2017:‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு!

அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 22வது ஆண்டு “புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் எழுத்தாளர்கள் பா. வெங்கடேசன், ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகிய
இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது அளிக்கப்பட்டு வருகிறது. 2017 ஆண்டின் விருதுக்குரியவர்களாக எழுத்தாளர் பா. வெங்கடேசன் (புனைவெழுத்து), பேராசிரியர். ஆ. இரா. வேங்கடாசலபதி (புனைவறு எழுத்து) ஆகிய இருவரையும் நாடக ஆசிரியர் ‘வெளி’ ரங்கராஜன், கவிஞர் பெருந்தேவி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட நடுவர் குழு தேர்வு செய்துள்ளது. ஒவ்வொன்றும் ரூ 1,00,000 மதிப்புள்ள இவ்விருதுகள் சென்னை அல்லது தமிழகத்தின் வேறொரு நகரில் நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும்.
பா.வெங்கடேசன்
புதினம், கவிதை, சிறுகதை, குறுநாவல் எனப் படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் தேர்ந்த, அழகுணர்வுடனான ஆக்கங்கள் மூலம் கவனம் பெற்றவர் பா. வெங்கடேசன். “மொழிக்குள் இயல்பாகவே இருக்கும் இசைமையை உணரும்வண்ணம் வார்த்தைகளின் லயத்தைப் பின்பற்றியே என் கதைமொழி உருவாகிறது,” என்று கூறும் வெங்கடேசன் 1962ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். தற்போது ஓசூரில் வசிக்கிறார்.
“வெங்கடேசனின் புனைவுகள் கனவின் வண்ணத்தையும் கவித்துவத்தையும் சேர்த்துக் குழைத்த மொழியிலிருந்து உருவாகுபவை. அவரது புனைவெழுத்தில் வரலாற்றின் யதார்த்தக் கண்ணிகள், தனித்துவக் கற்பனையோடு இயல்பாக இயைந்து, மாய யதார்த்தப் பரப்புகளில் விரிவாக்கம் பெறுவதைக் கண்டுணரலாம். தமிழ்ச் சூழலிலிருந்து அந்நியப்படாமல் அதில் பொருந்தும் வகையிலான மாய யதார்த்த வகை மீபுனைவாக்க முயற்சிகளுக்கு முன்மாதிரியாகவும் ஊக்கம் தருபவையாகவும் அவர் படைப்புகள் அமைந்துள்ளன” என்று விளக்கு விருதுக்குழுவினர் தங்கள் குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
ஆ. இரா. வேங்கடாசலபதி
வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான ஆ. இரா. வேங்கடாசலபதி காலனியக் காலகட்டத்தில் தமிழ்ச் சமூகப் பண்பாடு மற்றும் இலக்கிய வரலாறுகள் பற்றிய ஆய்வுகளைச் செழுமையாக முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர், இலக்கிய, வரலாற்றுப் புலங்கள் சார்ந்து சீரிய பதிப்புப் பணியிலும் இடையறாது ஈடுபட்டுவருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் புலமைபெற்ற வேங்கடாசலபதி, “இலக்கிய வாசிப்பினூடாக வரலாற்று ஆராய்ச்சிக்குள் நுழைந்தவன் நான்” என்று கூறுகிறார்.
வேங்கடாசலபதி குடியாத்தத்தில் 1967ஆம் ஆண்டு பிறந்தவர். தமிழ்ப் பதிப்புலகத்தின் சமூக வரலாறு பற்றிய ஆய்வுக்காக, புது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொடங்கி, சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் எனச் சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பணியாற்றியவர். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கிறார்.
1996 ஆம் ஆண்டு முதல் விளக்கு விருது வழங்கப்பட்டுவரும் நிலையில் கடந்த ஆண்டு ராஜ் கௌதமன், சமயவேல் ஆகியோர் பெற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.