5 ரூபாய் டாக்டர்: மோடி புகழஞ்சலி

சென்னை மக்களால் 5 ரூபாய் டாக்டர் என்றழைக்கப்பட்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் ஒரு நாயகன் என்று
புகழஞ்சலி செலுத்தியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
கல்பாக்கம் கொடைப்பட்டினம் கிராமத்தில் பிறந்தவர் ஜெயச்சந்திரன். 1972ஆம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில், இவர் மருத்துவம் பார்க்கத் தொடங்கினார். ஆரம்பத்தில் தன்னை நாடி வரும் நோயாளிகளிடம் இரண்டு ரூபாய் மருத்துவக் கட்டணமாகப் பெற்றார். மரணமடைவதற்குச் சில மாதங்கள் முன்பாக, அவர் 5 ரூபாய் கட்டணம் வாங்கினார். இதனால், இப்பகுதியில் அவரை ‘5 ரூபாய் டாக்டர்’ என்றே மக்கள் அழைத்தனர். தொடர்ந்து மூன்று தலைமுறைகளுக்கு மேலாக, இவரிடம் வைத்தியம் பார்த்து வந்தவர்களும் உண்டு. பணம் இல்லை என்று சொல்பவருக்கும் இவர் சிகிச்சை அளித்து வந்துள்ளார். இரவில் எத்தனை மணியானாலும், அவசர சிகிச்சைகளுக்காக இவரைத் தேடிச் சென்றுள்ளனர் மக்கள்.
உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த ஜெயச்சந்திரன், நேற்று முன்தினம் (டிசம்பர் 19) காலமானார். நேற்று வண்ணாரப்பேட்டையிலுள்ள அவரது வீட்டுக்குப் பலரும் வந்து அஞ்சலி செலுத்தினர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக இளைஞர் அணிச் செயலர் அன்புமணி உள்ளிட்ட பல தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலை நடந்த ஜெயச்சந்திரன் இறுதி ஊர்வலத்திலும் பெருமளவில் மக்கள் கலந்துகொண்டதால், வடசென்னை ஸ்தம்பித்தது.
மருத்துவர் ஜெயச்சந்திரன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவரைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. “சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ்.ஜெயச்சந்திரன் ஒரு நாயகன். மற்றவர்களின் நலன்களுக்காகவே முழுக்க அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.