ரஜினி தவிர்க்கும் ‘சூப்பர்ஸ்டார்’ பட்டம்!

ரஜினிகாந்த் ஓய்வுக்காக டிசம்பர் 22 இரவு குடும்பத்தினருடன் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது "பிறக்கப்போகும் 2019 புத்தாண்டில் மக்கள் அனைவரும் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். ‘பேட்ட’ படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு இருக்கிறது. அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்திசெய்யும் என நம்புகிறேன். என்னுடைய பெயரில் வேறு யாரோ தொலைக்காட்சி சேனல் தொடங்க முயற்சிப்பதாக எனக்குத் தகவல் வந்தது. அதற்கு முன்பாக எனது பெயரில் தொலைக்காட்சி சேனலுக்கு நான் பதிவு செய்துள்ளேன். தேர்தல் வரும்போது போட்டியிடுவது குறித்து கூறுகிறேன். கட்சி தொடங்கிய பிறகு கூட்டணி குறித்துப் பார்க்கலாம்" என்று ரஜினிகாந்த் கூறினார்.
சூப்பர்ஸ்டார் டிவி, தலைவர் டிவி, ரஜினி டிவி ஆகிய பெயர்களில்ரஜினி தேர்ந்தெடுத்திருப்பது ரஜினி டிவி. அதற்குக் காரணம், ரஜினி என்கிற பெயரை வைத்துவிட்டால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் ஒளிபரப்பு செய்யலாம் என்று திட்டமிடுவதாகக் கூறுகின்றனர் ரஜினிக்கு நெருங்கியவர்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலும் நடிகர்களில் சூப்பர்ஸ்டார் இருப்பார்கள், தலைவர் என்றாலும் வேறு யாரையாவது குறிக்கலாம். எனவே, ரஜினி என்கிற பெயர் எல்லா மாநிலத்திலும் மட்டுமல்ல உலகம் முழுவதும் வியாபாரத்துக்கு உதவும் என்று நினைத்து இந்தப் பெயரை உறுதி செய்திருக்கிறார்களாம் ரஜினி குடும்பத்தினர்.
அவர் பெயரில் தொலைக்காட்சி தொடங்க விண்ணப்பித்தத் தகவலை மீடியாக்கள் முன்னதாகவே வெளியிட்டுவிட்டன. ரஜினி தரப்பில் அதனை உறுதிப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் அச்செய்தியை உறுதிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. ‘எதற்காக தொலைக்காட்சி? அரசியலுக்கா, ஆன்மீகத்துக்கா?’ என அவர் திரும்பி வரும் வரை இங்கு விவாதம் நடக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.