அரசு மரியாதையுடன் பிரபஞ்சன் உடல் தகனம்!

எழுத்தாளர் பிரபஞ்சனின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் புதுவை சன்னியாசித் தோப்பு இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கவிஞர், பத்திரிகையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கவிஞர் பிரபஞ்சன், புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், புதுச்சேரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 21ஆம் தேதி காலமானார்.
1945 ஜனவரி மாதம் 27ஆம் தேதி சாரங்கபாணி - அம்புஜம்மாள் தம்பதியர்களுக்கு மகனாகப் பிறந்த பிரபஞ்சனின் இயற்பெயர் வைத்திலிங்கம். புதுவையில் பிறந்திருந்தாலும், பிரபஞ்சனின் மூதாதையர்கள் தஞ்சை மாவட்டம் துக்காச்சி அருகில் கடலங்குடி கிராமத்தின் கிராமணி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். பிரபஞ்சன் தஞ்சை மாவட்டம் கரந்தை கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றார்.
தந்தை சாரங்கபாணி அரசு அனுமதியோடு கள்ளுக்கடை நடத்தியவராகச் சொல்லப்பட்டாலும் ம.பொ.சி. நடத்திய செங்கோல் பத்திரிகையில் எழுத்தாளராகவும் பணி செய்திருக்கிறார். தந்தையின் எழுத்தும் வாசிப்பும்தான் பள்ளிப் பருவத்திலேயே கவிதைப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் கலந்துகொள்ள பிரபஞ்சனுக்குத் தூண்டுகோலாக அமைந்தன. பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்தவர் கவிதைகளில் ஆர்வம்காட்டத் தொடங்கினார். கவிதையைத் தொடர்ந்து கதைகளும் எழுதத் தொடங்கினார். தோளில் ஜோல்னா பையை மாட்டியபடி பல இடங்களுக்கு நடந்தே பயணித்திருக்கிறார் பிரபஞ்சன். 1970 ஜூலை மாதம் 5ஆம் தேதி உறவினர் பெண்ணான பிரமிளா ராணியை அவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர்.
பையில் தடித்த பேனா, கைக்குட்டை, பேனா முள்ளைச் சரிசெய்ய பிளேடு, பேப்பர்களை அடுக்கித் தயார் செய்யப்பட்ட நோட்டு, புத்தகங்கள் இவையனைத்தையும் பிரபஞ்சன் எப்போதும் தன்னிடத்தில் வைத்திருப்பார்.
அப்போது புதுச்சேரியில் கலைப் பண்பாட்டுத் துறை எனத் தனியாக இருந்ததில்லை. கல்வித் துறையில் அருங்காட்சியகம் என இருந்தது. அதன் காப்பாளராக சிரில் அந்தோணிசாமி இருந்தார். எழுத்தாளர்கள் முருகேசன், நிகிலன், பிரபஞ்சன், குமாரகிருஷ்ணன் உள்ளிட்டோர் தினந்தோறும் மாலை நேரத்தில் அந்த அருங்காட்சியகத்தில்தான் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்துவர். அந்தத் துறையின் ஊழியரான நாக.செங்காளம்மா தாயார் போன்றவர்களும் அதில் கலந்துகொண்டு கவிதை, கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வமாக இருப்பார்கள்.
செங்காளம்மா தாயார் அவர்களைத் தொடர்புகொண்டபோது, பிரபஞ்சன் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். “பிரபஞ்சன் பிரபலம் ஆகாத காலம் அது, சிறுகதை ஆசிரியர் முருகேசன், நிகிலன், குமாரகிருஷ்ணன், பிரபஞ்சன் ஆகியோர் அவரது நெருக்கமான நண்பர்கள். எவ்வளவு தூரமாக இருந்தாலும் நடந்தே செல்லுவார். சில நேரங்களில் நண்பர்களோடு சைக்கிளில் வருவார். காற்று மழையாக இருந்தாலும் தினந்தோறும் மாலை நேரத்தில் ஒன்றுகூடி இலக்கிய சந்திப்புகளை நடத்துவார்கள். அதில் நாங்களும் பங்கேற்போம். அப்பவே பிரபஞ்சன் சார் தனித் திறமையானவர். அன்றாடம் அவர் பார்வையில் காண்பதையும், அறிவதையும், கொடுமைகளையும் சிறுகதையாக எழுதுவார்.
புதுவையில் முதன்முதலாக கல்வித் துறை மூலமாக இலக்கிய விருது கொடுக்க முடிவு செய்தபோது, அவர் எழுதிய ‘ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள்’ என்ற சிறுகதை நூலைத் தேர்வு செய்து அரசுக்கு அனுப்பினோம். விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட பின்பு, பிரபஞ்சன் வீட்டுக்கு நாங்கள்தான் அழைப்பும் கொடுக்க போனோம். 1985 ஆண்டில் பிரபஞ்சனுக்குக் கம்பன் புகழ் இலக்கிய விருது வழங்கப்பட்டது. அவர் பெற்ற முதல் விருதும் அதுதான் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
