பசுமையான நினைவுகளில் பிரியத்தோடு ..!

ஒரு பிரியம் குரல்வழியாகவோ
மொழிவழியாகவோ பூக்கலாம்.
இல்லையில்லை உதிக்கலாம்.
பூப்பவை மலர்கள் போன்றதால்
அவை உதிர்ந்து விடும்.
உதிர்ந்தவை மீண்டும் மலர்வதில்லை.ஆதலால்
உதித்தலே மிகப்பொருத்தம்.
உதித்தல் இரவும் பகலும் போன்றது.
மறைந்தாலும் தோன்றும்.
ஒரு பிரியம் குரல்வழியாகவோ
மொழிவழியாகவோ உதிக்கலாம்.


குரல் மென்மை பொருந்தியதாகவோ
கரகரப்பாகவோ இருக்கலாம்.
அந்தக்குரல் சிலவேளை கடந்தவர்களின்
ஞாபகமூட்டலாக இருக்கலாம்.
அர்த்தம் பொதிந்த புதிய உறவின் மலர்வுக்கு


காரணமாகவும் இருக்கலாம். இதில்
மொழி இரட்டைக்கிளவி போல
சந்தமூட்டும். சரித்திரத்தில் ஒரு
புனித ஆத்மாவை தன்னோடு அணைக்கும்.
உறவின் நிலைத்திருப்புக்கு வலுச்சேர்க்கும்.


பிரியமாய் இணைந்த உறவுநிலை
பின்னொருகால் புரிதல் குழப்பத்தால்
பிரியலாம். பிரிந்தவை மீண்டும் புரிதலின் தவறுணர்ந்து
சூரிய உதயம் போல் உதிக்கலாம். உதிக்காமலே போவதெனில்
ஆன்மாக்களின் இறுதிப்பிரளயமாயும்
ஆகலாம். காலத்தொடுகை நீள்கையில்
காணமலும் போகலாம்.


ஆனாலும்,
குரலும் மொழியும் சங்ககாலச் செய்யுள்களின் சந்தத்தைப்போல சுவையும்
தன்னீர்ப்பும் கொண்டவை என்பதால்
நினைவுச்செழுமையில் புல்வெளி பாய்ந்த
பனித்துளிகளாய் குளிர்ச்சியூட்டும்.
அந்த அற்புத நினைவெழுகையின் இயலாமை வெப்பக்கலங்களின்
சூட்டினால் உள்ளத்தை
எரிக்கையில் நீராவிச்சூடாக கண்ணீர்த்துளிகள் இமைகளை இளக்கி
கன்னங்களை உராய்ந்தோடும்.நேசம் என்பது நினைவின் தொடர்ச்சி.
இறப்புவரை மனதோடு உறவாடும்
முற்றுப்பெறாத நிகழ்ச்சிநிரல்.
பேருந்தில் தரிசித்த சில மணித்தியால
உறவுகளே கடந்துவிட முடியாத
நினைவாகிப்போவதுமுண்டு.


குரலும் மொழியும் ஒரு பிரியத்தை
ஈன்ற பின் திருமுகத்தேடல் இயல்பானதே.
முகங்களைப் புகைப்படங்கள் மூலம்
உறுதிப்படுத்தலாம். நிஜமாகவும் நேரில் காணலாம்.
நேசத்தின் சக்தி பெருவெளி போன்றது.
அது கிளைகளையும் சுற்றத்தையும் தேடும்.


நேசப்பெருவெளியில் தன்னையும்
இணைத்து நடைபோட சிந்திக்கும்.
பசுமையான நினைவுகளில் பிரியத்தோடு பிரியமாக நினைக்கும்.
பிரிவினைகளும் ஏற்றத்தாழ்வும் நேசத்துக்கு கிடையாது.


புரிதல்பிழை மறைதலுக்கு காரணமாகி, ஒரு உதயத்துக்கு அத்திவாரமானால்,
இந்த உலகம் பசுமையாக குளிர்ச்சிதரும்.
தலைக்கு மேலே பரந்த வானம்
மனச்சிறகசைக்க வலுச்சேர்க்கும்.
நிலவு கதைபேசும். ஒரு ஆன்மா
புதிய கீதத்தைப்புல்லாங்குழல் இசையாக
உலகத்துக்கு வரமாக்கும்.
பிரியங்கள் பிரியாத வரமாக வரலாற்றை அழகூட்டும்.

வன்னிமகள் எஸ்.கே.சஞ்சிகா

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.