பாடு நிலாவே பாகம் 10
























கொழும்பு விமான நிலையத்தில் பெற்றோரின் வருகைக்காய் காத்திருந்தனர் காங்கேசனும் இசையாளனும்.
புன்னகை ததும்ப வந்துசேர்ந்த பெற்றோரைக் கண்டதும் குழந்தைபோல குதூகலித்த காங்கேசன், அன்போடு தாயைக் கட்டிக்கொண்டான். மகனின் தலைகோதி, முத்தமிட்ட தாய்,
“காங்கேசன், இப்பவே யாழ்ப்பாணம் புறப்படலாம், எனக்கு உடனே சாதனாவைப் பாக்கணும்டா,” என்றார்.


“அன்ரி, என்ன நீங்கள், வீட்டுக்குப்போய், ஓய்வெடுத்திட்டு, பிறகு போகலாம்” என்றான், இசையாளன்.
“இல்லப்பா இசைக்கண்ணா, முதல்ல சாதும்மாவைப் வைப்பாத்திட்டு அப்புறமா, வரும் போது உங்க வீட்டுக்குப் போகலாம், இப்ப உடனே யாழ்ப்பாணம் போகலாம்” என்றார்.
“சாதனா, உங்களைப் பாக்க ஆக்கள் வந்திருக்கினம்” புதிதாக வேலைக்கு இணைந்திருந்த பராமரிப்பு பெண் சொன்னதைக்கேட்டதும்,


“என்னைப் பாக்கவா, என்னைப்பாக்க யார் வந்திருக்கினம், காங்கேசன் தான் போயிட்டானே” சொன்னபடியே மெல்ல படுக்கையை விட்டு எழுந்து கொண்டாள் சாதனா. பழையபடி சோர்வும் ஆற்றாமையும் குடிவந்திருந்தது அவளிடம். காங்கேசன் கொடுத்த தெம்பை அவனே எடுத்துச்சென்றுவிட்டது போல உணர்ந்தாள், சாதனா.

இல்லை, உங்களைப்பாக்கத்தான், சிஸ்ரர் உங்களைத்தான் கூட்டிவரச் சொன்னவா”
சட்டென்று தலையைச் சரிசெய்து, அருகிலிருந்த மேசையில் தடவிப்பார்த்து மெலிதாக கிறீம், பவுடர் பூசிக்கொண்டாள். இவையெல்லாம் காங்கேசன் வந்தபோது கட்டாயமாக வாங்கிக்கொண்டுவந்து கொடுத்தவை என்பதை நினைத்தபோது மனம் கனத்தது அவளுக்கு.
தூரத்தில் வரும் போதே சாதனாவைக் கண்டுவிட்ட காங்கேசனின் தாயார், அழுகையை அடக்க வாயைக் கைகளினால் பொத்திக்கொண்டார்.
“அம்மா ---- “ என்றபடி தாயின் கரங்களைப் பற்றி, தலையை ஆட்டினான் காங்கேசன்.

அருகில் வந்துவிட்ட சாதனாவைக் கண்டதும் மகனின் எச்சரிக்கையையும் மீறி “சாதனா அம்மா” எனக்கட்டித்தழுவி கதறி அழுத தாயாரைத் தடுக்கும் வழிதெரியாது நின்றான் காங்கேசன்.
“அம்மா ---“ குரலில் காங்கேசனின் தாயாரை அடையாளம் கண்டுகொண்டவள், விம்மி விம்மி அழுத சாதனாவைக் கண்டபோது இதயம் பல மடங்கு வலிகண்டது காங்கேசனுக்கு. தாயாரையும் அவளையும் தேற்ற எண்ணியவன், “ அம்மா, முதல்ல கதிரையில இருங்க, என்றபடி கதிரையை இழுத்து தாயாரின் அருகில் வைத்தான்.

சாதனாவின் அருகில் அமர்ந்துகொண்ட காங்கேசனின் தாயார், “சாதனா, என் கண்ணே!” என்றபடி அவளை தன் நெஞ்சில் சாய்த்துக்கொண்டார்.
அரவணைப்பு, ஆறுதல் தேடி யாரையும் நாடாத, நாட விரும்பாத சாதனாவா, இப்படி தாயின் மடிதேடும் கன்றுக்குட்டிபோல நெகிழ்ந்து கிடக்கிறாள், அதிசயமாய் பார்த்தான் காங்கேசன். அவள் மனதில் விழுந்திருந்த பயங்கரமான அடியும் கொடிய வலியும் அவனுக்குப் புரிந்தது.
“பாவிப்பெண்ணே, காலம் முழுதும் என் குடும்பத்தின் அரவணைப்பில் உன்னைத் தாங்க நினைக்கின்றேன், ஏன் மறுக்கிறாய்?” காங்கேசனின் உள்ளம் மௌனமாய் கேட்டுக்கொண்டது.

