2.0 அல்லது 96: வகுப்பில் இப்படியும் உதாரணம் சொல்லலாம்!

எஸ்கா
2.0 ரிலீஸ் ஆகி ஊரெல்லாம் அதே பேச்சாக இருந்த டிசம்பர் முதல் வாரம். ஒரு பள்ளி... நான்காம் வகுப்பு என்று
நினைக்கிறேன். கணக்கு வகுப்பு. வகுப்பறை அவதானிப்புக்காகப் (Classroom Observation) போயிருந்தேன். வழக்கம் போல நமக்குக் கடைசி பெஞ்ச். அன்றைக்கு ‘decimals & whole numbers’ பற்றிய basic பாடம் நடந்து கொண்டு இருந்தது. ஆசிரியை நன்றாகவே நடத்தினார். ஆனால், மாணவர்களில் கொஞ்சம் பேருக்கு இதுவா, அதுவா எனப் புரியாமல் முகத்தில் லேசாக ஒரு கேள்விக்குறி இருந்து கொண்டே இருந்தது. சிம்பிளாகச் சொன்னால் Decimal number என்பவை டாட் வைக்கப்பட்டு எழுதப்படும் எண்கள். உதாரணமாக 3.4, 45.76, 890.345 போல. Whole number என்றால் முழு எண்கள். 1, 2, 3, 89, 567, இதர.
நடப்பு வாழ்க்கையும் பாடமும்
என் ஆப்ஸர்வேஷனில் அடிக்கடி நான் சொல்லும் விஷயம், “எந்தப் பாடமாக இருந்தாலும் நீங்கள் நடத்தும் பாடத்தை ஏதேனும் ஒரு விதத்தில் இயல்பு / நடப்பு வாழ்க்கையுடன் கோத்து (Real life example / connectivity) உதாரணம் சொல்லுங்கள். மாணவர்களுக்கு சுலபமாகப் புரியும்” என்பது (சில பல ஆசிரியர்கள் செய்கிறார்கள்).
உதாரணமாக, எல்கேஜி வகுப்புகளில் “shapes” பற்றிப் படிக்கும்போது வட்ட வடிவத்துக்கு உதாரணமாக தட்டு, வண்டி டயர், ஃபேனின் நடுப்பகுதி, இட்லி, தோசை, வட்ட கடிகாரம் என்று சொல்லுதல். மூன்றாம் வகுப்பில் Pollution பற்றி நடத்தும்போது, தீபாவளிப் பண்டிகையன்று நாம் என்னென்ன செய்கிறோம் என்று கேட்பது. பட்டாசுப் புகை - air pollution; குப்பைகள் சேர்கின்றன - soil & land pollution; அவற்றைச் சாக்கடையில் போடுகிறோம் - water pollution; பயங்கர சத்தம் உண்டாக்குகிறோம் - noise pollution என்று அவர்களிடமிருந்தே விடைகளை வரவழைப்பது.
ஆனால், சில ஆசிரியர்களுக்கு Subject Knowledge நன்றாக இருந்தாலும் லைவ் உதாரணம் சொல்லத் தெரியாது. அதனால் அவர்கள் வகுப்பு கொஞ்சம் போரடிக்கும். அது பாடம் சட்டெனப் புரியாத குழந்தைகளைப் பாதிக்கும். என்னிடம் ஒரு பாடத்தைச் சொல்லி இதுக்கு எப்படி சார் அந்த மாதிரி உதாரணம் சொல்ல முடியும் என்றும் கேட்பார்கள் (ஆனால், அதே பாடத்துக்கு வேறு வகுப்பில் வேறு ஆசிரியை ஒரு நல்ல உதாரணம் சொல்லிக்கொண்டிருப்பார்). அந்த வகுப்பிலும் அப்படி ஒரு லேசான மந்த நிலை தெரிந்தது. சட்டென எனக்கு ஒரு ஐடியா தோன்றியது. காத்திருந்து வகுப்பு முடியும் நேரம் மாணவர்களைக் கேள்வி கேட்க ஆசிரியையிடம் பர்மிஷன் கேட்டுக்கொண்டு அவர்களிடம் “சினிமா பார்ப்பீங்களா?” என்றேன்.
