நல்ல உறவுகள் எப்படி உருவாகும்? – சத்குரு

உங்கள் உடல், மனம், உணர்வு, சக்தி நிலை ஆகிய நான்கும் நீங்கள் விரும்பும் விதத்தில் செயல்பட்டால்தான் உங்கள் நோக்கத்திற்கேற்ப வாழ்க்கையை உங்களால் அமைத்துக்கொள்ள முடியும்.

உறவுகள் மேம்பட அடிப்படைத் தேவை என்ன? – சத்குரு ஜகி வாசுதேவ் கட்டுரையின் தொடர்ச்சி

1940களில் நீங்கள் ஒரு கார் வாங்கினால், கூடவே நீங்கள் இரண்டு வேலைக்காரர்களை நியமிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தள்ளிவிட்டால்தான் கார் கிளம்பும். 1950களில் வந்த கார்களுக்கு ஒரு வேலைக்காரர் போதும். அவர் முடுக்கிவிட்டாலே கார் கிளம்பும். இப்போது வருகிற கார்களெல்லாம் விசையைப் பொருத்தியதும் தாமாகவே கிளம்புகின்றன. உங்கள் மகிழ்ச்சி என்கிற வாகனத்திற்கோ யாராவது வந்து தள்ளிவிட வேண்டிய தேவை இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியைத் தானியங்கியாக நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால் தள்ளிவிட யாருமில்லாதபோது நீங்கள் தவித்துப் போவீர்கள்.
உங்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உங்களைச் சார்ந்தே இருக்கும்போது உங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் அருமையான உறவுகளை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கையைப் பார்த்தே சொல்லுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா, எப்போதும் சோகமாக இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா? மகிழ்ச்சியாக இருப்பவரோடுதான் வாழ விரும்புவீர்கள். மறந்துவிடாதீர்கள்! அனைவருமே அதைத்தான் விரும்புகிறார்கள். நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லோரும் உங்களோடு உறவுகொள்ளத்தான் விரும்புவார்கள். யாரிடமாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள்கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள்.
வாழ்க்கை பலரையும் சார்ந்திருக்கிறது என்பதால்தான் உறவுகளையே நீங்கள் உருவாக்கினீர்கள். உங்கள் வாழ்வின் எல்லா அம்சங்களையும் நீங்களே கையாள முடியாது. உங்களைச் சுற்றி மனிதர்கள் வேண்டும். அதற்காகத்தான் உறவுகள். ஆனால், எல்லோரிடமிருந்தும் நீங்கள் எதையாவது பெற்றுக் கொண்டே இருக்க விரும்பினால், உங்களுக்கு நெருக்கமானவர்கள் அந்நியருடன் இருப்பதை விடவும் எச்சரிக்கையாக உங்களிடம் நடந்துகொள்வார்கள். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
உறவுகளை இனிமையானவையாய் வைத்துக்கொள்வதும், சிக்கல்மிக்கதாய் உருவாக்கிக்கொள்வதும் உங்களைப் பொறுத்ததுதான். நெருக்கமானவர்கள் என்றால் அவர்களுடனான மனத்தடைகள் உடைந்திருக்க வேண்டும். ஆனால், அந்நியர்களிடம் இயல்பாய் இருக்கிறீர்கள், நெருக்கமானவர்களிடம் எச்சரிக்கையாய் இருக்கிறீர்கள் என்றால் அது உங்கள் அதீத எதிர்பார்ப்பையே காட்டுகிறது. ஒருவரோடொருவர் நெருங்கியிருக்கும்போதே ஒருவரிடமிருந்து ஒருவர் தற்காத்துக்கொள்ளத் தேவைகள் ஏற்படுகின்றன. இத்தகைய சூழலில் உங்களால் உங்களுடன் உறவு கொண்டிருப்பவர்களோடு சேர்ந்திருப்பதும் சாத்தியமில்லை, விலகியிருப்பதும் சாத்தியமில்லை.
