சீதக்காதி: கலையின் வலிமை!

மதரா

ஊடகங்கள் மாறினாலும் காலம்jமாறினாலும் கலையும் கலைஞனும் என்றும் சாவதில்லை என்பதை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது சீதக்காதி. பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் சேதுபதியின் வித்தியாசமான தோற்றமும் பாலாஜி தரணிதரனின் முந்தைய படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படம் பெற்ற வரவேற்பும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. இரண்டுக்கும் நியாயம் செய்திருக்கிறது சீதக்காதி.

சிறு வயது முதலே நாடகத்தில் நடித்து வரும் அய்யா ஆதிமூலத்துக்கு, நாடகம் பார்க்க வரும் கூட்டம் குறைந்து போனது பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. பேரனின் மருத்துவச் செலவுக்கு பணம் திரட்டமுடியாமல் போகும் வலியும் அதில் சேர்ந்துகொள்கிறது. தான் உயிராய் நேசிக்கும் நடிப்புக் கலையில் ஈடுபட்டிருக்கும் போதே அவர் உயிர் போகிறது. என்றைக்கும் மக்கள் முன் நடிக்கவே விரும்புகிறேன் என்ற ஐயாவின் உடல் எரிந்து காற்றில் கலக்கிறது. இறந்த பின்னும் ஐயா தனது கலை மேல் உள்ள காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறார் என்று காமெடி கலந்து சொல்கிறார் இயக்குநர்.
நாடகத்தின் சிறப்பே ரத்தமும் சதையுமான கலைஞன் கண் முன்னே அந்த கதாபாத்திரமாக உருமாறி வாழ்வதை தரிசிக்க முடியும் என்பதுதான். திரையரங்கில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் அந்த உணர்வைக் கடத்தும் விதமாக ஒளரங்கசிப் நாடகத்தை ஒரே ஷாட்டில் முழுக் காட்சியையும் காட்சிப்படுத்தியிருப்பது புதிய அனுபவத்தைக் கொடுக்கிறது. அதே நேரத்தில் அதை சினிமா எனும் ஊடகம் வாயிலாகச் சொல்கிறோம் என்ற புரிதல் இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் இருக்கிறது. காட்சி ஏற்படுத்தும் மனநிலைக்கு ஏற்ப மாறும் கோணங்களும், ஒளியமைப்பும் அதைத் தருகின்றன.
துன்பியல் நாடகத்தின் சாயலில் படம் தொடங்குகிறது. நாடகக் காட்சிகளும் அதைத் தொடர்ந்து வரும் ஐயாவின் தனிப்பட்ட குடும்பச் சூழலும் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. நாடகச் சூழல்களும் ஐயாவின் வாழ்க்கைச் சூழலும் ஒன்றுடன் ஒன்று இயைந்துபோவதை உறுத்தாத வண்ணம் சித்தரித்துள்ளார் இயக்குநர். பேரனின் மருத்துவச் செலவுக்குப் பணம் நான் தயார் செய்கிறேன் என்று பொருள்படும்படியாக நாடகத்தில் அவர் பேசும் வசனம் கதாநாயகனாக ஐயா எதோ செய்யப் போகிறார் என்று உணரவைக்கும் அந்தத் தருணத்தில் மரணமுற்று கீழே சாய்கிறார். ஆனால், அதன் பின்னர் வரும் காட்சிகள் அவல நகைச்சுவை பாணிக்கு நகர்ந்து பார்வையாளர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கின்றன. அந்த இடங்களில் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானோம் பாலாஜி தரணை பார்க்க முடிகிறது. அதில் ‘..ப்பா’ என்ற ஒற்றை வசனம் சிரிப்பை வரவைத்தால் இந்த படத்தில் ‘..ம்மா’ என்ற ஒரு வசனம் சிரிக்கவைக்கிறது.
நாற்பது நிமிடங்களில் கதாநாயகன் திரையை விட்டு மறைந்து சென்ற பின்னரும் அவரது இருப்பை இறுதிவரை உணரமுடிகிறது. ஐயா ஆன்மா நடிகர்களுக்குள் புகுந்து நடிக்கிறது என்ற கற்பனையைத் தனது கதாபாத்திரங்களை மட்டுமல்லாமல் பார்வையாளர்களையும் நம்ப வைத்து அவ்வளவு நேரம் இருந்த யதார்த்த உலகை அவரே அழித்து புதிய உலகை உருவாக்குகிறார். தேர்ந்துகொண்ட கதைக்களத்துக்கான தர்க்கங்கள் திரைக்கதையில் பொருந்தியிருப்பதால் அந்தக் கற்பனை உலகின் நியாய தர்மங்களைப் பார்வையாளர்களும் ஏற்றுக்கொண்டு ஒன்ற முடிகிறது.
