ஆவின் ஊழல்: சகாயம் ஐ.ஏ.எஸ்., விசாரிக்க வேண்டும்!

இரவு பகலாக ஆய்வு செய்து கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்த சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் ஆவின் ஊழலை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் கடந்த 2017-18ம் ஆண்டுக்கான வரவு - செலவு கணக்குகள் தணிக்கை நடைபெற்ற போது ஆவினில் நடைபெற்ற மெகா ஊழல் வெளிவந்திருக்கிறது. ஒப்பந்தம் நீட்டிப்பு, நிர்வாக குளறுபடி, உணவுப் பொருட்கள் பராமரிப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆவின் நிறுவனத்திற்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ள தகவலை தணிக்கை குழு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதுமட்டுமின்றி கோவை மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு வாங்கப்பட்ட பல இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் துருப்பிடித்த நிலையில் இருப்பதும், குறைந்த விலையுள்ள பல இயந்திரங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டு அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதன் காரணமாகவும் தமிழக அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்தான் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறார்.
“ கோவை மாவட்ட ஆவின் ஒன்றியத்தின் கீழ் இயங்கும் 19 பால் குளிரூட்டும் நிலையங்களில், 9 நிலையங்கள் உணவு பாதுகாப்பு உரிமம் இன்றியும், 10 நிலையங்கள் எடை உரிமம் பெறாமலும் இயங்குவதாக தணிக்கை குழு அறிக்கை தெரிவிக்கிறது. தனியார் பால் நிறுவனங்களின் தரம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நிலையில் ஆவின் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையங்கள் உணவு பாதுகாப்பு மற்றும் எடை உரிமம் பெறாமல் இயங்கி வருவது அதிர்ச்சியளிக்கிறது.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு அமைப்பான ஆவின் நிறுவனத்தில் கோவை மாவட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த முறைகேடுகளைப் போல தமிழகத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளன.
எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து ஆவின் ஒன்றியங்கள் மற்றும் இணையத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணைகளிலும், பால் குளிரூட்டும் நிலையங்களிலும் நடைபெறும் முறைகேடுகளை கண்டறிந்து அவற்றை களையவும், முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், ஊழல் செய்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் சகாயம் போன்ற நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.