இளையராஜா மீது புதிய வழக்கு!

பாடல்களுக்கான ராயல்டி தொகை தங்களுக்கு முறையாக வரவேண்டும் என இளையராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் உள்ளிட்ட 6 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.


அவர்கள் கொடுத்துள்ள மனுவில் “இளையராஜா இசையில் சுமார் ஐந்தாயிரம் பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடல்களின் பாடல் உரிமையும் அந்த பாடல்கள் மூலம் வரும் ராயல்டி தொகையும் இளையராஜாவுக்குச் செல்கிறது. இளையராஜாவை வைத்து ஆரம்ப காலங்களில் பஞ்சு அருணாச்சலம், கேஆர்ஜி, பாலச்சந்தர், பாரதிராஜா இப்படி பல தயாரிப்பாளர்கள் படம் எடுத்துள்ளனர். அவரை வைத்துப் படம் எடுத்து பாடல்கள் வெற்றிபெற்ற போதிலும் அந்த வருவாய் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்காமலே இருக்கிறது. இளையராஜாவின் இசைக்கு முதலீடு செய்த பல தயாரிப்பாளர்கள் மிகவும் கஷ்டமான சூழலில் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். இளையராஜாவின் பரிந்துரையின்படி பல தயாரிப்பாளர்கள் தங்களது ஆடியோ உரிமையை எக்கோ கம்பெனிக்கு வழங்கியுள்ளனர். அதில் வரும் ராயல்டி பங்கு(50 சதவிகிதம்) இதுவரை எந்த தயாரிப்பாளருக்கும் முறையாக வந்ததில்லை. இனி வரும் காலங்களில் இந்தப் படங்களின் மீதான ராயல்டி தொகை 25 லட்சம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருமானம் படமெடுத்த தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டும்” என்று அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் “இதுவரை சுமார் 200 கோடிக்கு மேல் தயாரிப்பாளர்களுக்கு வரவேண்டிய பணம் ஏமாற்றப்பட்டுள்ளது” என்று அந்த வழக்கு தொடர்பான மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய தயாரிப்பாளர் பிடி செல்வகுமார் “கச்சேரி, காலர் டியூன், பாடல் ஒளிபரப்புகள் மூலம் வரும் வருவாயில் தங்களுக்கு உரிய பங்கான 50% ராயல்டி தரவேண்டும். இளையராஜா இந்த அளவுக்கு வாழ்வில் உயர்வதற்குக் காரணம் யார்? தயாரிப்பாளர்கள்தான். அந்த தயாரிப்பாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தால் அந்த குடும்பங்களை கண்கொண்டு பாருங்கள். பஞ்சு அருணாச்சலம் அவர்களின் வீட்டிற்கு சென்று பாருங்கள். இது போன்று பல தயாரிப்பாளர்களை என்னால் கூற முடியும். ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மிகவும் நலிந்த நிலையில் உள்ளனர். தயாரிப்பாளர்கள் என்ற முறையில் பாடல்களில் வரும் ராயல்டி அவர்களுக்கும் சென்றடைய வேண்டும். அந்த உரிமையை விட்டுக் கொடுங்கள். நீங்கள் விட்டுக் கொடுத்தால் நாங்கள் இந்தப் பிரச்சினையை விட்டுவிடுகிறோம். மாதந்தோறும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு சதவிகிதம் ராயல்டி தொகை வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் அவரை தெய்வமாக வணங்கி இதிலிருந்து நாங்கள் விலகிவிடுவோம். அப்படி இல்லை என்றால் நாங்கள் ஒன்றிணைந்து போராடுவோம். ராயல்டி தொகையை இசைக் கலைஞர்களுக்கு கொடுப்பதாக கூறுகிறார். முதலீடு செய்த நாங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். உங்களை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு விட்டுக் கொடுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். இதில் எந்த உள்நோக்கமும் கிடையாது. எங்களுக்கு கிட்டத்தட்ட 100 தயாரிப்பாளர்கள் ஆதரவு தருகிறார்கள்” என்று கூறினார்.

இளையராஜாவின் 75ஆவது பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சியாக, தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தவிருந்த இசை நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணத்தை தயாரிப்பாளர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு வெளியானபோதே ‘இளையராஜாவே தயாரிப்பாளர்களுக்கு பல நூறு கோடிகள் கொடுக்கவேண்டியது இருக்கும்போது, அவர் இசை நிகழ்ச்சியின்மூலம் 10 கோடி கொடுப்பது எங்களுக்குத் தேவையா?’ என்று எதிர்வாதம் வைத்தனர் தயாரிப்பாளர்கள் சிலர். அதைத்தொடர்ந்து நடைபெற்ற பிரச்சினைகளின் சங்கிலித் தொடராகவே, தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு பூட்டு போட்டது உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின. தற்போது, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தயாரிப்பாளர் சங்கத்துக்கு பூட்டு போட்ட பிரச்சினை முடிவுக்கு வர, அங்கு பூட்டு நீக்கப்படுவதற்குள் இளையராஜா மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஒரு தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டிருப்பது தமிழ் சினிமாவினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.