இயற்கை அனர்த்தமும் சமூக செயற்பாடும் அரச உத்தியோகத்தரும்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏற்பட்ட அனர்த்தமும் அதில் பாதிக்கப்பட்ட மக்களின் அழிவும் இன்னும் எந்த ஒரு அரச
அதிகாரிகளாலும் சரியான முறையில் கணித்து கூறப்படாத நிலையில் இளைஞர்களின் அணிகளே மக்களின் தேவையினை பூர்த்திசெய்து கொண்டு இருக்கின்றது.அனர்த்தம் நடந்து 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அரசாங்கம் கணக்கெடுப்பு நடத்திக்கொண்டு இருப்பதாக கூறி வருகின்றது. அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவினை வழங்குமாறு குறித்த அரச அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்து இருந்தாலும் வேறு சமூக நிறுவனர்கள் உணவினை வழங்கியுள்ளதாகவும் அதனால் தாம் வழங்கவேண்டிய தேவை இல்லை என்ற மெத்தன போக்கும் காணப்படுவதாக கூறப்படுகின்றது...
கடமையின் நோக்கில் இருந்து
விலகியுள்ள பல அரச ஊழியர்கள் மாலை ஆறு மணிக்கு பின்னர் தமது தொலைபேசி இலக்கங்களை நிறுத்தி வைத்துள்ளதாகவும் அறியப்படுகின்றது . . மக்களின் உணவு தேவையினை தன்னார்வு  தொண்டு நிறுவனங்களே பூர்த்தி செய்வதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றது.

அனர்த்தம் தொடங்கிய நாளில் இருந்து களத்தில் இருக்கும் விண்மீன்களின் செயற்பாட்டினை பலரும் அறிவார்கள். பல தொண்டு நிறுவனர்கள் தம்மால் முடிந்த உதவிகளை தனியாகவோ அல்லது விண்மீன்கள் மூலம் இணைந்தோ செய்வதாக கள நிலவர செய்திகள் கூறுகின்றன.

பாடசாலைகளில் தங்கியிருக்கும் குடும்பங்களின் வீடுகளில் வெள்ளம் முற்றாக வழிந்தோடி வழமைக்கு திரும்பாத நிலையில் மக்களை அவர்களின் சொந்த வீடுகளுக்கு அனுப்பி நிலைமை கட்டுக்குள் அடங்கி விட்டதாக நாடகமாட குறித்த இடங்களில் உள்ள அரச அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.வீடுகளை விட்டு வந்து முகாம்களில்  தங்கியிருக்கும் குடும்பங்களின் வீடுகளில் எஞ்சியுள்ள சில பொருட்கள் திருடப்படுவதும் நடந்தேறுகின்றது.

நடந்து முடிந்த அனர்த்தத்தின் அளவு ஏதுமற்றது போன்று காட்டி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் வழங்காமல் நடந்து முடிந்த முள்ளிவாய்க்காலின் அவலம் போல இன்றைய சம்பவங்களையும் மூடி மறைத்துவிடவே அரசாங்கம் முனைகின்றது. அதற்கு ஏற்றது போல பாடசாலை தொடங்கப்போகின்றது கல்வி பொருட்களை வழங்க நாம் தயாராகின்றோம் என்று சில சமூக நிறுவனங்களும் அறிக்கை விட ஆரம்பித்து இருக்கின்றது....

இதனை எல்லாவற்றையும் தவிர்த்து....
எவ்வளவு மக்கள் வெள்ள அனர்த்தத்தால் முற்றாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள் ?
எந்த எந்த கிராம மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் ?
எந்த எந்த கிராம மக்கள் பகுதியளவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் ?
வெள்ள அனர்த்தத்தால் ஏதும் உயிரிழப்பு ஏற்பட்டதா ?
கால்நடைகளின் இழப்பு, விவசாய நிலைகளின் அழிவு, தனிப்பட்ட ஒவ்வொருவரினதும் சொத்துக்களின் அழிவு, பற்றிய சரியான தகவல்களை தெளிவாக பதியும்படி வேண்டுகின்றோம்.

ஊடகங்கள் என்ற போர்வையில் உள்ள எல்லோரும் வெள்ள அனர்த்தத்தின் தகவல்களை இருட்டடிப்பு செய்து இருப்பது மறுக்கமுடியாத உண்மை என்றும் இன்றுவரை மக்களின் குறைகளை கண்டறிய நேரில் வராத ஊடகங்கள் பலவும் இன்று நாமல் ராஜபக்ச விஸ்வமடு பகுதியினை பார்வையிட சென்றவுடன் அவரின் பின்னால் அணிதிரண்டு சென்றது மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

நிவாரணம் சேர்ப்பதில் முழுமூச்சாக ஈடுபடும் ஊடகங்கள் இழப்பு பற்றிய செய்திகளை சேமிப்பதில் முனைப்பு காட்டியிருக்க தவறியுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது கருத்துக்களை பதிந்திருந்தார்கள் .

அது மட்டுமன்றி பாதிக்கப்பட்ட மக்களின் குறுகிய கால நீண்டகால வாழ்வுரிமை திட்டங்கள் என்ன என்பதனையும்
பாதிக்கப்பட்ட மக்களின் சுயதொழில்வாய்ப்பு திட்டங்கள் அடிப்படை வாழ்வாதார திட்டங்கள் என்ன என்பதனையும் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுகின்றோம்.
பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள் என்ற இன  குறியீடுகளை தாண்டி மக்கள் என்ற நோக்கிலேயே எமது கேள்விகளை உங்களை நோக்கி முன்வைக்கின்றோம் ...

ஆசிரியை  பீடம்
 நிலா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.