இந்த உலகத்தில் வாழ்கிறபோது உறவுகளைப் பொறுத்தவரையில் உங்களுக்குத் தேர்வுகள் ஏதும் கிடையாது. நீங்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கலாம். குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், யாருடனும் உறவுகளை வளர்த்துக்கொள்ளாமல் இருக்க சாத்தியமில்லை. ஆனால், உறவுகள் மேன்மையானவையாக இருக்க வேண்டுமா, சிக்கல் உள்ளவையாக இருக்க வேண்டுமா என்று தேர்வு செய்வது உங்களால் முடியும்.
'நான்' என்று எதை அழைக்கிறீர்கள்? உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்வு ஆகியவற்றை மட்டும்தானே. உங்கள் உறவுகளை 'நான்' என்று நீங்கள் அடையாளப்படுத்துவதில்லை. நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்திராவிட்டாலும்கூட உங்கள் சக்தி நிலையே எல்லாவற்றையும் நிகழச் செய்கிறது. மற்றபடி பரமாத்மா, ஜீவாத்மா போன்றவையெல்லாம் உங்கள் அனுபவத்திற்குள் வராதவை. அவற்றை விடுங்கள். உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்வு, உங்கள் சக்தி நிலை ஆகிய நான்கும் நீங்கள் விரும்பும் விதத்தில் செயல்பட்டால்தான் உங்கள் நோக்கத்திற்கேற்ப வாழ்க்கையை உங்களால் அமைத்துக்கொள்ள முடியும்.
இப்போது இவை நான்கும் வெளிச் சூழ்நிலைகளின் தேவைகளுக்கேற்ப இயங்கிவருகின்றன. பொதுவாக, நீங்கள் எப்போது உறங்க வேண்டும், எப்போது எழ வேண்டும், எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மற்றவர்கள் முடிவு செய்வார்களேயானால் அதைத்தான் அடிமைத்தனம் என்று கருதுகிறீர்கள். ஆனால், உங்கள் உள்நிலையில் நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை, நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை, மற்றவர்கள் யாரோ முடிவு செய்கிறார்கள் என்றால் இது அடிமைத்தனத்தை விடவும் கொடுமையான சூழல்.
எனவே, உங்களுக்கிருப்பவை உறவுகள் அல்ல, உங்களைப் பிணைத்திருக்கும் அடிமைச் சங்கிலிகள்தான். உங்கள் தன்மைக்கேற்ப சில சுதந்திரங்கள் தரப்பட்டால்தான் உங்களால் உறவுகளை மேற்கொள்ள முடியும். உங்கள் பந்தங்கள் நிர்பந்தங்களாகத்தான் இருக்கின்றன. உடல் சார்ந்து, உணர்வு சார்ந்து, மனம் சார்ந்து ஏற்படும் நிர்பந்தங்கள் சில உறவுகளை உருவாக்கிவருகின்றன. இந்தச் சூழலில், உங்கள் வாழ்க்கை எந்த நேரத்திலும் நொறுங்கிப் போகக்கூடிய அபாயத்தில்தான் இருக்கிறது.
பெரும்பாலானவர்களுக்கு உறவுகள் ஆரம்ப நிலையில் மகிழ்ச்சியைத் தருகின்றன. போகப் போகப் பதற்றத்தைத் தருகின்றன. உங்கள் எதிரிகள் உங்களைக் கொல்வதில்லை. நீங்கள் மிகுந்த நேசத்துடன் உருவாக்கிய உறவுகள்தான் உங்களை நாள்தோறும் சித்திரவதைகளுக்கு ஆளாக்குகின்றன. உங்களை வருத்துபவர்கள் பகைவர்களாக இருந்தாலும் அந்தச் சூழல் புரிந்துகொள்ளக்கூடியதாய் இருக்கிறது. நெருங்கிய உறவுகளே உங்களை நெருக்குகிற உறவுகளானால் அந்த உறவுகள் விழிப்புணர்வுடனோ, விருப்பத்துடனோ தேர்வு செய்யப்படவில்லை என்று பொருள்.
