ஸ்டெர்லைட்: வேதாந்தா நிறுவனத்துக்குத் தடை!

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, போராட்டக் குழுவைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவை  (டிசம்பர் 21) விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அப்போது “தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பே வேதாந்தா நிறுவனத்துக்கு தீர்ப்பு நகல் கிடைத்தது எப்படி? அது மட்டுமல்லாமல், அது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது” என்று அதில் கூறப்பட்டிருந்தது. தீர்ப்பாயம் வழங்குவதற்கு முன்பே வெளியான தீர்ப்பு செல்லாது என்ற வழிகாட்டுதல் உள்ளதாகத் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வைகோ வாதிட்டார்.
இதையடுத்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிடபட்டது. இது குறித்து வேதாந்தா நிறுவனம் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
“ஸ்டெர்லைட் வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும். ஆலையைத் திறக்கும் நடவடிக்கையை வேதாந்தா நிறுவனம் மேற்கொள்ளக் கூடாது” என்று உத்தரவிட்ட மதுரைக் கிளை, இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

No comments

Powered by Blogger.