பும்ரா ஏன் அப்படி வீசுகிறார்?

தினேஷ் அகிரா

ஆடுகளத்தில் உடலியக்கவியல் (Biomechanics)
பயோமெக்கானிக்ஸ் என்பது ஒரு வீரரின் செயல்பாடுகளை இயற்பியல் முறைகளுடன் ஒப்பிட்டு அதிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து
அதிகபட்சமாகப் பலனளிக்கும் விதமாக அவற்றைக் கூர்தீட்டுவது என்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிராங்க் டைசன். பல தசாப்தங்களுக்கு முன்பே இத்துறையை கிரிக்கெட் ஆட்டத்துடன் இணைத்து அதன் அடிப்படையில் வீரர்களுக்குப் பயிற்சியளித்த டைசன் கிரிக்கெட்டில் பயோமெக்கானிக்ஸ் குறித்த ஆரம்பகால முன்னெடுப்புகளை எடுத்தவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பயோமெக்கானிக்ஸ் துறை கிரிக்கெட்டின் அனைத்துத் துறைகளிலும் உபயோகப்படுத்தப்பட்டு வந்தாலும் அதன் பங்களிப்பு வேகப்பந்து வீச்சில்தான் பெரிதும் உள்ளது. இந்தியப் பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவின் உதாரஅத்தை வைத்து இதைப் புரிந்துகொள்ளலாம். "பும்ராவின் புதிரான ஆக்ஷன் சர்வதேசக் கிரிக்கெட்டின் ஆரம்ப காலங்களில் அவருக்கு விக்கெட்டுகளை அள்ளித் தரலாம் ஆனால் முதுகுப் பகுதிக்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் இதுபோன்ற சிக்கலான ஆக்ஷனை வைத்துக்கொண்டு அவர் ஏழு எட்டு ஆண்டுகள் விளையாடுவதுகூட சிரமம். முகம்மது ஷமியைப் பாருங்கள் எவ்வளவு அநாயசமாக ஓடி வந்து எவ்விதச் சிடுக்குமின்றி வீசுகிறார், இப்படியே தொடர்ந்தால் அவரால் 20 வருடங்கள்கூட கிரிக்கெட் விளையாட முடியும்" என்று கடந்த இங்கிலாந்து தொடரில் பும்ரா ஆக்ஷன் குறித்த விவாதத்தின்போது வர்ணனையாளர் மைக்கேல் ஹோல்டிங் கூறியது இது.
விதிவிலக்குகளின் அனுபவங்கள்
வெஸ்டர்ன் ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்தின் பயோமெக்கானிக்ஸ் குறித்த ஓர் ஆய்வு, ஒரு வேகப்பந்து வீச்சாளரின் பந்துவீச்சில் அவரது ரன் - அப் 16 - 17 சதவீதமும் தோள்பட்டை மற்றும் கைப்பகுதி 40 சதவீதமும் கால்கள் மற்றும் கீழுடல் பகுதி 30 சதவீதமும் பங்களிப்பதாகக் கணக்கிட்டுள்ளது. ஆனால் பும்ராவோ பெரிய அளவில் ரன் - அப் இல்லாமலேயே தொடர்ச்சியாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் வீசுகிறார். இதன் காரணமாக அதிகப்படியான சக்தியை அவரது முதுகும் கீழுடல் பகுதிகளும் இழக்க வேண்டியுள்ளது. ஷமியின் பந்துவீச்சில் மேற்சொன்ன அளவீடுகள் அனைத்தும் இயல்பாகப் பொருந்திப் போகின்றன.
தோளும் மார்பும்: எது சரி?
தோள்பட்டையை மட்டையாளரை நோக்கி வைத்திருக்கும் Side - on என்னும் ஆக்‌ஷன், மார்பை மட்டையாளரை நோக்கித் திருப்பும் Chest - on ஆக்‌ஷன் என்று இரண்டு விதமான ஆக்ஷன்கள் வேகப்பந்து வீச்சில் தற்போது நடைமுறையில் உள்ளன. ஆனால், ஆரம்ப காலங்களில் side - on மட்டுமே சரியானது என்ற பார்வை இருந்தது. பயிற்சியாளர்கள் பேச்சைக் கேட்டு தன்னுடைய இயல்பான ஆக்ஷனை விட்டுவிட்டு side - on ஆக்ஷனுக்கு மாறியிருந்தால் தான் கிரிக்கெட் விளையடாமலேயே போயிருக்கலாம் என்கிறார் க்லென் மெக்ரா. Side - on அல்லது chest - on எதுவாகினும் தவறில்லை ஆனால் மேலுடல் ஒருபுறமும் கீழிலுடல் ஒருபுறமும் செல்லும் இடைப்பட்ட ஆக்ஷனில் (mixed action) வீசாதவரை பிரச்சினையில்லை என்ற ஓர் பார்வையும் உண்டு.
