மக்கள் நீதி மய்யத்தில் இணைவேனா? அமீர்

ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்று தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்.


மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு மற்றும் நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 22) நடைபெற்றது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 18 பேர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் 5 பேர் என 24 பேர் கலந்துகொண்டனர். இயக்குனர் அமீர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். வரவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்தும், 20 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தின் முடிவில் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக இருக்கிறது எனவும், கூட்டணியை முடிவு செய்யும் அதிகாரம் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை எனக்கு வழங்கியுள்ளதற்கு நன்றி. நல்ல கூட்டணி அமையும். வரும் மக்களவைத் தேர்தலுக்கு 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கக் குழு அமைத்துள்ளோம். அதற்கு துணைத் தலைவர் மகேந்திரன் தலைவராக இருப்பார். இப்போதும் காங்கிரஸுடன் பேச்சு இருந்துகொண்டிருக்கிறது. நாங்கள் முடிவெடுத்த பிறகு அதனை சொல்வோம். தேர்தலில் எங்களின் பிரச்சாரம் தமிழகத்தின் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

அமீரை அழைத்ததற்கான காரணத்தை தெரிவித்த கமல், “அமீர் என்னோடு நெடுநாட்களாக பயணித்துக் கொண்டிருப்பவர். அரசியலுக்கு வருவதற்கு முன்பே என் மீதான பற்றை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். இதுபோன்ற நிறைய தம்பிகள் சினிமா துறையிலும் இருக்கிறார்கள், வெளியிலும் இருக்கிறார்கள்” என்று கூறினார். மேலும், தமிழகத்தின் மரபணுவை மாற்றத் துடிக்கும் எந்தக் கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்கமாட்டோம் என்று குறிப்பிட்ட கமல், மக்களவைத் தேர்தலில் கண்டிப்பாகப் போட்டியிடுவேன் என்றும் அறிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் இணைவேனா? அமீர்

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமீர், “நான் கலந்துகொண்ட போராட்டங்கள் குறித்து கூட்டத்தில் பகிர்ந்துகொண்டேன். கமல்ஹாசனுக்கும் எனக்குமான உறவு என்பது நீண்ட நெடியது” என்று தெரிவித்தார். மக்கள் நீதி மய்யத்தில் இணைவீர்களா என்ற கேள்விக்கு, வானத்தைப் பார்த்து வணக்கம் வைத்தார்.

மேலும், “கடந்த 10 வருடங்களாக நாம் தமிழர் கட்சியுடனுடன் சீமானுடனும் இணைந்து களத்தில் பணியாற்றிவருகிறேன். ஒருநாள் கூட நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏற மாட்டேன். அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு வருகிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக சேர மாட்டேன் என்பது அவருக்கும் தெரியும். இதுதான் தற்போதும் தொடர்ந்து வருகிறது. இதுபோலதான் கமலுடனான உறவு என்பதும்” என்று பதிலளித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film 

No comments

Powered by Blogger.