பொன்சேகா, பாலிதவிற்கு அமைச்சு பதவி – அமைச்சர் உறுதி!

சரத் பொன்சேகா மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இன்னும் அமைச்சின் பதவிகளுக்காக பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


பொன்சேகா மற்றும் ரங்கே பண்டார ஆகியோரிடமும் சில பிரச்சினைகள் இருந்ததாகவும் இதன் காரணமாகவே அவர்கள் இன்று நியமிக்கப்படவில்லை என்றும் கூறினார்.

அமைச்சரவை பதவி பிரமாணத்தை அடுத்து அலரிமாளிகையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சரத் பொன்சேகாவுக்கு அமைச்சுப்பதவி வழங்குவது தொடர்பில் சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, அவர் பீல்ட் மார்ஷல் என்பதால், வேறு பதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

அதேநேரம், அவர் முன்னாள் இராணுவ வீரராகவும் தான் கருதப்படுகிறார். முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கு ஏனையப் பதவிகளை பொறுப்பேற்பதில், எந்தவொரு சட்ட சில்லலும் இல்லை. இவ்வாறு இந்த விடயத்தில் ஒரு பிரச்சினை இருந்து வருகிறது.

அத்தோடு பொன்சேகா மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோரிடமும் சில பிரச்சினைகள் இருக்கின்றது இதன் காரணமாகவே அவர்கள் இன்று நியமிக்கப்படவில்லை.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். விரைவில் இவர்கள் இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

மேலும், சுதந்திரக் கட்சியிலிருந்தும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்துக் கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனதான் தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

எவ்வாறாயினும், இந்த அனைத்துப் பிரச்சினைகளும் இந்த நடப்பாண்டுக்குள்ளேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டிய நிலையிலேயே அனைவரும் இருக்கிறோம்.” என கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.