இந்தியப் பயிற்சியாளர்: ஐபிஎல் பறித்த வாய்ப்பு!

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் டபிள்யூ.வி. ராமன்
தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முழு முதல் காரணம் ஐபிஎல் போட்டிதான்.
கபில் தேவ், அன்ஷுமன் கேக்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய குழு ராமனைப் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. அவர்களிடம் கொடுக்கப்பட்ட பட்டியலில் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் கேரி கிர்ஸ்டன், ராமன், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்வதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தவர் கேரி கிர்ஸ்டன். அவரைத் தாண்டி ராமனை எந்தக் காரணத்தால் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி, இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளரின் பெயர் அறிவிக்கப்பட்டதுமே எழுந்தது.
உச்ச நீதிமன்றம் நியமித்த டயானா எதுல்ஜி, வினோத் ராய் ஆகியோர் அடங்கிய நிர்வாகக் குழுவின் மேற்பார்வையிலேயே பயிற்சியாளர் தேர்வு நடைபெற்றிருக்கிறது.
கேரி கிர்ஸ்டன், ராமன், வெங்கடேஷ் பிரசாத் என்ற வரிசையில்தான் கபில் தேவ் அடங்கிய குழுவிடம் பயிற்சியாளர்கள் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், கேரி கிர்ஸ்டன் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுவருகிறார். எனவே, ஐபிஎல் அணிக்கு வேலை செய்யும் கேரி, அதனாலேயே இந்தியப் பெண்கள் அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட இயலாத நிலை ஏற்பட்டது. அந்தப் பதவியைக் கைவிட கேரி தயாராக இல்லாததாலும், இன்னொரு அணிக்குப் பயிற்சியாளராக இருப்பவரை இந்திய தேசிய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்க ஐசிசி சட்டத்தின்படி வாய்ப்பில்லை என்பதாலும் அவருக்கு அடுத்தபடியாக இருந்த ராமன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
1992ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், தென்னாப்பிரிக்காவில் முதல் சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றவரான ராமன், ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு, பெங்கால் அணிகளின் பயிற்சியாளராகச் சிறப்பான முறையில் செயல்பட்டவர்.

No comments

Powered by Blogger.