கிழக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை

கிழக்கு மாகாணத்தில் இன்றைய தினம்(சனிக்கிழமை) மழையுடனான காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

கிழக்கு கடற்பரப்புகளில் சிறிதளவான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மற்றும் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.