விடிய விடிய புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழகத்தில் கட்டுப்பாடு!

சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் கேளிக்கை
விடுதிகளில் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களை அனுமதிக்க வேண்டும் என காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம். அதேபோன்று, இந்தாண்டும் அதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று (டிசம்பர் 26) நடைபெற்றது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூடுதல் ஆணையர் மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட ஹோட்டல் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக காவல் துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
“நட்சத்திர ஹோட்டல்களில் நள்ளிரவு 1 மணி வரை தான் கொண்டாட்டங்கள் இருக்க வேண்டும். அங்கு சிசிடிவி கேமராக்கள் முறையாகச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும். நீச்சல் குளத்தின் மேலேயோ அல்லது அருகிலோ மேடை அமைக்கக் கூடாது. அதிகளவில் மது குடிப்பவர்களைத் தனியார் கால் டாக்ஸிகள் மூலம் பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதனால், கார்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். போதிய வாகனங்கள் இல்லையென்றால், ஹோட்டல் நிர்வாகிகள் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நட்சத்திர ஹோட்டல்களுக்கு வரும் வாகனங்கள் குறித்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அங்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும். இதற்காகப் பெண் காவலர்களை பணியமர்த்த வேண்டும். தனியார் அலுவலர்களை பணி அமர்த்தினால், அவர்கள் குறித்த விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும்” என காவல் துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.