சைவ மகா சபை ஏற்பாட்டில் வருடாந்த பாத யாத்திரை -சம்பில்துறையில் இருந்து சிதம்பரம் வரை

அகில இலங்கை சைவ மகா சபையால் ஏற்பாட்டில் ஆன்மீக எழுச்சிப் பாத யாத்திரை இன்று  (16.21.2018) ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
சுழிபுரம் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்தில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் பாத யாத்திரை மாலை 6.00 மணியளவில் காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தில் நிறைவடையும்.

சைவத் தமிழ் மக்களின் சிறப்பான விரதமான திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் இப்பாத யாத்திரை நடத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் இளைஞர்கள் வழிதவறிப் போய்கொண்டிருக்கும் நிலையில், அவர்களை மீட்டு ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளவைத்து நல்வழிப்படுத்துவதுடன் சைவ சமயத்தின் தொன்மைகளை எடுத்தியம்பும் நோக்கோடு இப்பாத யாத்திரை நடத்தப்படுகின்றது.

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் சம்பில்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 21 அடி உயரமான சிவபெருமானின் திருவுருவச் சிலைக்கு முன்பாக காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகும் பாத யாத்திரை சாந்தை சிதம்பரேஸ்வரர் ஆலயம், சாந்தை வீரபத்திரர் ஆலயம், பனிப்புலம் முத்துமாரி அம்மன் ஆலயம், பறாளாய் விநாயகர் - முருகன் ஆலயங்கள், சுழிபுரம் மத்தி கறுத்தனாதோட்டம் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம், சுழிபுரம் மேற்கு ஸ்ரீ ஹரிகரபுத்திர ஐயனார் ஆலயம், சுழிபுரம் பெரியபுலோ ஞானவைரவர் ஆலயம், மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர், முருகன் ஆலயங்கள் ஆகியவற்றைத் தரிசித்தவாறு பொன்னாலைச் சந்தியிலுள்ள நாராயணன் தாகசாந்தி நிலையத்தைச் சென்றடையும்.

பாத யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுக்கு நாராயணன் தாகசாந்தி நிலையத்தினரின் ஏற்பாட்டில் மகேசுர பூசை இடம்பெறும்.

தொடர்ந்து அங்கிருந்து காரைநகர் - வலந்தலை மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயம், கிழவன்காடு முருகன் ஆலயம் ஆகிவற்றைத் தரிசித்தவாறு காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தைச் சென்றடையும்.

கடந்த வருடங்களைப் போன்று இம்முறையும் மலையகம், வவுனியா, மட்டு. – அம்பாறை ஆகிய இடங்களைச் சேர்ந்;த பக்தர்களுடன் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் இருந்து வரும் பக்தர்களும் கலந்துகொள்வார்கள்.

பாத யாத்திரையில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்களை நாளை காலை காலை 7.00 மணிக்கு சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்திற்கு வருகைதருமாறு அகில இலங்கை சைவ மகா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.