டாப் 50 பட்டியலில் நயன்தாரா, பா.இரஞ்சித்

ஜிக்யூ பத்திரிகை வெளியிட்டுள்ள 2018ஆம் ஆண்டில் செல்வாக்குமிக்க டாப் 50 இந்தியர்கள் பட்டியலில் பிரபல திரைப்பட நடிகைகளான டாப்சி பன்னு, பார்வதி, ஆலியா பட், இயக்குநர் ரீமா தாஸ் ஆகியோரைத் தொடர்ந்து நடிகை நயன்தாராவும் இயக்குநர் பா.இரஞ்சித்தும் இடம்பிடித்துள்ளனர்.

‘மாயா’, ‘டோரா’, `அறம்’ என்று தனக்கென தனி பாணியை உருவாக்கிக்கொண்டுள்ள நயன்தாரா, ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று பெயரெடுத்தது மட்டுமல்லாமல், அவருக்கென பிரத்யேகமாக கதைகளைத் திரைக்கதாசிரியர்கள் உருவாக்கும் அளவுக்குச் செல்வாக்கு நிறைந்தவர் என்று கூறியுள்ளது ஜிக்யூ.
நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் ஆகிய இரு படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம், சக்ரிடொடலட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள கொலையுதிர் காலம் என இருபடங்கள் வெளியாகவுள்ளன. இவை தவிர ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் அவர் கைவசம் உள்ளன.
இந்திய அளவில் பேசப்படும் நடிகரான ரஜினிகாந்த்தை வைத்து இரண்டு படங்களை எடுத்துள்ள பா.இரஞ்சித், ஒடுக்கப்பட்ட மக்களுடைய வாழ்வையும் வரலாற்றையும் முன்னிறுத்தி படமாக்குவது மட்டுமல்லாமல் சமூக அமைப்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்த முயற்சி செய்து வருவதைப் பாராட்டியுள்ளது ஜிக்யூ.
ரஞ்சித் தயாரிப்பில் முதன்முறையாக வெளிவந்த பரியேறும்பெருமாள் திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் வலியைப் பேசியதோடு வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. தமிழில் தனக்கான ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள ரஞ்சித் அடுத்தப் படத்தை இந்தியில் இயக்குகிறார். பழங்குடி இன மக்கள் தலைவரான பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அவர் இயக்கவுள்ள புதிய படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.