புத்தாண்டு வாகன சோதனை எச்சரிக்கை!

புத்தாண்டை முன்னிட்டு இன்று (டிசம்பர் 26) முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை வாகன சோதனையைத் தீவிரப்படுத்தத் தமிழக டிஜிபி ராஜேந்திரன்
காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, சென்னையில் போலீஸ் அதிகாரிகளுடன் தமிழக டிஜிபி ராஜேந்திரன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, புத்தாண்டு சமயத்தில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் நோக்கில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுமாறு அனைத்து மாவட்ட காவல்துறைக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், மக்கள் அதிகம் கூடும் இடங்களான வழிப்பாட்டுத் தலங்கள், மால்கள் ஆகிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு போட வேண்டும். சென்ட்ரல், கோவை உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் 24மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட வேண்டும். சந்தேகப்படும் நபர்களிடம் உரிய விசாரணை நடத்தி அது தொடர்பான தகவலை தலைமையிடத்துக்கு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர இன்று முதல் புத்தாண்டு இரவு வரை வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும், இதனால் பண்டிகை காலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அந்த வகையில், தமிழகம் முழுவதும் பேருந்து நிலையங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், சுங்கச்சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு, சந்தேகப்படும் விதத்தில் வரும் வாகனங்களை சோதனை நடத்தவும், இதற்குத் தனியாக போலீசாரை நியமிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.