பாடு நிலாவே பாகம் 8



கண்களைத் துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்துகொண்டான் காங்கேசன். “ சாது---இதெல்லாம் ஒரு விசயமே இல்ல,
இதவிட மோசமா பாதிக்கப்பட்ட எத்தனையோ பேர் எவ்வளவோ சாதிச்சிருக்கிறாங்க, உனக்குத் தெரியாதா, சாதனைகளுக்கு உடல் வலிமையைவிட மனவலிமைதான் ரொம்ப முக்கியம், அது உன்கிட்ட நிறையவே இருக்கு, சாதனா எப்பவும் சாதனைப் பெண்தான், அப்பிடித்தானே” என்றான்.

சின்னதாய் ஒரு புன்னகை அவள் உதடுகளை அலங்கரித்தது. நேரம் போவது தெரியாமல் சுவாரஷ்யமாய் தொடர்ந்தது அவர்களின் பேச்சு. இடம்பெயர ஆரம்பித்தது முதல், பதுங்குழிக்குள் வாழ்ந்ததையும், வெறுமனே அரிசியை கொதிக்கவைத்து கஞ்சி குடித்ததையும் கொப்பராவை அரைத்து கறி சமைத்ததையும் ஒரு பவுண் ஐந்தாயிரத்திற்கு விற்று ஒரு கிலோ அரிசி இரண்டாயிரம் ரூபாவிற்கு வாங்கிய கொடுமையையும் சொன்னாள்.

“அப்படீன்னா நீ உங்க குடும்பத்தோடதான் இருந்தியா சாது?” காங்கேசனின் கேள்விக்கு தலையை அங்கும் இங்குமாய் ஆட்டினாள் சாதனா.

“நான் எப்பவும் வைத்தியசாலையிலயே இருந்திடுவன், என் சேவையில என் உயிர் போனாலும் பரவாயில்லை என்றுதான் நினைப்பேன், அப்பப்ப வந்து அப்பா, சித்தி, தம்பிமார் ரெண்டுபேரையும் பாத்திட்டுப் போயிடுவன், உனக்குத்தான் தெரியுமே, என் சித்திக்கு என்னைக் கண்டாலே ஆகாது, அப்ப இருந்தே தனிய வாழ்ந்து பழகிப்போச்சு” என்றவள், “ஆனா , இப்பிடி என்னை தனியாவிட்டிட்டு அவையள் மட்டும் இவ்வளவு தூரமா போவாங்கன்னு நான் நினைக்கவே இல்லடா”
மீண்டும் விம்மியவளின் கரங்களை இறுகப் பற்றிக்கொண்டான், ‘உனக்கு நானிருக்கிறேன்’ என்பது போல.

“கடைசி நாள் வரும் போது எவ்வளவு மக்கள் கண்ணுக்கு முன்னால செத்துப்போனாங்க தெரியுமாடா, கைகால் இயலாதவங்க, என்னையும் தூக்கிட்டுப்போங்க, என்னையும் தூக்கிட்டுப் போங்க, என இரந்தது இப்பவும் என் மனசில நிக்கிது, என்னால ஒரே ஒரு பெண்ணைத்தான் அழைச்சிட்டு வரமுடிஞ்சுது, ஆனா, பாதி வழியில பக்கத்தில விழுந்த ஷெல் பட்டு அவ அதிலயே குருதி வெள்ளத்தில மிதந்தா, நான் முதலுதவி செய்யலாம்னுதான் நினைச்சேன், ஆனா பின்னால வந்த ஆக்கள் கத்திக்கூச்சல் போட்டதால முடியலடா, ஆனாலும் வயசான ஒரு அம்மா என் பின்னால வந்து என் கையைப் பிடிச்சுக்கொண்டு, என்னையும் கூட்டிப்போம்மா என்றா, அந்த அம்மா கையை நான் விடவே இல்லடா, கடைசி வரைக்கும் கூட்டிவந்துடணும்னுதான் நினைச்சேன், அப்பதான், எங்கிருந்தோ வந்த சன்னம் என் கண்ணிலையும், காலிலையும் பட்டுத் தெறிச்சது, நான் செத்திட்டதா தான் நினைச்சன், அதுக்குப்பிறகு எனக்கு எதுவுமே நினைவில்லை, நான் கண்விழிச்சபோது புல்மோட்டை என்ற இடத்தில வைத்தியசாலையில இருந்தன்” முகம் வாட மனம் கனக்க சொல்லிமுடித்தாள்.
சாதனாவை அழைத்துச் செல்வதற்காய் பராமரிப்பாளர் வந்தபோதுதான் இரண்டு மணிநேரம் கடந்துவிட்டதை உணர்ந்தனர்.
சட்டென்று சாதனாவின் கரத்தை இறுகப்பற்றிய காங்கேசன், “சாது, இத்தனை நெருக்கடியில் எப்பவாவது, என்னை நினைச்சிருக்கிறியா?” என்றான்.

“ஒருதரம் ரெண்டுதரம் இல்லடா, எப்பவும் உன்னை நினைச்சிருக்கிறன், அந்த கடைசி மணித்துளியில கூட உன் முகம் மட்டும் தான் என் நினைப்பில் இருந்தது, எனக்கும் உனக்குமான நட்பு அத்தனை சாதாரணமானது இல்லடா” என்றாள்.

இறுக்கமாய் ஒரு தடவை அவள் கையைப் பற்றியவன், மௌனமாய் இருக்க,
“நீ உடனே போய்டுவியாடா?” என்றாள்.

“இல்லை, இங்க எங்கயாவது விடுதியில நிப்பன், ம்---நாளைக்கு வர்றேன், என்றவன் அப்போதுதான் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த இசையாளனைப் பார்த்தான். “சாது, என்னோட வந்திருக்கிறது மும்பையில என்னோட படிச்ச என் நண்பன், , இசையாளன், அவன் இலங்கைதான் ” என அறிமுகம் செய்தான்.

“ஐயோடா, இவ்வளவு நேரமும் அவரைக் கவனிக்காமத்தான் இருந்தியா” என்றாள்.

“அதனால என்ன, நான் பக்கத்திலதான் இருந்தேன், நீங்க சொன்னதை எல்லாம் கேட்டேன் சாதனா” என்றான் இசையாளன்.

“நண்பேன்டா---அணைத்துச் சிரித்தான் காங்கேசன்,
வெளியே சிரித்தாலும் உள்ளே வலித்தது காங்கேசனுக்கு,

அவன் ஆராதித்த தேவதையை சக்கர நாற்காலி தத்தெடுத்துக்கொண்டதே, அதனால் என்ன, அவள் சிறகடிக்க வேண்டும், அவன் கரம் கொடுத்துவிடுவான், எண்ணங்கள் உறுதியானது அவனுக்குள்.

தொடரும்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.