ஒருவாறு இருவரின் அழுகையும் அடங்கியதும், “சாதும்மா, உனக்காக அல்வா, செய்துகொண்டு வந்திருக்கிறன்,” என்றவர், “காங்கேசன், அந்தப் பையைத் தாப்பா” என்றார்.
பையிலிருந்து எடுத்தக்கொடுத்த அல்வாவை ருசித்து உண்டவள், “அம்மா உங்கட கைப்பக்குவம் மாறவே இல்லை” என்றவள், என்னைப் பாக்கிறதுக்காக இவ்வளவு தூரம் வருவியள் எண்டு நினைக்கவே இல்லை” என்றாள் கண்களில் நீருடன்.

சட்டென்று, “அப்பா வரலியாம்மா?” என்றபோதுதான்,
“வந்திருக்கன்மா” என்றார் காங்கேசனின் அப்பா.
பெண்மகவற்ற அவர்களை அப்பா அம்மா என அழைத்து அவர்களின் ஆழஅன்பை தனதாக்கியிருந்த சாதனாவின் இந்நிலை அவரையும் உலுக்கியிருந்தது என்பது அடைத்துவந்த அவரது குரலில் தெரிந்தது. வேதனையோடு பார்த்தான் காங்கேசன்.

“சாதும்மா, இத்தனை காலமா உன்னை நினைச்சு ஏங்கின ஏக்கமும் தவிச்ச தவிப்பும் கொஞ்சமில்லை, நாங்களாவது பரவாயில்லை, அப்பப்ப நினைக்கேக்க அழுதிட்டு விட்டிடுவம், காங்கேசன், நீ இருக்கிறாய் எண்டு உறுதியா நம்பினான், பைத்தியம் மாதிரி செஞ்சிலுவைக்கும், அங்க இங்க என்றும் கடிதம் அனுப்பினபடியே தான் இருந்தவன்” என்றார்.
“அம்மா ---“ சத்தமாய் அழைத்தான் காங்கேசன்.
“சரிடா, நான் எதுவும் சொல்லமாட்டேன், நீ பேசாம இரு” என்றபடி அமைதியான தாயைக்கண்டதும் அவனுக்கே பரிதாபமாகப் போனது.

“அம்மா, அவனை விடுங்கோ, என்ர நிலை தெரியாம, நீங்கள் எல்லாரும் நிறையவே தவிச்சிருப்பியள் எண்டு எனக்குத் தெரியும், அந்த நேரத்தில தொடர்புகொள்ளமுடியாமப் போச்சுது, அதுக்குப் பிறகு என்ர நிலை இப்பிடி ஆனதில நான் யாரோடையும் கதைக்கவோ, பழகவோ விரும்பேல்ல, யார் விலக்கிப் பாத்திருந்தாலும் பரவாயில்லை, காரு அப்பிடி நினைச்சிடுவான் எண்டு தான்---“
அவள் சொல்லிமுடிப்பதற்குள், அவசரமாய் குறுக்கிட்ட காங்கேசன், “ ஓ----- உங்கட மனசில என்ர நட்புக்கு அவ்வளவு உயர்ந்த இடம் இருக்கு, அப்பிடித்தானே?” என்றான்.

“ அது அப்பிடி இல்லை, எவ்வளவு காலம், நிறைய நட்புகள் வந்திருக்கும், ஒரு வேளை நீ என்னை மறந்திட்டியோ----“ அவள் சொல்லிமுடிப்பதற்குள்,
“நீ எதுவும் பேசவேண்டாம்” என்றுவிட்டு எழுந்து சென்றுவிட்டான், காங்கேசன்.
“டேய்—டேய்” அவள் காற்றோடுதான் பேசிக்கொண்டிருந்தாள்.

“பாருங்கோ அம்மா, ஏன் இப்பிடி கோபப்படுறான், ஏதோ உலகத்திலயே நானும் இவனும் தான் நண்பர்கள் மாதிரி, எங்களுடையது மட்டும்தான் நட்பு மாதிரி—“

“சாதுக்கண்ணம்மா, நீ சொன்னாலும் சொல்லாட்டியும் காங்கேசனோட நட்பு உயர்ந்தது தான், இல்லைன்னா இந்த பத்து வருசத்துக்கப்புறமும் உன்னைத் தேடிவந்து கண்டுபிடிச்சிருக்கான்னா உனக்கே அது புரியும்” என்றார் காங்கேசனின் தந்தையார்.

“அது சரிதான் அப்பா, நான் ஒரு பேச்சுக்கு சொன்னேனே தவிர மற்றபடி, எந்த உறவுமே சரியா அமையாத எனக்கு இவனோட நட்பு, கடவுள் கொடுத்த கொடை, என்னை முழுசா, ஆழமா புரிஞ்சுகொண்ட நண்பன் அவன், எப்பவுமே அவனோட அன்பு மாறாம இருக்கவேணும் எண்டதுதான் என்ர பிரார்த்தனை” என்றாள், கண்ணில் வழிந்த கண்ணீருடன்.

தொடரும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.