களத்தில் மலர்ந்த என்காதல்.


இந்த இரவுகள் இன்னும் கொஞ்சம் நீண்டு செல்லாதா..? என்று என்மனம் ஏங்கியபடி இருந்தது.
விடிந்தால் எனக்கு திருமணம் எனது உறவுகள் எல்லோரும் என்னை நேரத்துக்கு தூங்கும்படியும் அப்போதுதான் மேக்கப் செய்யும் போது அழகாக இருக்கும் என்றும்கூறி என்னை அறைக்குள் தள்ளிவிட்டு பலகாரம் பார்சல்பண்ண சென்றுவிட்டார்கள்,
எப்படி உறங்க முடியும் என்னால்..?என்னுள் மீட்சி இன்று அவன் நினைவுகள் அல்லவா தொடர்கின்றது,.?
எதிரியோடு களமாடி எதிர்ச்சமர் கண்டு மண்ணில் வித்தாகிப்போனவனே என் மனம் நிறைந்தவன் என்பதையும் அவன் நினைவைச்சுமந்து வாழ்வதாலேயே நான் திருமணம் வேண்டாம் என்று இருந்தேன் என்பதையும் எப்படி என் உறவுகளிற்கு கூறிபுரிய வைக்க முடியும்..?இச் சமுதாயத்தில் என் கருத்துக்களிற்கு இடம் இல்லை என்பதனாலேயே இத் திருமணத்திற்கு சம்மதித்தேன்.
என் திருமணவாழ்வில் வரும் கணவனோடு என்னால் முழுமனதோடு வாழமுடியுமா..?
ஒவ்வொரு ஆண்டும் காத்திருந்து மாவீரர் தினத்திற்கு எனது கையாலே மாலைகட்டி அவன் உறங்கும் விசுவமடு மாவீரர் துயிலுமில்லம் ஓடிச்செல்வேனே.
என் மாவீரனே இனி என்னால் உன்னைத்தேடி வரமுடியுமா..?மாவீரர் தினத்தன்று கவலைகளைக்கொட்டி நான் வடிக்கும் கண்ணீரில்தானே என் மனமும் ஆறுதல் அடைந்திருந்தது.
காலம் காயங்கள் ஆற்றும் என்பார்கள்,ஆனால் என் வாழ்க்கையில் அனைத்தும் அப்படியே இருக்கின்றதே..?
இதுவும் கடந்து போகும் என்பார்கள்,ஆனால் எதுவும் மறந்து போகாது என்பதற்கு என் போராட்ட வாழ்வில் கிடைத்த மாவீரன் மேஜர் அகலினியனே சான்று,
பத்துவருடத்திற்கு முற்பட்ட என்போராட்ட வாழ்வை நினைத்துப்பார்க்கிறேன்,அவை அனைத்தும் அழியாத நினைவுகளாக.....
நானும் அகலினியனும் உக்கிர சண்டை நடந்துகொண்டிருந்த ஓர் பகுதி ஒன்றிலேயே சந்தித்திருந்தோம்.
அதுவும் எதிர்பாராத சந்திப்பே எமக்கிடையில் நடைபெற்றிருந்தது,நான் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த ஓர் பகுதிக்கு பொறுப்பாக இருந்தேன்,
எனது அணிகளை சீர்ப்படுத்தி பொய்சனில்(காப்பிடத்தில்) விட்டுவிட்டு எனது அணிக்கான உணவினை எடுப்பதற்கு பின்தளத்திற்கு சென்று திரும்பி வந்துகொண்டிருக்கும்போது காட்டு வளைவொன்றில் எதிர்பாராத விதமாக நாம் இருவரும் மோதிக்கொண்டோம்,
அவன் முகத்தை பார்த்தபோது ஏனோ தெரியவில்லை அவனிற்கும் எனக்கும் ஓர் நீண்ட பந்தம் இருப்பதுபோல ஓர் உணர்வு ஏற்பட்டது,
சுதாகரித்தூகொண்ட நாம் மன்னிக்கவேண்டும் என்ற ஒற்றை வார்த்தைகளோடுஅக்கணமே விடைபெற்றுக்கொண்டோம்,
எதிரியின் முன்னேறும் நடவடிக்கைகளால் களமுனை சூடுபிடித்திருந்தது,இராணுவத்திற்கும் எமக்குமான தாக்குதல்கள் உக்கிரமமாகவே இருந்தது,
எங்கும் வேட்டொலிகள்,துப்பாக்கி சத்தங்களால் களமுனையே அதிர்ந்துபோயிருந்தது,
பண்நாட்டு இராணுவத்தினரின் பங்களிப்போடு தொடுக்கப்பட்டபோர்,எமது போராளிகள் பலரை நாம் நாளாந்தம் இழந்தபடியும் காயங்களோடு களமுனையில் இருந்து அகற்றியபடியும் இருந்தோம்,
என்னோடு மோதிக்கொண்ட போர்வீரனை மீண்டும் ஓர்தடவை காணவேண்டும்,அவன் தொடர்பான தகவல்களை அறியவேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்தாலும் களச்சூழல் எனக்கு பலநாட்கள் வாய்ப்பைத்தரவில்லை,
ஆனாலும் என்றோ ஒருநாள் அவனை காண்பேன் அவனோடு பேசுவேன் என்ற எண்ணம் மட்டும் என் மனதில் இருந்தது.
