கட்டுமானத் திட்டங்கள்: மோடி சூசகம்!
கட்டுமானத் திட்டங்களை தமது அரசு நிறைவேற்றி முடிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 18ஆம் தேதி புனேவில் மூன்றாவது மெட்ரோ பாதை அமைக்கும் திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மெட்ரோ வழித் தடங்களை உருவாக்கத் தொடங்கியது அடல் பிகாரி வாஜ்பாய் அரசுதான். கிராமங்களிலும் நகரங்களிலும் கட்டுமான வசதிகளைச் சிறப்பாக மாற்றியமைத்தது வாஜ்பாய் ஜீதான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தொடங்கிய பணியை நாங்கள் மிக வேகமாகச் செயல்படுத்தி வருகிறோம். ஒருவேளை வாஜ்பாய்க்கு இன்னும் கூடுதல் காலம் (ஆட்சி) கிடைத்திருந்தால் மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைத்திருப்பார் என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.
எங்களது அரசைப் பொறுத்தவரையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், எளிதாகத் தொழில் தொடங்கும் அம்சங்களையும் மேம்படுத்துவதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். கடந்த நான்கு ஆண்டுகளில் எங்களது ஆட்சியின் கீழ் எங்களது அனைத்து மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் உள்கட்டுமானமே மூலமாக இருந்துள்ளது. பல்வேறு நகரங்களை எங்களது அரசு மெட்ரோ நகரங்களாக மேம்படுத்தியுள்ளது. 300 கிலோ மீட்டர் தொலைவிலான மெட்ரோ வழித்தடங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் 200 கிலோ மீட்டர் தொலைவிலான திட்டங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. தற்போது 500 கிலோ மீட்டருக்கும் மேலான மெட்ரோ நெட்வொர்க் செயல்பாட்டில் உள்ளது” என்றார்.
வாஜ்பாய் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் குறித்துப் பேசிய மோடி, தனது ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி முடிக்கத் தனக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற தொனியில்தான் அவரது பேச்சு இருந்தது.

.jpeg
)





கருத்துகள் இல்லை