சேடஸ்ட் ஸ்டாலின்: தமிழிசை விமர்சனம்!

பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று ஸ்டாலின் கூறிவரும் நிலையில், இதற்கு பதிலடியாக, “சேடஸ்ட் ஸ்டாலின்” என்று விமர்சித்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்.


கலைஞரின் சிலை திறப்பு விழா பொதுக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வரவில்லை, இறந்தவர்களுக்கு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை” என்று கூறி பிரதமர் மோடியை சேடிஸ்ட் என்று விமர்சித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை, பிரதமர் என்ற முறையில்தான் விமர்சிக்கிறேன் என்று ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்குப் பிறகு, சென்னை அரும்பாக்கத்தில் இன்று (டிசம்பர் 23) செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “கஜா புயலால் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவிக்கவில்லை என்று ஸ்டாலின் கூறிவருகிறார். உயிரிழந்த தமிழக மக்களின் குடும்பங்களோடு நான் நின்றுகொண்டிருக்கிறேன் என்று தெளிவாக தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். கஜா புயல் பாதிப்புக்கு என்னென்ன உதவிகள் வேண்டுமோ அதனை செய்துத் தருவதாக முதல்வரிடம் உறுதியளித்திருக்கிறார். ஆனால் இவற்றை மறைத்த ஸ்டாலின் மீண்டும் பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் பாஜகவை ஒழித்துவிட்டதாகவும், மற்ற இடங்களில் அழிக்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால், இனிதான் தமிழகத்தில் பாஜக விஸ்வரூபம் எடுக்கப்போகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், சேடிஸ்ட் பிரதமர் என்று சொன்னதில் உறுதியாக இருக்கிறேன் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லை என்று தெரிவித்த தமிழிசை, “லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுகுவித்த சேடிஸ்ட் மனப்பான்மை கொண்ட சோனியாவை மேடையில் வைத்துக்கொண்டு பிரதமரை சேடிஸ்ட் என்று கூறுகிறார் சேடஸ்ட் (saddest) ஸ்டாலின். இனி அவர் சேடஸ்ட் ஸ்டாலின் என்று அழைக்கப்படுவார். ஏனெனில் அவர் முன்மொழிந்திருக்கும் விஷயம் தோல்வியில் முடியப்போகிறது” என்றும் கடுமையாக விமர்சித்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo 

No comments

Powered by Blogger.