கிளிநொச்சியில் தொடர்ந்தும் முகாம்களில் மக்கள்தஞ்சம்

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சீரான வானிலை காணப்பட்ட போதிலும் தொடர்ந்தும் மக்கள் முகாம்களிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை நேற்றும் இன்றும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் என தெரிவிக்கப்பட்டபோதிலும், பெரிதாக மழைவீழ்ச்சி பதிவாகவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் இரணைமடு குளத்திற்கு அதிகளவாக நீர் வழிந்தோடுவதால் குளத்தின் 12 வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இன்று பகல் குளத்தின் நீர்மட்டம் 36.7 அடியாக காணப்பட்டது, எனினும் குளத்திலிருந்து அதிக நீர் வழிந்தோடுவதால் தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, கண்டாவளை பிரதேச செயலகம் உள்ளிட்ட பல பகுதிகள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கடந்த 21ஆம் திகதி பெய்த பலத்த மழை காரணமாக மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.

அதிக மழை காரணமாக குளங்கள் 2 அடிக்கு மேல் பெருக்கெடுத்தோடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், பல பிரதேசங்கள் நீரில் மூழ்கின. சில இடங்களில் போக்குவரத்தும் தடைப்பட்டது.

இந்நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை படையினரும், பொலிஸாரும் பாதுகாப்பான இடங்களிற்கு அழைத்து சென்று தங்கவைத்துள்ளனர்.

இதனடிப்படையில், சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 9975 குடும்பங்களை சேர்ந்த 33008 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 2375 குடும்பங்களை சேர்ந்த 7849 பேர் 24 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை கரைச்சி பிரசே செயலர் பிரிவில், மொத்தமாக 1177 குடும்பங்களை சேர்ந்த 4124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 416 குடும்பங்களை சேர்ந்த 1509 பேர் 7 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக கிளிநாச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம்  தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கண்டாவளை பிரதேச செயலர் பிரிவில், 7386 குடும்பங்களை சேர்ந்த 24032 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 1797 குடும்பங்களை சேர்ந்த 5744பேர் முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில், 1412 குடும்ப குடும்பங்களை சேர்ந்த 4852 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 162 குடும்பங்களை சேர்ந்த 596பேர் முகாம்களில் தங்கியுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய புள்ளி விபரம் தெரிவிக்கின்றதாகவும் அவர்  மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.