சில நாட்கள் நகர்ந்தது,இராணுவம் வேகமாக முன் நகர்ந்தபடி இருந்தான்,எறிகணைகளாலே போர் நடைபெற்றபடி இருந்தது,
நானும் எனது பகுதி தளபதியின் கட்டளையோடு எனது அணியினை முன்நகர்த்தியிருந்தேன்,
நாம் நகர்ந்து செல்லும்போதுதான் தனது அணிகளோடு காத்திருந்தான் அந்தபோராளி,யாரை மீண்டும் ஒருதடவை பார்க்க மாட்டேன் என்று ஏங்கியபடி இருந்தேனோ, அவனே தன் அணிகளோடு சண்டைக்கு தயார் நிலையில் நின்றான்,
எக்கணமும் குண்டுபட்டு வீரமரணம் அடைந்துபோகலாம் என்ற நிலையே காணப்பட்டது,அவன் என்னோடு பேசமுனைவது புரிந்தது,
போர்க்களத்தில் வரும் அன்பின்நிலை என்பது இதுதானா..?பலமுறை முயற்சி செய்தும் பேசமுடியவில்லை,ஏனே என் எண்ணங்களை புரிந்துகொண்டவனாய் என்னை நோக்கிவந்தான்,அதற்குள் எனது கட்டளைத்தளபதி வந்துவிட தன்னை சுதாகரித்தவனாய் திரும்பிச்சென்று விட்டான்,
அவனது அணிகளோடு எமது அணியும் இணைக்கப்பட்டு அணிகள் பிரிக்கப்பட்டு முன்நகர்த்தப்பட்டது,
அவனது பெயரை எப்படியாவது அறிந்துவிட வேண்டும் என்று நினைத்தேன்,அதே சிந்தனை அவனிடமும் இருந்ததுபோல்,
கைக்குட்டை ஒன்றில் தனது பெயரினை எழுதி தனது அணிகளை நகர்த்தும்போது எனது அணி நின்ற காப்பிடத்தின்முன் போட்டுச்சென்றான்,
ஆவலோடு ஓடிச்சென்று எடுத்தேன்,மிக அழகாக அகலினியன் என்று எழுதப்பட்டிருந்தது,அவன் பெயரை அறிந்ததில் இருந்து இனம் புரியாத சந்தோசம் எனக்குள் குடிகொண்டது.
எனது பெயரினை எப்படி அவனிற்கு தெரியப்படுத்தபோகிறேன் என்று குழம்பி நின்றேன்,ஏனெனில் என்னிடம் கைக்குட்டை இருந்தபோதும் எழுதுவதற்கு என்னிடம் எதுவும் இருக்கவில்லை,
ஆனாலும் எனது பெயரை தெரியப்படுத்தியே ஆகவேண்டும் என்றிருந்தேன்,என் சகதோழி பாடினியிடம் பேனைவாங்கி கிடைத்த சந்தர்ப்பத்தில் கைக்குட்டையில் எனது பெயரினை விழியரசி என்று எழுதிவைத்திருந்தேன்.