இன்னொரு விசித்திரமான போக்கும் இந்த உலகத்தில் இருக்கிறது. குறிப்பாக, மேலைநாடுகளில் இது அதிகம். மனிதர்களுடன் ஒத்துப்போக முடியாதவர்கள் கடவுளுடன் உறவை ஏற்படுத்திக்கொண்டு தங்கள் விருப்பங்களுக்கேற்ப கடவுளையே வளைக்கப் பார்க்கிறார்கள். சிலர் என்னிடம் வந்து சொல்வதுண்டு. "கடவுள் என்னை மிகவும் நேசிக்கிறார்" என்று. நான் அவர்களிடம் சொல்வேன் "நீங்கள் இருக்கும் நிலையில் உங்களை கடவுள்தான் நேசிக்க முடியும். வேறு யாரும் நேசிக்க முடியாது" என்று. வாழ்க்கையை வேறு விதமாக நடத்திவிட்டு, கடவுள் உங்களை நேசிப்பதாகக் கற்பனை செய்துகொண்டால் எந்தப் பயனும் கிடையாது. இந்த உண்மையை எதிர்கொள்கிற வரை உங்களிடம் வளர்ச்சியிருக்காது. வெறும் ஆறுதல் வேண்டுமானால் கிடைக்கலாமே தவிர விடுதலை கிடைக்காது.
நீங்கள், தனித்தன்மை மிக்க மனிதராய் இருந்தால் மட்டுமே உங்களால் நல்ல உறவுகளை மேற்கொள்ள முடியும். இல்லையென்றால், நிர்பந்தங்கள் காரணமாக வேறு யாரையாவது சார்ந்தே இருப்பீர்கள்.
ஒருவரையொருவர் புரிந்து கொள்வதுதான் உறவுகளில் முக்கிய அம்சம். ஆனால், ஒருவர் எவ்வளவு தூரம் நெருங்கி வருகிறாரோ அந்தளவுக்கு உங்களை அவருக்குப் புரியவைக்க மிகுந்த சிரமம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தியாவும் பாகிஸ்தானும்கூட மூன்று யுத்தங்களைத்தான் கண்டிருக்கின்றன. ஆனால், நீங்கள் மிகவும் நேசிக்கும் மனிதர்களுடன் எத்தனை யுத்தங்களை நடத்துகிறீர்கள். ஏனென்றால், இரண்டு நாடுகளுக்கு நடுவே எல்லைக் கோடுகள் இருப்பதுபோல உங்கள் இரண்டு பேரின் புரிதல்களுக்கு நடுவே கோடுகள் இருக்கின்றன. உங்கள் எல்லைக் கோட்டை அவர் கடந்தால் உங்களுக்குப் பைத்தியம் பிடிக்கிறது. அவருடைய எல்லைக் கோட்டை நீங்கள் கடந்தால் அவருக்குப் பைத்தியம் பிடிக்கிறது.
அவருடைய புரிதலின் எல்லையையும் கடந்து உங்களுடைய புரிதல் விரிவடையும் என்று சொன்னால், அவரது புரிதலை உள்ளடக்கி உங்களுடைய புரிதல் வளரும். அவர்களின் பலங்கள், பலவீனங்கள் அனைத்தையும் உங்கள் புரிதலுக்குள் ஏற்றுக்கொள்வீர்களேயானால், உங்களுக்கேற்ற விதத்தில் அவற்றைச் சீரமைக்க முடியும். அப்படி முழுமையாக ஏற்றுக்கொள்ளாத போதுதான் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
நான் கேட்பதெல்லாம் இதுதான். உங்கள் வாழ்வில் என்ன நிகழ்ந்தாலும் அது உங்கள் விருப்பத்திற்கேற்ப இருக்க வேண்டும் அல்லவா? அது உறவாகட்டும், தொழிலாகட்டும், அரசியலாகட்டும் உங்கள் விருப்பத்திற்கேற்ப அனைத்தும் நிகழ வேண்டுமென்றால் எல்லோரையும், எல்லாவற்றையும் உங்கள் புரிதலுக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். மற்றவர்களின் பைத்தியக்காரத்தனத்தையும் கடந்து அவர்களை உணர்ந்துகொள்ளும் அளவிற்கு உங்கள் புரிதலின் தன்மை உயர வேண்டும். மிக அற்புதமான மனிதர்கள்கூடச் சில நேரங்களில் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்வார்கள். இதை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால் அவர்களை நீங்கள் இழக்க நேரிடும்.
வாழ்க்கை எப்போதுமே நேர்க் கோடாக இருப்பதில்லை. வாழ்வை நடத்துவதற்கென்று எத்தனையோ விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் புரிதலை நீங்கள் கைவிட்டால் உங்கள் செயல்திறனை நீங்கள் இழக்கிறீர்கள். தனிப்பட்ட உறவாகட்டும், தொழில்முறை நிர்வாகமாகட்டும், எல்லா இடங்களிலும் அடிப்படைத் தேவையென்னவோ ஆழமான புரிதல்தான்.

No comments

Powered by Blogger.