பெரும்பாலானோர் “எஸ் சார்” என்றார்கள். கரும்பலகையில் Decimal மற்றும் Whole number பற்றி ஆசிரியை எழுதிப்போட்ட குறிப்புகள் இருந்தன. அதை கை காட்டியபடியே (க்ளூ) “சரி, அப்டின்னா சமீபத்தில் வந்த படங்களின் பெயர்களில் இருந்து whole numberக்கு ஓர் உதாரணம் சொல்லுங்க பார்ப்போம்” என்றேன். Decimals என்று கேட்கவில்லை. காரணமாகத்தான். உடனே வகுப்பே பரபரப்பாகியது. ரெண்டே விநாடிகள் தான். பெரும்பாலான குழந்தைகள் ஆர்வத்தில் “சார், 2.0, 2.0, 2.0, 2.0, 2.0, 2.0, 2.0, 2.0” என்று கத்தத் தொடங்கினார்கள். அது whole number இல்லை என்று புரிந்தவர்கள் சிலர் யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
2.0 ஒரு Decimal number. எனவே நான் “நோ, நோ” என்று சொல்லிக் கொண்டிருந்தேன். உடனே இன்னும் சிலர் யோசிக்கத் தொடங்கினார்கள். சத்தம் குறைந்தது. “நான் சொல்ற அந்தப் படம் வந்து ஒரு மாதம்தான் ஆச்சு” என்றேன். மீண்டும் யோசனை. ஆர்வமான ஓர் அமைதி. மீண்டும் க்ளூ கொடுக்க “அந்தப் படத்தைக் கொஞ்ச நாள் முன்னாடி சன் டிவியில் போட்டாங்க” என்றேன். உடனே சட்டென கடைசி பெஞ்சில் இருந்து ஒருவன் முகத்தில் பல்ப் எரிய எழுந்து “சார்... 96 சார்” என்றான். “வெரிகுட்” இது டீச்சர். “படிப்பைப் பொறுத்தவரை He is a late bloomer sir” என்றார் ஆசிரியை என்னிடம் குசுகுசுவென்று. அவரது முகத்திலும் ஆச்சரியக் குறி.
உடனே பலரும் “96, 96, 96, 96” என்று கத்த வகுப்பில் ஒரே ஆரவாரம். நான் “Claps for him” என்றேன். அந்தப் பையனை வாழ்த்தி முடித்ததும், அடுத்து “அப்போ Decimal numberக்கு உதாரணம்?” என்று கேட்டதும் இப்போது முழு வகுப்பும் எழுந்து கோரஸாக “2.0” என்று கத்தியது. “கரெக்ட், வெரிகுட்” என்று பாராட்டிவிட்டு இரண்டு எண்களையும் போர்டின் இரு புறமும் பெரிதாக எழுதி அழுத்தமாக மீண்டும் ஒருமுறை இதுதான் Decimal இதுதான் Whole number என்று சொல்லிவிட்டு அன்றைய வகுப்பு முடிவடைந்தது. அனைவருக்கும் சந்தோஷம்.
இப்படியும் லைவ் உதாரணங்கள் கொடுக்கலாம்.
அதற்கு எனக்குக் கிடைத்த பரிசு ஆசிரியையிடமிருந்து - “சாருக்கு எல்லாரும் ஒரு சைலண்ட் க்ளாப்ஸ் கொடுங்க”.
இங்கே ஒரு குறிப்பு: Whole numberஇல் டாட் வைத்து எழுதப்பட்டால் அது Decimal எண் ஆகும். ஆக தியரிப்படி, அனைத்து Whole numberகளும் Decimalகளே, அவை அனைத்துக்கும் டாட் ஜீரோ வைக்க முடியும் என்பதால். அதேபோல, 2.0வின் மதிப்பு 2தான் என்பதால் 2.0வை Whole number என்றும் சொல்லலாம். எனவே பாடம் குறித்த விவாதம் வேண்டாம். இந்தக் கட்டுரை பாடம் நடத்துகையில், லைவ் உதாரணங்கள் சொல்வது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தவே.
பெற்றோர்களுக்கு ஒரு குறிப்பு: “கணக்கைப் பொறுத்தவரை, எனக்கு கணக்குப் புரியவில்லை. என்னால் என் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுக்க முடியவில்லை” என்று ஆசிரியர்களிடம் சண்டைக்குப் போக வேண்டாம். பலர் அப்படிச் செய்கிறார்கள். நான் கூட என் +2 வில் Business Mathsஇல் 185 மதிப்பெண். ஆனால் என் பள்ளிப் பருவத்துக்கும், இப்போதைக்கும் நீண்ட இடைவெளி ஆகிவிட்டதால் அப்போதைய கணக்கெல்லாம் மறந்தேவிட்டது. நான் பல வகுப்புகளில் உட்கார்ந்து கவனிக்கிறேன். இன்றைய கணக்குகள், வழிமுறைகள் நிறைய மாறியிருக்கின்றன.
மற்ற பாடங்கள் வேறு, கணக்கு வேறு. அந்தக் கணக்கில் நீங்கள் அப்-டு-டேட் ஆக இருக்க நீங்கள் கணக்கு வாத்தியார் அல்ல. ஒன்று, அதைக் கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுத்துக் கற்றுக்கொள்ளுங்கள் அல்லது வாத்தியாரம்மாவை நம்பிப் பிள்ளையை ஒப்புக்கொடுங்கள். அவரிடம் சென்று பேசி உதவி கேளுங்கள். சண்டைக்குப் போகாதீர்கள். நன்றி.
(கட்டுரையாளர் எஸ்கா (எ) எஸ்.கார்த்திகேயன் எழுத்தாளர், சமூக ஆர்வலர், மென்திறன் பயிற்சியாளர். கல்வி சார்ந்த நிறுவனம் ஒன்றில்ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் மேலாளராகப் பணிபுரிகிறார். இவரைத் தொடர்புகொள்ள: yeskha@gmail.com. அவருடைய ஃபேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/yeskha.karthik)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.