யாழில் நான்கு மாணவர்கள் கைது

ஆசிரியரின் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் பிரபல பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


யாழ். நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி பயிலும் அரியாலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நால்வரே நேற்று (புதன்கிழமை) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, “யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதியில் வசிக்கும் ஆசிரியரின் வீட்டிற்கு கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர் ஒருவர் வந்துள்ளார்.
தினமும் வீட்டிற்கு சென்றுவந்த அவர் பல தடவைகள் வீட்டில் இருந்த மடிக் கணினி மற்றும் தொலைபேசி காசு உள்ளிட்ட பொருட்களை திருடிவந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மாணவன், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு வங்கி ஏ.ரி.எம் அட்டையை திருடிச் சென்றதுடன், இரண்டு வாரங்களுக்குள் பூட் சிற்றி ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளார்.
அதேநேரம், ஏ.ரி.எம். திருடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த மாணவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்துள்ளார்.
தனது நண்பர்களுடன் யாழ்.நகரில் உள்ள விருந்தினர் விடுதிக்கு சென்று அங்கு மதுபானம் அருந்தி உணவுகள் உட்கொண்டு பெரும் ஆரவாரமாக இருந்ததுடன் புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.
இந்த தகவலை அறிந்த பொலிஸார் அவர்களைப் பின்தொடர்ந்து, வீட்டிற்குச் சென்று அவர்களது வீட்டில் வைத்து நால்வரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.