டிசம்பர் 24ல் அமைச்சரவைக் கூட்டம்

வரும் டிசம்பர் 24 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அதிமுக ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மேகதாது, ஸ்டெர்லைட் ஆலைத் திறப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. சமீபத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வளத்துறையிடம் கர்நாடக அரசு தாக்கல் செய்தது, இதற்கு மத்திய நீர்வளத்துறையும் ஒப்புதல் அளித்தது. இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அதுபோன்று ஸ்டெர்லைட் ஆலையை இரண்டு மாதத்திற்குள் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அந்த ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளதற்கும் அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஐஜி பொன் மாணிக்கவேல் குறித்து போலீசார் புகார் கூறியது தொடர்பாகவும் தமிழக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் டிசம்பர் 24ஆம் தேதி பகல் 12 மணிக்குக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட், மேகதாது அணைகட்டும் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.