கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக சி. தவராசா முறைப்பாடு

மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா இந்த முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்.
குறித்த முறைப்பாடு தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் பிராந்திய பணிப்பாளர் த.கனகராஜ் தலைமையில் விசாரணை இடம்பெற்றது.
இந்த விசாரணைக்கு, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, மற்றும் முன்னாள் வட.மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
குறித்த விசாரணையின் முடிவில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட நிலையில் விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சி.தவராசா, “கடந்த சில தினங்களுக்கு முன்னர் நான் காரில் பயணித்த போது, திருநெல்வேலி பகுதியில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஆசனப்பட்டி அணியவில்லை என சிங்களத்தில் தண்டம் எழுதி தந்தார்கள்.
எனக்கு சிங்கள மொழி தெரியாதமையால் சிங்கள மொழியில் எழுதி இருந்தமையை வாசிக்க முடியவில்லை. அதனால் என் மொழியுரிமை மீறப்பட்டமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்தேன்.
எனது முறைப்பாட்டின் பிரகாரம் இன்றைய தினம் விசாரணைகள் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் சில இணக்கப்பாடுகள் எட்டப்பட்டது.“ என தெரிவித்தார்.
மேலும் தமிழ் மொழியில் எழுதி கொடுப்பது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததாகவும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.