முல்லைத்தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உதவிக்கரம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இருட்டுமடு, சுதந்திரபுரம், வள்ளிபுனம், தேவிபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து மழைவெள்ளம் காரணமாக
இடம்பெயர்ந்துள்ள பொதுமக்களுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி( அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) (22-12-2018)உதவிக்கரம் நீட்டியுள்ளது. 

மழை வெள்ளம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட இருட்டுமடுக் கிராமத்தில் 181 குடும்பங்களும், சுதந்திரபுரம் கிராமத்தில் 401 குடும்பங்களும் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். 

வள்ளிபுனம் கிராம மக்கள் வள்ளிபுனம் பொதுநோக்கு மண்டபத்தில் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர். தேவிபுரம் அ , தேவிபுரம் ஆ ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மொத்தமாக 350 குடும்பங்கள் தங்கியுள்ளனர்.

மழை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்ட குறித்த மக்களுக்குத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்) உடனடித் தேவையாக உணவு வழங்கி உதவியுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர் ஏரம்பு இரத்தின வடிவேலின் நேரடிக் கண்காணிப்பில் குறித்த மக்களுக்கு மதிய வேளை சமைத்த உணவுகளும், இரவு உணவுளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  


இதேவேளை, உடையார்கட்டுக் குளத்தின் வான் பாய்வதால் இருட்டுமடு, சுதந்திரபுரம் ஆகிய பகுதி மக்களும், இடைக்கட்டுக் குளம் வான்பாய்வதால் வள்ளிபுனம் மற்றும் தேவிபுரம் அ , தேவிபுரம் ஆ ஆகிய கிராம மக்களும் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.