அமைச்சு கிடைக்காத பட்சத்தில் பதவியை ஏற்க மாட்டேன்

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வகையில், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு ஒன்று கிடைக்காத பட்சத்தில்,
தான் அமைச்சு பதவியை ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போது, ஊடகவியலாளர்கள் அமைச்சு பதவி தொடர்பில் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில், ‘’கடந்த காலங்களில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் போது ஜனநாயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற வகையில் ஜக்கிய தேசிய கட்சிக்கு மலையக மக்கள் முன்னணி தனது முழுமையான ஆதரவை வழங்கியிருந்தது.
அதன் அடிப்படையில் தற்பொழுது மீண்டும் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசியல் குழப்ப நிலைமை ஏற்பட்ட சமயத்தில் மலையக மக்கள் முன்னணி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொழுது, அவர் எங்களிடம் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி ஒன்றையும் பிரதி அமைச்சு பதவி ஒன்றையும் வழங்குவதாக ஏற்றுக் கொண்டார்.
ஆனால் அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக மாறியதன் காரணமாக நாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எங்களுடைய கட்சி சார்பாக கடிதம் ஒன்றை வழங்கியிருந்தோம்.
ஆனால் தற்பொழுது அது தொடர்பில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளதுடன், எனக்கு ஏதோ ஒரு புதிய அமைச்சை உருவாக்கி தருவதற்கு முயற்சி செய்துவருவதாகவும், பிரதி அமைச்சு தொடர்பில்  காத்திரமான முடிவும் இல்லாமல் இருப்பதை அறியமுடிகின்றது.
அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் மலையக மக்கள் முன்னணி என்ற வகையில் நாம் அமைச்சு பதவிகளை பெற்றுக் கொள்ள மாட்டோம், அதே நேரத்தில் எதிர்கட்சிக்கு சென்று அமரவும் மாட்டோம், தொடர்ந்தும் எங்களுடைய ஆதரவை ஜக்கிய தேசிய கட்சிக்கு வழங்குவதற்கும் மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.