ராகுலை முன்மொழிந்ததில் என்ன தவறு?

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் என்ன தவறு என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான செஞ்சி மஸ்தான் மகன் மொக்தியார் அலி-ஜமர்தாஜ் ஆகியோரின் திருமணம் இன்று (டிசம்பர் 23) செஞ்சியில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருமணத்தை நடத்திவைத்துப் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “நாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்ததில் என்ன தவறு? நாங்கள் சொன்னது உண்மைதான், ராகுல் வருக, நல்லாட்சி தருக என நாங்கள் சொல்லாமல் யார் சொல்வார்கள். ஸ்டாலின் முன்மொழிந்தது தவறு என்று யாராவது சொன்னார்களா? ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள அரசியல் பிரச்சினைகள், சங்கடங்களை சரிசெய்துகொண்டு பின்பு முடிவு செய்யலாம் என்றுதான் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் கருதுகிறார்கள். ராகுல் காந்தி வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. தற்போது வேண்டாம் என்றுதான் கூறுகின்றனர். தமிழகத்தில் எப்படி பாஜகவை தலைதூக்கவிடாமல் செய்தோமோ அதுபோல, அனைவரையும் ஒன்றுதிரட்டி இந்தியாவில் பாஜகவின் வாசனையே இல்லாமல் செய்வோம்” என்று பேசினார்.ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்துப் பேசிய ஸ்டாலின், “ஸ்டெர்லைட் தூப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில் 12 பேர் மார்பிலும் தலையிலும் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று தனியார் நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது. தற்காப்புக்காக, கூட்டத்தைக் கலைப்பதற்காக சுட்டோம் என்று அரசுத் தரப்பில் கூறியுள்ளனர். ஆனால் குறிபார்த்து சுடப்பட்டுள்ளனர். இதனால்தான் துப்பாக்கிச் சூடு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுத்தோம். ஆனால் சிபிஐ விசாரணை கூடாது என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றது தமிழக அரசு. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த ஆட்சி உள்ளது. மத்திய, மாநில ஆட்சிகளுக்கு முடிவு கட்ட தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்” என்றும் தெரிவித்தார்.

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் வேட்பாளராக ராகுலை ஸ்டாலின் முன்மொழிந்த நிலையில், விழாவில் கலந்துகொண்டவர்களில் ஒருவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் முறையாக இதுகுறித்து கருத்து தெரிவித்தார். “தேர்தலுக்குப் பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. இதில் நான் தெளிவாக இருக்கிறேன். தற்போது பிரதமர் வேட்பாளரை அறிவிக்க மாட்டோம்” என்று விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற விழாவில் அவர் கூறியுள்ளார். மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இதனை வைத்து பாஜக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஸ்டாலின் விமர்சித்து வரும் நிலையில், இவற்றிற்கு பதில் அளிக்கும் விதமாகவே ராகுலை முன்மொழிந்ததில் தவறில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.