சமூக விடியலுக்காக ‘வானம்’: பா.இரஞ்சித்

திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும்
மேற்கொண்டு வருகிறார் பா.இரஞ்சித். நீலம் பண்பாட்டு மையம் மூலம் ஆவணப்படங்களை உருவாக்குதல், நாடகங்களை அரங்கேற்றுதல், கூகை திரைப்பட இயக்கம் மூலம் உதவி இயக்குநர்கள், படைப்பாளிகளுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்தல், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வலிகளைப் பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் திரைப்படங்களை தயாரித்தல், கேஸ்ட்லஸ் கலெக்டிவ் மூலம் இசைக் கலைஞர்களை ஊக்குவித்தல் எனப் பல தொடர் செயல்பாடுகளாலேயே பா.இரஞ்சித் தனித்து தெரிகிறார். இதனாலே அவரது கருத்துகள் திரைத் துறை கடந்து அரசியல் தளத்திலும் விவாதப்பொருளாகிறது.
தற்போது வரும் டிசம்பர் 29-31வரை மூன்று நாள்கள் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைத் திருவிழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ புனித எப்பாஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று பா.இரஞ்சித் கலந்து கொண்டு பேசினார்.
“கலை மக்களுக்கானது என்று மாவோ சொல்வார், அப்படியானால் யார் மக்கள் என்ற ஒரு கேள்வி எழுகிறது. சிறுவயதில் நான் பார்த்த எத்தனையோ கலைகள் இன்று கிட்டத்தட்ட அழிந்துவிட்டன. மேடை ஏற்றப்படாத பல கலைகளைப்பற்றி நான் யோசிக்கும்போது அதெல்லாம் கலைகள் இல்லையா… என்ற ஒரு கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருந்தது. அப்படி நிராகரிக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட, மேடை ஏற்றப்படாத கலைகளை மேடையேற்ற ஒரு விழா நடத்தவேண்டும் என்று நினைத்தோம். அதன் தொடர்ச்சியாக நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பில் இந்தக் கலைவிழாவை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்தக் கலைவிழா யாருக்கும் போட்டியாக நடத்தப்படும் விழா என்று நினைத்துவிடவேண்டாம். ஒற்றுமை தான் முக்கியம். கலைவழியே அதைச் சாத்தியப்படுத்தவே இந்த விழாவை நடத்துகிறோம்.
விழாவில் பறையிசை, நாடகங்கள், குழந்தைகளுக்கான கதை சொல்லல் நிகழ்வுகள், குழந்தைகளுக்கான மற்றும் இளைய தலைமுறைக்கான பயிலரங்கங்கள், பல்வேறு இசைப்பின்னணி கொண்ட பாடல்கள், அனைவரும் பங்கேற்று பாடும் தெருக்குரல், ஒப்பாரி, சிலம்பாட்டம், புத்தர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாடகம், ஆணவக்கொலையை கருப்பொருளாகக் கொண்ட நாட்டிய நிகழ்வு, மதுரை வீரன் கதை நாடகம், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைகளைப்பேசும் புத்தகங்களைக்கொண்ட மிகப்பெரிய லைப்ரரி, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் முதல் சினிமா சாராத இன்டிபென்டட் இசை ஆல்பம் “மகிழ்ச்சி” வெளியீடு, சமூக சிந்தனையுடன் கூடிய கவிதைகள், புத்தகங்கள் வெளியீடு இப்படி இன்னும் பல நிகழ்வுகளுடன் வானம் கலைத்திருவிழா நடக்க இருக்கிறது.
கலைகளின் சமூகத்தில் விவாதங்களை ஏற்படுத்தி, அந்த விவாதங்களின் வழியே சமத்துவத்தையும் சமூக நீதியையும் முன்னெடுக்க வேண்டும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அதைக்கொண்டு சேர்க்க வேண்டும் என்பது தான் இந்த வானம் கலைவிழாவின் முக்கிய நோக்கம். டிசம்பர் மாதத்தில் இதை நடத்த மிக முக்கியமான காரணம், இந்த வருடத்தின் கடைசி இரவு விடியும் போது சமூக நீதிக்கான விடியலாக அது இருக்கட்டும் என்று நினைத்தது தான் ” என்று கூறினார் இயக்குநர் பா.இரஞ்சித்.
பா.இரஞ்சித் மீது பொதுவாக வைக்கப்படும் விமர்சனமாக அவர் அம்பேத்கர் பற்றி பேசும் அளவுக்குப் பெரியார் குறித்து பேசுவதில்லை என்று கூறப்படுவது உண்டு. இந்தக் கேள்வியை பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “பெரியாரைப் பற்றி நான் பல முறை பேசியுள்ளேன். தொடர்ந்து பேசிவருகிறேன். இந்த வானம் கலை திருவிழாவில், அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ் நூல்களைத் திரட்டி, 3 நாட்களும் கண்காட்சிக்கு வைக்க உள்ளேன். ஐந்து நாள்கள் இந்த நிகழ்வை நடத்தத் திட்டமிட்டேன். ஆனால் சில நெருக்கடிகளால் நடத்தமுடியவில்லை. அடுத்த ஆண்டிலிருந்து ஐந்து நாள்கள் இந்த நிகழ்வு நடைபெறும். அதே போல் அடுத்த ஆண்டு திரைப்பட விழா ஒன்றையும் இதோடு சேர்த்து நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்” என்று கூறினார்.
பெரியார் குத்து பாடலுக்காக சிம்புவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.