ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்

`2.0' படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் `பேட்ட' படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகிறது.

`பேட்ட' படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இந்த படம் லஞ்சம், ஊழலுக்கு எதிரான கதையம்சம் கொண்டது. `முதல்வன்' பட பாணியில் முருகதாஸ் ஸ்டைலில் திரைக்கதை இருக்கும் என்கின்றனர். ரஜினி அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் இந்த படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை முடித்த பிறகு ரஜினி அடுத்ததாக `சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
வினோத் சொன்ன ஒரு கதை ரஜினிக்கு பிடித்துபோனதாகவும், அதன் திரைக்கதையை மேலும் நன்றாக செதுக்கும்படி அவர் அறிவுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் தனுசும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வினோத் தற்போது, அஜித்தை வைத்து `பிங்க்' படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்கி வருகிறார். தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த இரு படங்களையும் முடித்த பிறகு ரஜினி - வினோத் கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ், எச்.வினோத் இயக்கும் இரு படங்களையும் முடித்த பிறகே ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.