பயோமெக்கானிக்ஸுடன் பொருந்திப் போகாததாலேயே ஒருவர் காயமேற்படுவதற்கு வாய்ப்புள்ளவர் என்று சொல்லிவிட முடியாது. நிறைய விதிவிலக்குகள் உண்டு. ஜெஃப் தாம்சன் முழுக்க முழுக்க side - on ஆக்ஷன் உடையவர். எந்த அளவுக்கு side - on என்றால் பந்து வீச்சின்போது அவரது பின்னங்கால் விக்கெட்டைப் பார்த்தபடி இருக்குமாம். பும்ராவைப் போலவே அவருக்கும் பெரிய அளவில் ரன் - அப் கிடையாது. வேகத்திற்காகத் தோள் பகுதியைப் பெரிய அளவில் நம்பியிருந்த ஆக்ஷன் அவருடையது. ஒருவேளை தாம்சன் வழக்கமான ஆக்ஷன் உடையவராக இருந்திருந்தால் இன்னும் சில ஆண்டுகள் காயமின்றி விளையாடியிருக்கலாமோ என்று கருதும் டைசன், அதையும் உறுதியாகக் கூற முடியாது என்று கைவிரிக்கிறார்.
தென்னாப்பிரிக்காவின் மைக் ப்ரோக்டர், ஆஸ்திரேலியாவின் மேக்ஸ் வாக்கர், பாகிஸ்தானின் சொஹைல் தன்வீர் போன்றவர்கள் வழக்கத்திற்குத் மாறாக தவறான காலில் ஊன்றி வீசக்கூடியவர்கள். பயோமெக்கானிக்ஸ் முறைப்படி இது தவறு என்றாலும் மற்றவர்களிடமிருந்து அவர்களைத் தனித்துவப்படுத்தி விக்கெட்டுகளைப் பெற்றுத் தருகிறது.
இயல்பான திறமையும் தொழில்நுட்ப உத்திகளும்
கிரிக்கெட் என்பது வெறுமனே தொழில்நுட்பங்களாலும் அறிவியல் முறைகளால் மட்டும் ஆடப்படுவதல்ல என்று கூறும் டைசன் பயோமெக்கானிக்ஸ் முறைகள் ஒரு வீரரின் திறமையை கூர் தீட்டுவதாக அமைய வேண்டுமே தவிர அவரின் இயல்பான திறமையை மழுங்க வைப்பதாக மாறிவிடக் கூடாது என்கிறார். விவியன் ரிச்சர்ட்ஸுக்குக் கடற்கரை மணலில் ஆடிய ஒன் பிட்ச் விக்கெட் கிரிக்கெட், பாகிஸ்தானியர்களுக்கு தெருவில் ஆடும் tape ball கிரிக்கெட், ரோஹித் ஷர்மாவிற்கு சிமெண்ட் தரையில் ஆடிய கிரிக்கெட் என்று ஒவ்வொருவரின் தனித்துவத்திற்குப் பின்பும் மண் சார்ந்த அம்சம் ஒன்று உள்ளது. கிளாசிக்கலான கவர் டிரைவ்கள் மட்டும் அல்ல தோனியின் முரட்டுத்தனமான ஹெலிகாப்டர் ஷாட்டும் மாறி வரும் கிரிக்கெட்டின் ஒரு வண்ணமே.
பும்ராவின் ரன் - அப்பில் மட்டுமன்றி அவரது லோடிங்கிலும் பிரச்சினைகள் உண்டு. ஆனால் அதுவே அவரது பலமாகவும் உள்ளது என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் ஆகாஷ் சோப்ரா. பொதுவாக ஒரு வேகப்பந்து வீச்சாளரின் லோடிங்கின்போது அவரது பந்து வீசும் கையும் பந்து வீசாத கையும் ஒரு சைக்கிள் பெடல் போன்ற அமைப்பில் செயல்பட வேண்டும். அதாவது ஒன்று மேலே ஏறினால் மற்றொன்று கீழே இறங்க வேண்டும். ஆனால் பும்ரா லோடிங்கின் போது அவரது பந்து வீசாத கையானது மற்றவர்களைப் போல மேலே எழும்புவதோ கீழே வளைவதோ இல்லை. பந்து வீசாத கையின் இயக்கத்தைப் பார்க்கையில் பந்திற்குத் தயாராகும் மட்டையாளனின் டைமிங் பாதிக்கப்படுகிறது என்று பும்ராவின் ஆக்ஷன் குறித்த புதிரை உடைக்கிறார் சோப்ரா.
பயோமெக்கானிக்ஸ் விதிகளை மீறும் பும்ரா, தன்னைப் போலவே மீறிய ஷான் டெய்ட் போல தொடக்க காலத் தெறிப்புகளுக்குப் பின் மறையப் போகிறாரா அல்லது ஜெஃப் தாம்சன் போல வெற்றிகரமாக மிளிரப் போகிறாரா என்பது காலத்தின் கையில் உள்ளது.
Powered by Blogger.