விஷாலுக்கு சங்கத்தை மீட்டுக்கொடுத்த நீதிமன்றம்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட வேண்டும் என்று சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிராக முறைகேடு புகார் கூறிய முன்னாள் நிர்வாகிகள், சங்க அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர். இந்தப் பூட்டை அகற்றச் சென்ற நடிகர் விஷால் உள்ளிட்டோரை காவல்துறையினர் சிறைபிடித்து நேற்று மாலை விடுவித்தனர். இதற்கிடையில் சங்க கட்டிடத்துக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சங்கத்துக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சட்டவிரோதமாக பூட்டு போட்ட எதிர் தரப்பினருக்கு எதிராக அளித்த புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் அன்புதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, “முறையாக தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை சங்க அலுவலகத்திற்குள் நுழைய விடாமல் எப்படித் தடுக்க முடியும்? சங்க அலுவலகத்திற்கு எப்படி சீல் வைக்க முடியும்? சங்க விவகாரங்களில் காவல்துறை எப்படி தலையிட முடியும்?” என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைத் தடுக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதை ஏற்க மறுத்த நீதிபதி, “சங்கங்களின் துணைப் பதிவாளர் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு நாளை சென்று அங்கு வைக்கப்பட்ட சீலினை அகற்ற வேண்டும் அனைத்து அசல் ஆவணங்களையும் துணைப் பதிவாளரிடம் ஒப்படைத்து விட்டு ஜெராக்ஸ் காப்பிகளை இரு தரப்பினரும் வைத்து கொள்ளலாம்” என உத்தரவிட்டார். அனைத்து உறுப்பினர்களும் சங்கத்திற்குள் நுழைய அனுமதி அளிப்பதோடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கக் காவல்துறைக்கு உத்தரவிடுவதாக தெரிவித்து வழக்கு விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.