்.
ஷிவம் டுபே எப்போது வருவார் என்று மொத்த அரங்கமும் காத்திருந்தது போல, அவரது பெயர் ஏலத்தில் உச்சரிக்கப்பட்டதும் ஒரு பரபரப்பு ஏற்பட்டது. டெல்லியும், பெங்களூர் அணியும் தொடங்கிவைத்த போட்டியில் மும்பை அணி சேர்ந்துகொண்டது. ஒன்றரை கோடியிலிருந்து மூன்றரை கோடிக்கு விலை ஏறியதும் ஒவ்வொரு அணியாக கழலத் தொடங்கின. 4 கோடியில் சேர்ந்த பஞ்சாப் விடாப்பிடியாக விலையை ஏற்ற, 5 கோடியில் பெங்களூர் அணி அவரை விலைக்கு வாங்கியது. மும்பை அணி இவருக்காகத்தான் பணத்தை சேமித்து வைத்திருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இவரையும் மும்பை வாங்கவில்லை என்றால் என்னதான் அவர்களின் திட்டம்?
வருண் சக்ரவர்த்தி தமிழ்நாட்டின் வீரர் என்பதால் சென்னை அணி எப்படியும் அவரை விலைக்கு வாங்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வருணுக்காக பஞ்சாப் நடத்திய ஏலப் போரைப் பார்த்தவர்கள் அமைதியாக விலகிவிட்டனர். சென்னை அணி 4 கோடிகள் வரை வருணுக்காக ஒதுக்கியிருந்தது போல. ராஜஸ்தான் அணி 5 கோடிக்கும் மேலாக சென்றதும் சென்னை விலகியது. ஆனால், கொல்கத்தா அணி உள்ளே புகுந்து 7 கோடி வரை போராடிப்பார்த்தது. 36 கோடி வரை கையில் வைத்துக்கொண்டு களமிறங்கிய பஞ்சாப் அணி 8.4 கோடிக்கு வருணை வாங்கிய பின்பே அமைதியானது.
தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் காலின் இங்க்ராம் ஏலத்தில் மீண்டும் நெருப்பைப் பற்றவைத்தார். சாம்பியன்ஸ் பிரீமியர் லீகில் ஆரஞ்சு தொப்பியை வென்றவரான காலினுக்கு டெல்லியும், ஹைதராபாத்தும் கடுமையான போட்டியை நடத்தின. டெல்லி வென்று 6.4 கோடியை மொய் எழுதியது.
இன்றைய ஐபிஎல் ஏலத்தில் யுவராஜ் சிங் உட்பட ஷான் மார்ஷ், சௌரப் திவாரி, ஹஷிம் அம்லா, ஆங்கெலோ மேத்யூஸ், கோரி ஆண்டர்சன் ஆகிய பலர் விற்பனையாகாதது மிகப்பெரிய அதிர்ச்சி சம்பவமாக உருவகப்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு இளமை ததும்பும் புத்துணர்ச்சியுடன் கூடியதொரு கிரிக்கெட் திருவிழாவை நடத்தத் திட்டமிட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதாகவே இன்றைய ஏலம் பார்க்கப்படுகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை