ரஜினி - முருகதாஸ் படம்: தாமதம் ஏன்?

இராமானுஜம்
தமிழ் சினிமா கதாநாயகர்கள், படம் வசூல் செய்கிறதா இல்லையா என்பதைப் பற்றி தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப தங்கள் சம்பளத்தை நிர்ணயிப்பதில்லை. தயாரிப்பாளர்களின் நடிகராக ரஜினிகாந்த் இருந்தார், தனது படங்களின் வியாபாரம், வசூல் அடிப்படையில் சம்பளத்தை தீர்மானிப்பார் என சினிமா வியாபார வட்டாரங்களில் கூறுவார்கள்.


சிவாஜி படத்திற்கு பின் அந்த நிலையை மாற்றிக் கொண்டார் என்பவர்களும் உண்டு. படத்தயாரிப்பில் தன் மகள் ஐஸ்வர்யா ஏற்படுத்திய கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்ட போது ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தில் நடிக்க சம்மதித்தார்.

இப்படத்திற்கு இயக்குநராக ரஞ்சித், தயாரிப்பாளராக கலைப்புலி தாணு என நிச்சயித்தது ஐஸ்வர்யா தனுஷ். ரஜினி அவரது திரையுலக வாழ்க்கையில் வாங்காத தொகையை கபாலி படத்திற்கு சுமார் 50 கோடியை சம்பளமாகப் பெற்றார்.

அப்படத்தின் வியாபாரம், வசூல் பற்றி அறிந்து கொண்ட ரஜினி 25 நாட்கள் மட்டுமே நடித்த 2.0 படத்திற்கு 65 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கினார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பொங்கலுக்கு வர இருக்கும் பேட்ட படத்திற்கு அதே சம்பளத்தை வாங்கியுள்ளார் ரஜினி. பேட்டயை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக கூறப்பட்டு வந்தது. சர்கார் கதை பஞ்சாயத்தின் காரணமாக முருகதாஸ் இயக்கும் ரஜினி படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விரும்பவில்லை என்று தகவல் கசிந்தது.

அப்படத்தை 2.0 படத்தை தயாரித்த லைகா தயாரிக்க விரும்புவதாக கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது அந்நிறுவனமும் தயாரிக்கவில்லை என்கின்றனர். அப்படியென்றால் ரஜினி - முருகதாஸ் கூட்டணியில் தயாராகவுள்ள படத்தை தயாரிக்க போவது யார் என்பதை ரஜினிதான் முடிவு செய்ய வேண்டும் எனக் கூறுகின்றனர். காரணம் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க ரஜினி எதிர்பார்க்கும் சம்பளம் 100 கோடி ரூபாய். சன் பிக்சர்ஸ், லைகா என இரு பெரும் நிறுவனங்களும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க விரும்பாததற்கு அவர் கேட்கும் 100 கோடி ரூபாய் சம்பளம் தான் காரணம் என்கின்றனர்.

ரஜினி கேட்கும் சம்பளம் அவரது படங்களுக்கு உள்ள வியாபாரம் மற்றும், வசூல் கணக்குகளுக்கு எதிரானது. தமிழகத்தில் விஐய் படங்களைக் காட்டிலும் குறைவாகவே ரஜினி நடிக்கும் படங்களுக்கு வசூல் இருப்பதை ரஜினி நடிப்பில் வெளியான ,கபாலி, காலா, 2.0 படங்கள் உறுதிப்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில் அவருக்கு மட்டும் சம்பளம் 100 கோடி, பிற நடிகர்கள் சம்பளம் தயாரிப்பு செலவு என 200 கோடி ஆக மொத்தம் 300 கோடி முதலீடு செய்து படத்தை தயாரித்து வெளியிட்டு படம் வெற்றி பெற்றாலும், அசல் வசூல் ஆவதே சிரமம் எனும் நிலையில், லாபத்தை எதிர்பார்க்காமல் பெருமைக்காக படத்தை தயாரிப்பவர்கள் மட்டுமே ரஜினிகாந்த் படங்களை தயாரிக்க முடியும் என்கிறது தமிழ் திரைத் திரையுலகம். இதனால் தான் அவரது அடுத்த படத்தை தயாரிப்பது யார் என்பதை அறிவிப்பதில் தாமதம் நிலவி வருகிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film

No comments

Powered by Blogger.