நெல்லை இளம்பெண் கொலை: வாலிபர் கைது!

திருநெல்வேலி அருகேயுள்ள மூலைக்கரைப்பட்டி கெமிக்கல் நிறுவனக் கட்டடமொன்றில் இளம்பெண்
கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், அந்த பெண்ணின் காதலரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மதார் மைதீன். இவரது மகள் ஆஷிகா பர்வீன், பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கம்ப்யூட்டர் பயிற்சிக்குச் சென்று வந்தார். அப்போது மேலச்செவலை அடுத்த முருகன் மகன் சுந்தர்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இவர் ஜேசிபி எந்திரம் இயக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். ஒருகட்டத்திற்குப் பிறகு, சுந்தர்ராஜ், ஆஷிகா பர்வீன் இருவரும் காதலிக்கத் தொடங்கினர். இவர்களது காதலுக்கு பர்வீன் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக பர்வீனுக்குத் திருமணம் செய்துவைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 20) வழக்கம்போல கம்ப்யூட்டர் வகுப்புக்குச் சென்றார் பர்வீன். வழக்கமாக, அவர் மதியம் வீடு திரும்புவார். நேற்று அவர் வீடு திரும்ப தாமதம் ஆனது. இதனால், பர்வீனிடம் அவரது தாயார் செல்போனில் பேசினார். அப்போது, நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் நிற்பதாகவும், சுந்தர்ராஜிடம் சில புகைப்படங்களைத் திருப்பித் தருவதற்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் பர்வீன். மாலையிலும் வீடு திரும்பாததால் அச்சமடைந்தனர் அவரது பெற்றோர். ஆஷிகா பர்வீன் செல்போனைத் தொடர்புகொண்டபோது, ‘ரிங்’ ஆகிக் கொண்டே இருந்தது. இதையடுத்து, மதார் மைதீன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
அதேநேரத்தில் மூலக்கரைப்பட்டி அருகே பெருமாள் நகர் – சேரகுளம் செல்லும் சாலையிலுள்ள கெமிக்கல் நிறுவன வளாகத்தில் இளம்பெண் ஒருவர் பிணமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆய்வாளர் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவரது கைகள் பின்புறமாகக் கட்டப்பட்டு இருந்தது. பிரேதப் பரிசோதனைக்காக, அந்த சடலத்தை திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் போலீசார்.
சடலத்தின் அருகே கிடந்த செல்போனை ஆராய்ந்து பார்த்ததில், கொலையானது ஆஷிகா பர்வீன் என்பது உறுதி செய்யப்பட்டது. சுந்தர்ராஜுடன் செல்போனில் பேசியதும், இருவரும் ஒன்றாக அந்த இடத்துக்கு வந்ததும் தெரிய வந்தது. சுந்தர்ராஜின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருக்கவே, அவரது உறவினர்கள் வீடுகளில் தேடினர் போலீசார்.
உறவினர் ஒருவரது வீட்டில் பதுங்கியிருந்த சுந்தர்ராஜை, இன்று மூலக்கரைப்பட்டி காவல்நிலையத்தில் அவரது உறவினர்கள் சிலர் ஒப்படைத்தனர். “பர்வீனை ஆறு மாத காலமாகக் காதலித்து வந்தேன். அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து, வேறு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இதற்கு பர்வீனும் சம்மதித்தார். காதலித்தபோது இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை என்னிடம் இருந்து பெற முயன்றார். அவரை அழைத்துக்கொண்டு, மூலக்கரைப்பட்டி பகுதிக்குச் சென்றேன். ‘என்னை காதலித்துவிட்டு வேறொருவரை திருமணம் செய்ய சம்மதிக்கலாமா?’ என்று சண்டையிட்டேன். ஆனாலும், அவர் புகைப்படங்களைப் பெறுவதிலேயே குறியாக இருந்தார். இதனால் அவரது கைகளைக் கட்டி, கீழே தள்ளிக் கழுத்தை அறுத்துக் கொலை செய்தேன்” என்று போலீசாரிடம் சுந்தர்ராஜ் வாக்குமூலம் அளித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கொலையில் மேலும் சிலருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மூலக்கரைப்பட்டி போலீசார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இந்த வழக்கு குறித்து மேலும் சில தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.