விண்ணில் பாய்ந்தது ஜிசாட்– 7ஏ!

விமானப் படை தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில்
உருவாக்கப்பட்ட ஜிசாட்– 7ஏ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ராணுவ நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், இந்தியாவில் தகவல் தொடர்புக்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது செயற்கைக்கோள் ஜிசாட்-7ஏ. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2ஆவது ஏவுதளத்தில் இருந்து, இன்று (டிசம்பர் 19) மாலை 4.10 மணிக்கு ஜிஎஸ்எல்வி - எப்11 விண்கலம் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. 19 நிமிடங்களுக்குப் பிறகு, புவி சுற்றுவட்டப் பாதையில் ஜிசாட்- 7ஏ இணைந்தது.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன், கடந்த 35 நாட்களில் மூன்று விண்கலங்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“ஜிஎஸ்எல்வி - எப்11 விண்கலத்தின் இரண்டாம் நிலை எரிபொருளின் அளவு 35.5 டன்னில் இருந்து 40 டன்னாக உயர்த்தப்பட்டது. கிரையோஜெனிக் என்ஜின் எரிபொருளானது 12 டன்னில் இருந்து 15 டன்னாக அதிகரிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் செயற்கைக்கோளின் திறனை மேம்படுத்தும் வகையில் நாங்கள் கிரிகோரியன் ஆண்டெனாவையும் பயன்படுத்தியுள்ளோம்” என்று அவர் கூறினார்.
இன்னும் சில நாட்களில் இறுதி புவி சுற்றுவட்டப்பாதையை அடையும் ஜிசாட்- 7ஏ. அதன்பின்னர், அந்த செயற்கைக்கோளின் பணிகள் குறித்த சோதனை தொடங்கப்படும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.