மின்னலில் வருகிறதாம் ரஜினி டிவி!

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்துள்ள நிலையில், ரஜினி பெயரில் விரைவில் டிவி ஒன்று தொடங்கப்படவுள்ளது.

சென்னையிலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பல கட்டங்களாக ரசிகர்களைச் சந்தித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி, அரசியலில் ஈடுபடப்போவதாகவும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்தார். கடந்த ஒரு வருடமாக ரஜினி மக்கள் மன்றத்தைப் பலப்படுத்தி தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கும் பணிகள் நடைபெற்றுவந்தன. ரஜினி தனது பிறந்தநாளில் கட்சி ஆரம்பித்துவிடுவார் என்று தகவல் வெளியான நிலையில், அதை ரஜினிகாந்த் மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் தனது பெயரில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு ஆட்சேபம் இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். வணிக இலச்சினை பதிவு மையத்தின் பதிவாளருக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில், “தொலைக்காட்சி ஆரம்பிப்பதற்காக சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த வி.எம்.சுதாகர் என்பவரின் பெயரில் ‘சூப்பர் ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி’ ஆகிய பெயர்களை சொல்யூபில்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்தின் வர்த்தக முத்திரை வழக்கறிஞர் C.பிரகாஷ் பதிவு செய்திருக்கிறார்.
டிவியில் என்னுடைய பெயர் மற்றும் புகைப்படத்தை லோகோவிலும், லேபிளிலும் பயன்படுத்துவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இந்த விண்ணப்பத்தை அடுத்த கட்டத்துக்குப் பரிசீலிக்கலாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். ஆனால், இந்தக் கடிதம் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. மேலும், தேதி குறிப்பிடப்படாமலும், ரஜினி மக்கள் மன்றத்தின் சீல் வைக்கப்படாமலும் வெளியாகியுள்ளது. வி.எம்.சுதாகர் ரஜினி மக்கள் மன்றத்தில் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.