மெல்போர்ன் டெஸ்ட்: புல்லின் நுனியில் ஆட்டத்தின் புன்னகை!

அரவிந்தன்

பாக்ஸிங் டே டெஸ்ட் என்பது ஆஸ்திரேலியர்கள் மிகவும் பெருமிதத்துடனும் விருப்பத்துடனும்
எதிர்கொள்ளும் போட்டி. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் தொடங்கும் போட்டியை பாக்ஸிங் டே டெஸ்ட் என்பார்கள். நாளைக் காலை பூவா தலையா போடுவதற்காக நாணயம் மேலே செல்லும்போது அனைவரது கண்களும் ஆடுகளத்தின் மீதே இருக்கும். புற்கள் கணிசமான அளவில் விட்டுவைக்கப்பட்டுள்ளன. எனவே, ஆடுகளத்தில் வீசப்படும் பந்து சீற்றம் கொண்டு மேலெழும். மட்டையாளர்களிடமிருந்து விசித்திரமான நடன அசைவுகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கலாம்.
கடந்த ஆண்டு மெல்போர்ன் ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஆஷஸ் தொடர் போட்டி டிராவில் முடிந்தது. பந்து வீச்சுக்கு ஒத்துழைக்காத அந்த ஆடுகளத்தில் ரன்கள் ஓரளவு எளிதாகவே குவிக்கப்பட்டன. போதாக்குறைக்கு மழையால் கிட்டத்தட்ட 3 மணிநேர ஆட்டம் தடைப்பட்டது. ஆட்டம் முடிந்தபின் ஆடுகளத்தை ஆராய்ந்த ஐசிசி குழுவினரின் அறிக்கை ஆடுகளத்தைப் பற்றி அதிருப்தி தெரிவித்தது. அதன் விளைவாகத்தானோ என்னமோ இந்த முறை வேகப் பந்துக்குச் சாதகமான பிட்ச் போடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எந்த அளவுக்கு என்றால், டாஸ் வெற்றிபெறும் கேப்டன் பந்து வீச்சைத் தேர்ந்தெடுக்கக்கூடும் என்னும் அளவுக்குப் பந்து வீச்சுக்கு இந்த பிட்ச் சாதகமாக இருக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.
இத்தகைய ஆடுகளத்தில் இந்தியா துணிச்சலான சில முடிவுகளை எடுத்துள்ளது. மோசமாக ஆடிவரும் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளார்கள். மாயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்குவார்கள். மாயங்க் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் களம் இறங்குகிறார். 6ஆம் நிலையில் ஆடிவந்த விஹாரி முதல் முறையாகத் தொடக்க ஆட்டக்காரராக ஆடுகிறார். இடைநிலை வரிசையில் ரோஹித் ஷர்மா மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். பந்து வீச்சில் உமேஷ் யாதவின் இடத்தில் ரவீந்திர ஜடேஜா.
புதிய தொடக்க இணையர்களை நம்பிக் களம் இறங்கும் இந்தியா மீண்டும் சத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே ஆகிய மும்மூர்த்திகளை நம்பியே களம் காண்கிறது என்று சொல்லலாம். தொடக்க இணையரும் ரோஹித், ரிஷப் பந்த், ஜடேஜா ஆகியோரும் இந்த மும்மூர்த்திகளுக்குக் கை கொடுத்தால் மட்டை வீச்சில் மரியாதையான ஸ்கோரை எட்டலாம். பந்து வீச்சைப் பொறுத்தவரை இந்திய அணி வலுவாகவே உள்ளது. பெர்த்தில் செய்த தவறை – சுழலர் இல்லாமல் களமிறங்கியது – இங்கே செய்யவில்லை. எனவே வெற்றியின் சாவி மட்டையாளர்களின் கைகளில்தான் உள்ளது.
ஆஸ்திரேலியா பீட்டர் ஹேண்ட்ஸ்கம்புக்குப் பதில் மிட்செல் மார்ஷை இறக்குகிறது. விரலில் அடிபட்டிருக்கும் ஆரோன் ஃபிஞ்ச்சும் ஆடுகிறார். ஒப்பீட்டளவில் பலவீனமான மட்டை வரிசையைக் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா போராடி ரன் குவித்துவருகிறது. குறிப்பாகக் கடைநிலை மட்டையாளர்கள் எடுக்கும் ரன்கள் அணிக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. பெர்த்தைப் போலவே இங்கும் ஆஸ்திரேலிய மட்டைகள் பிரகாசித்தால் தொடரில் முன்னிலை பெறும் இந்தியாவின் விருப்பம் கனவாகவே முடிந்துவிடும். ஏனென்றால், ஆஸ்திரேலியப் பந்து வீச்சு வலுவாகவே உள்ளது.
இரு அணிகளும் வலுவான பந்து வீச்சைக் கொண்டிருக்கும் நிலையில் மட்டை வீச்சில் எந்த அணியின் கை ஓங்குகிறதோ அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் புதியவர்கள் என்பது ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமான அம்சம். இந்தக் குறையை இந்தியா எப்படி ஈடுகட்டப்போகிறது என்பதிலும், எதிரணியின் கடைநிலை மட்டையாளர்களை விரைவில் சுருட்டுவதிலும்தான் அதன் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.
1 -1 என்னும் நிலையில் டெஸ்ட் தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வெல்லும் அணி தொடரைத் தோற்க வாய்ப்பில்லை என்னும் நிலையில் இன்னொரு விறுவிறுப்பான போட்டியை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். ஆடுகளத்தில் உள்ள புற்கள் தம்மைத் தாக்க வரும் பந்துகளுக்காகக் காத்திருக்கின்றன.

No comments

Powered by Blogger.