ஆரணி பட்டுச் சேலை-கைத்தறி நெசவு தமிழர் மரபு!

**சுபா**
தமிழகத்தின் தொண்டை மண்டல நகர்களில் ஒன்று ஆரணி. சில ஆண்டுகளுக்கு முன்னர் சமண சமய புராதனச் சின்னங்களையும், சமணர் கோயில்களையும் தேடி பதிவு செய்யும் பொருட்டு திருவண்ணாமலை,  ஆரணி, பூண்டி,  வளத்தி ஆகிய பகுதிகளுக்குச் சென்றிருந்தேன்.
அப்போது ஆரணியின் சமண சமயம் சார்ந்த புராதனச் சின்னங்கள் மட்டுமே தேடித் திரிந்து பதிவாக்கியதில் ஆரணிக்குப் புகழ் சேர்க்கும் பட்டுச் சேலைகள் பற்றி நான் தெரிந்து கொள்ளவில்லை. ஆனால் இந்த முறை பயணத்தில் நிகழ்ச்சிக்கு உடன் வந்திருந்த நண்பர்கள் ஆரணிக்கு வந்தால் ஆரணி பட்டு ஒன்று எடுத்துக் கொண்டுதான் செல்ல வேண்டும் எனக் கூறி விட்டதால், ஆரணி பட்டு பற்றி தெரிந்து கொள்வோமே என நண்பர்கள் அழைத்துச் சென்ற கடைக்குச் சென்றேன்.

இவ்வாண்டு கைத்தறி நெசவாளர்களைப் பெருமை படுத்தும் வகையில் இரண்டு நிகழ்ச்சிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை ஏற்பாடு செய்து நிகழ்த்தியிருந்தோம். வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஆண்டு விழாவில் கைத்தறி சேலைகள், கைத்தறி நெசவாளர்கள், தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக இடம் வகிக்கும் கைத்தறி கலையும் தொழிலும் என்ற வகையில் ஜூலை மாதம் நடைபெற்ற அந்த நிகழ்வில் கைத்தறி பற்றிய முதல் விழிப்புணர்ச்சி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ட்ராடிஷனல் இந்தியா அமைப்புடன் இணைந்தவகையில் செயல்படுத்தினோம்.  அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மிகச் சிறப்பாக கைத்தறி விழிப்புணர்ச்சி நாள் விழாவும் அக்கல்லூரியின் பெண்ணியத்துறையுடன் இணைந்த வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை நிகழ்த்தி மாணவர்கள் மத்தியில் கைத்தறி சேலை பற்றிய கருத்துக்களைக் கொண்டு சென்றோம்.  அது மட்டுமன்றி இவ்வாண்டு தொடக்கத்தில் சேலம், கொல்லிமலை, சிங்களாந்தபுரம்  ஆகிய பகுதிகளில் கிராமங்களில் மக்கள் இல்லங்களில் தறி வைத்து கைத்தறி சேலைகள் உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பதைப் பேட்டி கண்டு பதிவாக்கியிருந்தோம். 

ஆரணி பட்டுச் சேலைகள் சென்னையிலும் கிடைக்கின்றன என்றாலும்  இச்சேலைகள் நெய்யப்படும் இடத்திலேயே அவற்றை பார்த்து வாங்குவது என்பது ஒரு தனி அனுபவமே. என்னை நண்பர்கள் அழைத்துச் சென்ற இடம் ஒரு சிறிய கடை. ஒரு நெசவாளர் மாத்திரம்  அங்கு கடையில் சில சேலைகளைத் தரையில் விரித்து வைத்தபடி அமர்ந்திருந்தார். சற்று நேரத்தில் அவருக்கு ஒரு உதவியாளர் இளைஞனும் வந்து சேர்ந்தார்.

நான் பார்க்கவேண்டும் என்பதற்காக பல சேலைகளை அந்த நெசவாளர் விரித்துக் காட்டி விளக்கிக் கொண்டிருந்தார். ஆரணி பட்டுச் சேலைகளில் சேலையின் உடல் முழுவதும் அதிகமான ஜரிகை வேலைகள் உள்ளன. பல சேலைகளில் பல வர்ணங்கள் கலந்து கலைப்பாட்டுடன் பூ வேலைகள் செய்யப்பட்ட வகையில் அமைக்கப்பட்டிருந்தன. பெரும்பாலான சேலைகளில் தங்க நிற ஜரிகையே சேலையின் முழுமைக்கும் நிறைத்திருக்கும் வகையில் சேலை உருவாக்கம் அமைந்திருந்தது.  பொதுவாக அதிக ஜரிகை சேர்த்த சேலைகளை நான் அணிவதில்லை என்பதால் சற்று திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன்.