ஆனால் கொடுப்பதற்கு சந்தர்ப்பம் அமையவில்லை.பலமுயற்சி செய்தேன்,காலையில் எழுதிய கைக்குட்டையை மாலை நேரமே கொடுப்பதற்கு ஓர் சிறிய சந்தர்ப்பம் கிடைத்தது,
எமது அணிகளாற்கான இரவு உணவினை என்னையே எடுத்துக்கொடுக்கும்படி கூறப்பட்டது,அவனது காப்பிடத்தில் உணவினை கொடுக்கும்போது அவனிடம் உணவோடு சேர்ந்து கைக்குட்டையையும் விட்டுவந்தேன்,
அவன் என் பெயரை பார்ப்பதும் புரிந்தது,என் பெயரை அவன் அறிந்தது பெரும் மகிழ்வாக இருந்தது,
மாலை 5-00 மணியளவில் திடீரென்று சண்டை மூண்டது.இராணுவம் நெருப்புத்தாக்குதலை தொடுத்தான்,எங்கும் புகைமண்டலம்,துப்பாக்கிகளில் இருந்து பறக்கும் தோட்டாக்களின் சத்தம் காதை அடைத்தபடி இருந்தது,
நாமும் எதிர்தாக்குதலை தொடங்கினோம்,ஆனாலும் அகலினியனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடிதென்று என்மனம் தவித்தபடி இருந்தது,என் மன நிலையில்தான் அவனும் எனக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென்று நினைத்துக்கொண்டு இருப்பான் என்று என்மனம் கூறியது,ஆனாலும் பாசத்திற்கு நாம் அடிமைப்பட்டுப்போகக் கூடாது,நாங்கள் போராளிகள்,எமக்கு எங்கள் கடமையே முக்கியம்.எமது களப்பணியை சிறப்பாக செய்யவேண்டும்,
பல்லாயிம் மாவீரர்கள் எம்மை நம்பி மடிந்துவிட்டார்கள்,அவர்கள் கனவை நாம்தான் நிறைவேற்ற வேண்டும்,அதன்பின்பே ஏனைய எமது தேவைகள் நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்,
இத்தாக்குதலில் என் அணியில் நின்ற போராளிகள் சிலர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்கள்,சிலர் காயங்களோடு களமுனையில் இருந்து பின்தளத்திற்கு அனுப்பப்பட்டார்கள்,
அதன்பின் இரு அணிகளிலும் இருந்து எஞ்சியவர்கள் ஒன்றாக்கப்பட்டோம்.அப்போதுகூட நாம் இருவரும் பேச எடுத்துக்கொண்ட முயற்சி தோற்றுப்போனது,மௌனமே வார்த்தைகளாகிப்போனது.எம் விழிகள் மட்டும் ஆயிரம் கதைபேசியது,
மறுநாள் காலையில் மீண்டும் அணி நகர்த்தப்பட்டது,இப்போது வேறோர் அணியும் இணைக்கப்பட்டு முன்நகர்ந்தோம்,நாம் சென்றுகொண்டிருக்கும்போதெ இராணுவம் குறுக்கறுத்து திடீர்த்தாக்குதல் நடத்தினான்,
நாம் நிலைகுலைந்து போனோம்,எங்கிருந்து தாக்குகிறான் எதிரி என்ற நிலையே தெரியாமல் போனது,பலர் விடுபட்டு போனார்கள்,பெரும்பாலானோர் இத்தாக்குதலில் வீரச்சாவடைந்தும் பாரிய காயங்களுடனும் கிடந்தார்கள்,
அகலினியனின் நிலையறிய என்மனம் துடித்தது, அகலினியன் நின்ற பகுதியைநோக்கி பக்கசூடு வழங்கியபடி ஓடிச்சென்றேன்,
அங்கும் பல போராளிகள் வீரச்சாவடைந்தும் காயங்களோடு கிடந்தார்கள்,காயங்களிற்கு தற்காலிக பில்கொம்றஸ்(குருதி தடுப்பணை)வைத்து கட்டிவிட்டு பின் மருத்துவபகுதி இருந்த இடத்திற்கு அனுப்பினோம்,