அதுவரை ஐயா பெற்றிராத வரவேற்பை அவரது ஆன்மா பெறத் தொடங்குகிறது. கட் அவுட், பாலாபிஷேகம், ரசிகர் மன்றம் என நீளும் அவரது புகழ் அடுத்த முதல்வர் என்ற நிலைக்கு மட்டும் செல்லவில்லை. மேற்பரப்பில் இருக்கும் கலகப்பைத் தாண்டி, ‘ட்ரென்ட்’ என்னும் சுழலில் சிக்கியிருக்கும் தமிழ் சினிமாவின் போக்கு, இங்கு நிலவும் நடிப்புப் பஞ்சம், வணிக சமரசங்கள் ஆகியவற்றை விமர்சனம் செய்யும் இழையும் இந்தக் காட்சிகளின் அடியே ஓடுகிறது.
ஐயா ஆன்மாவால் நடிப்பதற்கும் ஆன்மா போன பின்னர் நடிப்பதற்குமான வேறுபாட்டை ராஜ்குமாரும் சுனிலும் அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் காட்சிகளை இயக்குநர் உருவகப்படுத்தியுள்ள விதமும் பாராட்டத்தக்கது. நகைச்சுவையும் நுட்பமும் கூடிய விதத்தில் இக்காட்சிகள் அமைந்துள்ளன.
மௌலிக்கு இது முக்கியமான படம். அவருடைய முக பாவங்களின் வலிமையில் அவரது அனுபவம் தெரிகிறது. பெரிதாக வசனம் ஏதும் இல்லாவிடினும் அர்ச்சனா முக பாவங்களாலேயே கவர்கிறார். அவல நகைச்சுவைக்கான நடிப்பை பகவதிப் பெருமாளிடம் எப்போதும் பார்க்கலாம். அவருக்கேற்ற களத்தை பாலாஜி தரணிதரன் இந்தப் படத்திலும் அமைத்துக்கொடுத்துள்ளார். இயக்குநராக வரும் பகவதி, நடிகர் சொதப்பும்போது காட்டும் எதிர்வினைகள் அட்டகாசம்.
படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சியை உருவாக்கப்படும் சிரமத்தை காமெடியுடன் கடத்தியிருக்கும் இயக்குநர் தமிழ் சினிமாவின் அபத்தமான பல காட்சிகளை விமர்சிக்கவும் செய்கிறார். பாத்ரூம் டப்பில் குளிக்கும் கதாநாயகியை மட்டுமே காட்டிவந்த தமிழ் சினிமா சுனில் குளிப்பதையும் டவலுடன் நனைந்தபடி வரும் போது அவரது கால்களுக்கு வைக்கும் குளோஸ் அப் ஷாட்டுகளும், அவரது உதவியாளருடன் தடுமாறிப் படுக்கையில் சரிவதையும் எள்ளலுடன் காட்சிப்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் வரும் சோகமான காட்சிகளில் இம்சைப்படுத்தும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா எள்ளல் காட்சிகளில் துள்ள வைக்கிறார்.
“ஐயா 21, 22 தேதியில ஃப்ரீயா இல்ல அன்னைக்கு அவருக்கு நாடகம் இருக்குது”, “நாடகம் நடக்குற இடத்துக்கு போ அங்க யார் நல்லா நடிச்சாலும் என்ட்ட சொல்லு.. நாக்கப் புடுங்குற மாதிரி நான் அவன்ட்ட நாலு வார்த்தை கேக்கனும்” என்பது போன்ற வசனங்கள் இங்கே படிப்பதற்கு சாதரணமாகத் தோன்றலாம். ஆனால் படத்தில் அது வரும் இடம் ரசிகர்களை வாய்விட்டுச் சிரிக்கவைக்கின்றன.
நாடகத்தைக் காட்சிபடுத்தும்போது வரும் நீளமான காட்சிகள் உறுத்தவில்லை என்று மேலே குறிப்பிட்டிருந்தோம். ஆனால் நகைச்சுவைக்கு மாறிய பின்னரும் அது தொடர்வது பொறுமையைச் சோதிக்கிறது. சுனில் சிறப்பான பங்களிப்பை செலுத்தியிருந்தாலும் இரண்டாம் பாதி முழுக்க அவரே வருவது போன்ற உணர்வு படத்தின் நகர்வுக்கு அதிகம் துணைபுரியவில்லை.
ஆன்மா இருக்கிறதா இல்லையா, கலையை ஆன்மாவோடு இணைக்க முடியுமா என்ற தர்க்கங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால் நன்றாக ரசித்து சிரித்துவிட்டு வரலாம். கலையின் மீதான நிஜமான ஈடுபாட்டின் வலிமையை அதீதக் கற்பனையும் அவல நகைச்சுவையும் கலந்து சித்தரித்திருக்கும் சீதக்காதி அந்த வகையில் முக்கியமான படம்.

No comments

Powered by Blogger.