“1989-90இல் புதுச்சேரி பல்கலைக்கழக டிராமா டிபார்ட்மென்ட்டில் பிரபஞ்சனுக்கு வருகை தரும் பேராசிரியர் பணி வழங்கப்பட்டது. புதுச்சேரி அரசு விருது பெற்ற பத்து வருடங்களுக்குப் பிறகு 1995இல் வானம் வசப்படும் என்ற நூலுக்கு சாகித்ய அகாதெமி விருது பெற்றார். 1990க்கு முன்பு அவர் கையில் சிகரெட் புகையாது, புகைந்தாலும் அது இலைமறை காயாகத்தான் இருந்தது. 1990க்கு பிறகு அவர் கையில் தொடர்ச்சியாக சிகரெட் புகைவதை காண முடிந்தது” என்றார் வருத்தத்துடன்.
பிரபஞ்சனுக்கு, பெயர் மாற்றிய பிறகு புகழும் பாராட்டுகளும் விருதுகளும் மலைபோல் குவிந்தன. ஆனால், வாழ்க்கையில்தான் மகிழ்ச்சியும் நிம்மதியும் குறைந்தன. நிதி நெருக்கடி அவரை வாட்டியது. எட்டு வருடங்களுக்கு முன்பு அவருடைய துணைவியார் பிரமிளா ராணி காலமானார். புற்றுநோய் என்ற கொடுநோயும் தொற்றிக்கொண்டு தொல்லை செய்துவந்தது. பிரபஞ்சன் உடல்நிலையை அறிந்த முதல்வர் நாராயணசாமி கடந்த மே மாதம் அரசு சார்பாக பத்து லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.
கவிதை, கதை, பத்திரிகை துறையில் போராடி வென்ற பிரபஞ்சனால் கேன்சர் நோயிடமிருந்து போராடி மீள முடியவில்லை. புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த 21ஆம் தேதி தேதி காலமானார் பிரபஞ்சன். பிரபஞ்சனின் உடல் நேற்று நேற்று (டிசம்பர் 23) காலை புதுவை ரெயில்வே நிலையம் அருகே பாரதி வீதி வ.உ.சி. வீதி சந்திப்பில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
நண்பனுக்கு நன்றிக் கடன்களைச் செய்ய எழுத்தாளர் முருகேசன், டெல்லியிலிருந்த முதல்வர் நாராயணசாமியைத் தொடர்புகொண்டு பிரபஞ்சனுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் நாராயணசாமி, பிரபஞ்சன் உடலுக்கு தேசியக் கொடி போர்த்தி அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினார்.
புதுச்சேரி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோரும், எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் பழமலை போன்ற எழுத்துலகத்தினரும் பொதுமக்களும் பிரபஞ்சன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன் பிறகு அங்கிருந்து நேற்று மாலை, அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது. சன்னியாசித் தோப்பு இடுகாட்டில் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க பிரபஞ்சன் உடல் தகனம் செய்யப்பட்டது.
திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் பிரபஞ்சன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடமையைச் செய்தோம் - முதல்வர் நாராயணசாமி
எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புதுச்சேரி அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது குறித்து நன்றி தெரிவித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம்.
“பிரபஞ்சன் முற்போக்கு எழுத்தாளர். புதுச்சேரியின் சரித்திரத்தை எழுதியவர். புதுச்சேரியின் தெருப் பெயர்களுக்கு அப்பெயர் வர காரணம் என்னவென்று அருமையான ஆய்வு செய்து எழுதியிருக்கிறார். அவருக்கு மரியாதை செலுத்த வேண்டியது எங்கள் கடமை.
சிலப்பதிகாரத்தில் கோவலனும், கண்ணகியும் பூம்புகாரில் இருந்து புறப்பட்டு அவர்கள் செல்லும் பாதை குறித்த ஓர் ஆய்வுக் கட்டுரையை அவர் எழுதிக்கொண்டிருந்தார். அதற்குள் காலம் அவரைப் பறித்துக்கொண்டது. அவர் மறைந்த பிறகு என்றல்ல, அவர் வாழும்போதே அவருக்கு உரிய மரியாதைகளை புதுச்சேரி அரசு சார்பில் அளித்து வந்தோம். நான்கு மாதம் முன்புகூட அவருக்கு விருது அளித்து மகிழ்ந்தோம்.
இப்படி புதுச்சேரிக்குப் பெருமை சேர்த்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டியது எங்களின் கடமை. அதைத்தான் செய்திருக்கிறோம்” என்றார் நெகிழ்வான தன்னடக்கத்தோடு.
- காசி

No comments

Powered by Blogger.