பாடு நிலாவே











பாகம்    6
 எப்போதோ சாதனா கொடுத்த முகவரியைத் தேடிக்கண்டு பிடித்தபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவள் தந்த முகவரியில் மட்டுமன்றி அயல் காணிகளில் சனநடமாட்டம் மிகக்குறைவாகவே இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் சோகமாய் பார்த்துக்கொண்டனர். 

“இசை இப்ப என்னடா பண்றது?”
“அதாண்டா எனக்கும் யோசனையா இருக்கு” என்றபடி நண்பனைப் பார்த்தான். சற்று முன் ஆர்ப்பரித்த அவனது விழிகள் அமைதியாய் இருந்தது. முகமோ, மாலைக்கமலம் போல வாடிக்கிடந்தது. அகத்தின் விம்பம் முகத்தில் தெரிந்தது. 


“கடவுளே! இந்த விசயமே இவனை இப்பிடி ஆக்கிற்றே, ஒருவேளை சாதனா இறந்துவிட்டிருந்தால்----“ எண்ணிப்பார்க்கவே பயமாக இருந்தது, “ஆ ---கடவுளே, அப்பிடி ஒரு நிலைமை என் நண்பனுக்கு வேண்டாம்” மனதுருகி கடவுளை வேண்டிக்கொண்டான்.
“வாடா மச்சி யாரையாவது விசாரிச்சுப் பாக்கலாம்” எனக்கூறி நண்பனின் கைபற்றி அழைத்துச் சென்றான் இசையாளன். இருவரும் சற்றுத்தூரம் சென்று ஆள்நடமாட்டம் தெரிந்த ஒரு வீட்டின் முன் நின்றனர்.
வீட்டின் முன்னால் பற்றையாய் கிடந்த புல்லுச்செடிகளையும் முள்ளுச் செடிகளையும் மண்வெட்டியால் அகற்றிக்கொண்டிருந்த முதிய பெண்மணி அவர்களின் கண்ணில் தென்பட்டார். திரும்பிப் பார்த்து இவர்களைக் கண்டவர், படலை திறந்து வெளியே வந்தார்.
சட்டென்று, “வணக்கம்” எனக்கரம் கூப்பினான் காங்கேசன்.
“வணக்கம், என்னப்பா வேணும், யாரப்பா நீங்கள்?” என்றபடியே வந்தவரிடம்,
“அது நாங்க ஒரு குடும்பத்தை தேடி வந்திருக்கோம், ஆனா அந்த இடத்தில அவங்களைக் காணல்ல, அதான்?” என இழுத்தான் இசையாளன்.
“ஓம் தம்பி, நிறைய குடும்பங்கள் தொலைஞ்சுபோச்சு தான்,” சொல்லும்போதே கண்கள் கலங்கி குரல் கரகரத்தது அந்த முதிய பெண்மணிக்கு. தொண்டையைச் செருமி தன்னை நிதானித்துக்கொண்டவர்,
“ நீங்க வேற ஊரா தம்பி?” என்றார்.
“ஆமாம்மா – நான் இந்தியாவில இருந்து வந்திருக்கன், இவன் என்னோட நண்பன் இசையாளன்” என்றான்.
“அது சரி, யாரைத்தேடி வந்தீங்க?” என்றவரிடம்
“அம்மா, அது ஈழவேந்தன்ன்னு----அவரோட பொண்ணு சாதனா, அவ ஒரு வைத்தியர்” 


“ஓ---அவங்களா, ரெண்டு வருசத்துக்கு முன்னமே அவங்க வேற ஊருக்குப் போயிட்டாங்களே, அதுக்குப்பிறகு முகாமில கூட நான் அவங்களைக் காணல”
குருதியிழந்தது போல வெளுத்துப்போனது காங்கேசனின் முகம். கண்களுக்குள் இலேசாக நீர் கசிவு கண்டது, மறுபுறம் திரும்பி மறைத்துக்கொண்டான். அவனைப் பார்க்க இசையாளனுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.
“அவங்க சொந்த்காரங்க யாரையாவது உங்களுக்குத்தெரியுமா?” என்றான் இசையாளன்.
“ஓம் தம்பி, அவங்கட சொந்தக்காரர் ஒருத்தர் அடுத்த தெருவில இருக்கிறார், சாதனாவோட மாமா, அவரிட்ட கேட்டுப்பாத்தா ஏதாவது தகவல் கிடைக்கும்” என்றார். 


சட்டென்று திரும்பினான் காங்கேசன். வீட்டு முகவரியைக் குறித்துக் கொண்டான் இசையாளன்.
“சரி அம்மா, நாங்க வர்றோம்” அவசரமாய் விரைந்தனர் இருவரும்.
இருக்கையில் அமர்ந்துகொண்ட காங்கேசனுக்கோ மனம் இரைந்து அழுதது.
‘சாதனா, உனக்கு மட்டும் ஏதாவது ஆயிருந்தா என்னால தாங்கவேமுடியாது, என்னை ஏமாத்திப்போடாத, என்னோட பதினைஞ்சு வருச தவத்தை என்னால மாத்திக்க முடியாது, நீயில்லாத உலகத்தை கற்பனை பண்ணக்கூட முடியலடி” 


ஓலமிட்டமனதை அடக்கும் வழிதெரியாது கண்களைமூடி சாய்ந்துகொண்டான்.


தொடரும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.