பெரிய காயத்தோடு கால் தொடைப்பகுதியோடு சிதறிய நிலையில் பெரும் குருதிப்பெருக்கோடு உடலெங்கும் செல் துண்டுகள் துளைத்த நிலையில் கிடந்த போராளி ஒருவனை கண்டேன்,ஓடிச்சென்று இன்னொரு களமருத்துவ போராளியும் நானும் சேர்ந்து தூக்கி எம் உடலோடு சாய்த்துக்கொண்டு துண்டாகித்தூங்கிக்கொண்டிருந்த கால்பகுதியை தொடையோடு சேர்த்து வெட்டிவேறாக்கினோம்,
காயம் கட்டமுடியவில்லை,அப்போராளி பெரும் குருதிப்பெருக்கில் உடலை அசைக்க முடியாமல் இருந்தான்,
தண்ணீர் தண்ணீர் என்று குருதிப்பெருக்கால் சோர்வாகி சத்தமின்றி கூறிக்கொண்டிருந்தவனின் முகத்தை பார்த்தேன்,
அக்கணம் வானமே இரண்டானதுபோல் இருந்தது,அகலினியனே அது,அவன் உயிர் அவன் வசம் இல்லாமல் போய்க்கொண்டிருப்பது புரிந்தது,
என் மனவானில் சிறகடித்து பறந்தவன்,என்னோடு பேசவேண்டும் என்று ஆசையோடு காத்திருந்தவன்,இன்று மரணத்தின் இறுதிதறுவாயில் இருந்தன்,
என் கண்களில் கண்ணீர் ஊற்றெடுத்தது,நான் அழுதால் என் சகதோழி என்னை ஏதும் நினைப்பாள் என்று எண்ணினேன்,அவளிற்கு என் நிலையை காட்டிக்கொடுக்க விரும்பாவிட்டாலும் ஊமையாய் என்மனம் அவனிற்காக அழுதது,
அவன் கழுத்தில் போட்டிருந்த நஞ்சுமாலையை(குப்பியை) கழற்றி எடுத்தேன்,அவனது உடலில் இருந்த குருதியின் பெரும்பகுதி வெறியேறிவிட்டிருந்தது,
மயக்க நிலைக்கு சென்றான்,அப்போதுதான் பார்த்தேன்.நான் எனது பெயர் எழுதிகொடுத்த கைக்குட்டை அவன் கைகளிற்குள் இருப்பதை
கடவுளே என்னால் என்ன செய்ய முடியும்..?என்னோடு பேசவேண்டும் என்று ஆசையோடு காத்திருந்தவன்,ஓர் வார்த்தை பேசக்கூட முடியாமல் என் கண்முன் உயிர்போகும் நிலையில் இருக்கிறானே,
அவன் தலையை நிமிர்த்தி என் கைகளிற்குள் தாங்கினேன்,என் பெயரினைச்சொல்லி நான் விழியரசி வந்திருக்கிறேன் என்னை ஒரு தடவை பாருங்கள் என்றுகூறி அவன் முகத்தை திருப்பினேன்.
என் பக்கம் திரும்பியவன் என் முகத்தைப் பார்த்தபடியே என் கைகளிற்குள் வீரகாவியம் ஆகிப்போனான்,
என் மனக்கூட்டிற்குள் வந்தவன்,இன்று காற்றோடு கலந்துவிட்டான்,நாங்கள் பலகதைகள் பேசத்துடித்தோம்,
ஆனால் தாய்நாட்டின் கடமையை கண்ணாக கொண்டபடியால் நாம் எம் ஆசைகளை துறந்து போராடினோம்,
எமக்குள் மலர்ந்த காதல் கைக்குட்டையோடே முடிந்துவிட்டது,என்னை நேசித்தவன் தாய்மண்ணே உயிரென மண்ணில் மடிந்துவிட்டான்,
அவன் கொண்ட தாய்மண் இலட்சியம் என்றும் தணியாது,அழிந்துபோகாது,
அகலினியனின் நினைவுகளோடு பத்து ஆண்டுகள் வாழ்ந்தேன்,திருமணம் வேண்டாம் என்றே காலத்தை கடத்தினேன்,
இன்று என் குடும்பத்தவர்கள் கூறுகிறார்கள்,நான் திருமணம் செய்யாது இருந்தால் தங்களை மற்றவர்கள் மதிக்கமாட்டார்களாம்,குடும்ப கௌரவம் கெட்டுப்போகுமாம் என்று. அதனால் ஏற்பாடு செய்த திருமணமே இது,
நாளை எனக்குத் திருமணம்,ஓர் மாவீரனை மனதில் சுமந்தபடி திருமண பந்தத்தில் இணையப்போகிறேன்,
அகலினியனை மறந்துவாழ என்னால் முடியாது,அவன் நினைவுகள் என்றும் என்மனதில் அழியாக் காவியமாக.......
பிரபாஅன்பு
-------------------
யாவும் கற்பனை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.