முதல் நாள் வசூல்: முந்தியது யார்?

வருடத்தின் இறுதியில் கிறிஸ்துமஸ், அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி கடந்த காலங்களில் சிறு பட்ஜெட் படங்கள்
வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெற்றிருக்கின்றன. இந்த வருடம் தமிழ் சினிமாவில் வியாபார முக்கியத்துவமிக்க சிவகார்த்திகேயன், தனுஷ், ஜெயம் ரவி, விஐய் சேதுபதி, மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்த படங்கள் வியாழன் ( சீதக்காதி மட்டும்) வெள்ளிக்கிழமையில் வெளியாகின. இதில் சீதக்காதி, அடங்க மறு படங்களை தவிர்த்து மாரி 2, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய மூன்று படங்களும் அதில் நடித்துள்ள நடிகர்களின் சொந்த தயாரிப்பு. இந்தப் படங்களின் முதல் நாள் வசூல் என்ன என்று தியேட்டர் வட்டாரங்களில் விசாரித்த போது பின்வரும் தகவல்கள் கிடைத்துள்ளன.
மாரி 2
படத்தின் நாயகன் மிகப் பெரும் பில்டப் உடன் படத்தின் தொடக்கக் காட்சியில் தோன்றுவார். நேற்றைய தினம் திரையரங்குகளில் இந்த பில்டப் கொடுக்கிற அளவுக்கு ஓபனிங் இல்லை என்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் அதிகமான தியேட்டர்களில் மாரி 2 ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. வசூலைப் பொறுத்தவரை மந்தமாக இருந்தது. முதல் நாள் மொத்த வசூல் சுமார் 5.85 கோடி ரூபாய் என்கிறது தியேட்டர் வட்டாரம்.
கனா
நடிகர் சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்துள்ள படம் கனா. இப்படத்தில் சிவகார்த்திகேயன், கெளரவத் தோற்றத்தில் நடித்திருக்கிறார். மாரி 2, அடங்க மறு படங்களை தவிர்த்து வசூல் அடிப்படையில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது கனா படம். தமிழகத்தில் முதல் நாள் கனா மொத்த வசூல் சுமார் 1.18 கோடி ரூபாய்.
சீதக்காதி
விஜய் சேதுபதி நடித்துள்ள படம் எனக் கூறப்பட்டது, படம் நெடுக விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்கிற செய்தி ரசிகர்களுக்கு தெரிந்த காரணத்தால் படத்திற்கு தியேட்டர்களில் ஒபனிங் இல்லை. இந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் மொத்த வசூல் 65 லட்சம் ரூபாய்.
சிலுக்குவார்பட்டி சிங்கம்
விஷ்ணு விஷால் தயாரித்து நாயகனாக நடித்திருக்கும் படம். தமிழகத்தில் குறைவான திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் நாள் மொத்த வசூல் சுமார் 21 லட்சம் ரூபாய்.
அடங்க மறு
ஜெயம் ரவி நடித்துள்ள இப்படத்தை முன்னதாகவே ரிலீஸ் செய்ய முயற்சித்தும் தியேட்டர் பிரச்சினையில் தேதி மாறிக் கொண்டே இருந்தது. மாரி 2வை விடக் குறைவான தியேட்டர்களில் வெளியாகியுள்ள இப்படம் தமிழகத்தில் முதல் நாள் 1.85 கோடி ரூபாயை மொத்த வசூலாகப் பெற்றுள்ளது.
விடுமுறையைக் குறிவைத்து களமிறங்கிய ஐந்து படங்களும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் ஆரோக்கியமாக இல்லை. படைப்பு ரீதியாகப் பாராட்டப்பட்ட சீதக்காதி, கனா இரு படங்களும் நட்சத்திர அந்தஸ்து இருந்தும் கல்லா கட்டவில்லை. மசாலா படமான மாரி 2 ஆர்ப்பாட்டத்துடன் வந்திருந்தாலும் வழக்கமாக தனுஷ் படங்களுக்கு இருக்கும் முதல் நாள் வசூல் இப்படத்திற்கு இல்லை. சமீபத்தில் ராட்சசன் என்ற வெற்றிப் படத்தில் நாயகனாக நடித்திருந்த விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருக்கும் சிலுக்குவார்பட்டி சிங்கம் வசூலில் நரியாகிப் போனது.

No comments

Powered by Blogger.