எனக்கு எவ்வகையான நிறம் பிடிக்கும், எவ்வகையான பூ வேலைகள் உள்ள வகையான சேலை அமைப்பு பிடிக்கும் என அந்த நெசவாளர் கேட்க எனது விருப்பத்தைக் கூறினேன். அப்படியான சில சேலைகளை எடுத்து வரச் சொல்லி தனது உதவியாளரை அனுப்பி வைத்தார். நான் ஒரு சேலையாவது வாங்கிக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் சற்றே சரிகை வேலைப்பாடுகள் குறைந்த ஓரிரு சேலைகளை மட்டும் எடுத்து வைத்து பார்த்தேன். அதில் ஒன்று என் கவனத்தை ஈர்க்கவே அதனையே தரும்படி கேட்டுக் கொண்டேன்.

உடனே அவர் சேலையை மிகுந்த கவனத்துடன் திறந்து விரித்து வைத்தார். சேலையின் முந்தானை பகுதியில் நூல்களைப் பிரித்து அவற்றிற்கு குஞ்சம் போடத் தொடங்கினார். அவர் உதவியாளரும் இணைந்து கொண்டார். இக்காட்சி பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.  10 நிமிடங்களுக்குள் முழுமையாக சேலைக்கு குஞ்சம் அமைத்து முடித்து விட்டனர்.

இந்தக் கைத்தறி சேலையைச் செய்ய ஒரு நெசவாளருக்கு குறைந்தது 10லிருந்து 15 நாட்கள் வரை ஆகும் என்றும், இச்சேலைகள் தனது வீட்டிலேயே உள்ள தறியில் நெய்யப்பட்டது என்றும் விளக்கினார். பிறகு நான்  கைத்தறி நூல்கள் பற்றி விசாரிக்கவே, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மேலும் சில கைத்தறி சேலைகளை எடுத்து எனக்குக் காட்டினார். தங்க ஜரிகை இழைக்கப்பட்ட சேலைகளும் அதில் அடக்கம். ஒரு வெள்ளி சரிகை இழைக்கப்பட்ட சேலையையும் எனக்குக் காட்டினார்.  இத்தகைய சேலைகளைக் கைத்தறியில் செய்து முடிக்க நாட்கள் தேவைப்படும் என்றாலும் அப்படி யோசித்து திட்டமிட்டு வடிவமைக்கும் சேலைகள் அவற்றை வாங்கி அணியும் பெண்களின் வாழ்க்கையில் என்றென்றும் மனதில் மகிழ்ச்சியை நிறைத்திருக்கும் என்பதனையும் கூறினார்.

அவர் கூறியதும் உண்மைதான். சில பட்டுச் சேலைகள் குடும்பத்தில் பல ஆண்டுகள் நம்முடனேயே வாழ்கின்றன. என் தாயார் திருமணத்தில் கட்டிய சேலைகூட இன்று எங்கள் தாயாரின் நினைவாக எங்களுடன் இருக்கின்றது என்பதும் அப்போது எனக்கு நினைவில் வந்து போனது.

சேலைக்குக் காசு கொடுத்தோம், வாங்கிக் கொண்டோம் என்றில்லாது சேலையை வாங்குபவரிடம் கொடுப்பதே ஒரு சடங்காகச் செய்தார் அந்த நெசவாளர். நான் வாங்கிய சேலையை அழகாக அட்டைப்பெட்டிக்குள் வைத்து அதனை  மகாலட்சுமி  உருவப் படத்திற்கு முன் காட்டி மந்திரம் சொல்லி வணங்கி அதில் சந்தனம் பூசி குங்குமப் பொட்டு வைத்தார்.  சாமியை வணங்கி கும்பிட்டு அந்தச் சேலையை எனக்கு கைகளில் வழங்கினார்.

பொதுவாக ஒரு புடவைக்கடையில் பத்தாயிரம் சேலைகளுக்கிடையே ஒரு சேலையை வாங்குவது என்பது ஒரு இயந்திரத்தன்மையான நிகழ்வு. ஒரு கைத்தறி நெசவாளரிடம் நேரடியாகச் சென்று அங்கே, அச்சேலையைப் பார்த்து பார்த்து நூலினைக் கோர்த்து இழைத்து வடிவமைத்துக் கொடுத்த அந்த நெசவாளரின் கைகளிலிருந்து வாங்குவது என்பது பெருஞ்சிறப்பு.  அந்த சிறப்பான அனுபவம் பெற வேண்டுமென்றால்  வாய்ப்பு கிடைக்கும் போது நேரடியாக தமிழகத்தின் நெசவுத் தொழில் வாழும் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று நமக்குத் தேவையான சேலைகளை நெசவாளர்களிடமிருந்து  வாங்குவோம்.

கைத்தறி நெசவாளர்களை ஆதரிப்போம்.
கைத்தறி நெசவு தமிழர் மரபு!

-சுபா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.