ஸ்ரீகாந்த் வேடத்தில் விஜய தேவரகொண்டா

தமிழ், தெலுங்கு திரையுலகில் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள விஜய
தேவரகொண்டா அடுத்ததாக பாலிவுட்டிலும் களம் காணவுள்ளார்.
ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘83’. இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. கபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அப்போதைய கேப்டன் கபில் தேவ்வாக ரன்வீர் சிங் நடிக்கிறார்.
83 திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் விஜய தேவரகொண்டா நடிக்கவுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அல்லு அர்ஜுன் இந்த வேடத்தில் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விஜய தேவரகொண்டா இணையவுள்ளார். அணியில் இடம்பெற்றிருந்த மற்ற வீரர்களின் கதாபாத்திரங்களுக்கு நடிகர்களை ஒப்பந்தம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் விஜய தேவரகொண்டா பாலிவுட் இயக்குநர் வாசன் பாலா இயக்கத்தில் நடிக்க விரும்புவதாகக் கூறியிருந்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தார். அந்தப் படத்தை கரண் ஜோஹர் இயக்குவதாகக் கூறப்பட்டிருந்தது. அதற்கு முன் அவர் 83 படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார்.
விஜய தேவரகொண்டா நடிப்பில் கீதா கோவிந்தம், டாக்ஸி வாலா ஆகிய படங்கள் இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. நோட்டா படம் மூலம் தமிழில் அறிமுகமான அவருக்கு அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. தற்போது டியர் காம்ரேட் படத்தில் அவர் ரேஷ்மிகாவுக்கு ஜோடியாக நடித்துவருகிறார்.
Powered by Blogger.