சுமந்திரன், ஹக்கீம் நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கின்றனர் – கெஹலிய

எம்.ஏ. சுமந்திரன், ரவூப் ஹக்கீம் போன்றோர் இலங்கையை பிளவுபடச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயற்பட்டு வருகிறார்கள் என்று எதிர்க்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
கண்டியில்  இன்று(ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய தேசியக் கட்சி தொடர்பில் நாட்டு மக்களும் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள்.
இவர்களது அமைச்சரவை தனிப்பட்ட தேவைக்காக அமைக்கப்பட்டது என அந்தக் கட்சியில் உள்ளவர்களே குற்றம் சுமத்துகிறார்கள். உயர்நீதிமன்றம் அரசியலமைப்புக்கு அமைய  தீர்ப்பை வெளியிட்டிருந்தாலும், நாடாளுமன்றில் இன்று பிரச்சினை நிலவி வருகிறது.
அரசாங்கத்துக்கு பெரும்பான்மை இல்லாது போயுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிக் கட்சிக்குள்ளும் பிளவு ஏற்பட ஆரம்பித்துள்ளது.
எமக்கு இவர்களது பிளவு தொடர்பில் பிரச்சினை இல்லாவிட்டாலும், இதனால் நாட்டுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் எமக்கு அக்கறை உள்ளது.
இதுதொடர்பில் கட்சி பேதம் பாராது சிந்தித்து செயற்பட வேண்டும். இதனாலேயே, ஸ்தீரமான அரசாங்கமொன்றை அமைக்க மக்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என நாம் கோரி வருகிறோம்.
மக்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி செய்யும் இந்த சூதாட்டம் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்ய அனைவரும் இடமளிக்க வேண்டும்.
இந்த அரசாங்கம் அரச சொத்துக்களை சர்வதேசத்துக்கு விற்றுக்கொண்டிருப்பதோடு, இனவாத செயற்பாடுகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளது. அத்தோடு, சுமந்திரன் ஆகியோர் சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவர தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்படும் என கூறினாலும், அரசமைப்பில் அவ்வாறு இடம்பெறப்போவதில்லை என்பதுவே உண்மையாகும்.
இவ்வாறு தமிழ்- சிங்கள- முஸ்லிம்களை பிரச்சினைக்குள்ளாக்கும் வகையிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
குறிப்பாக, அமைச்சர் ரவூப் ஹக்கீம் போன்றோர் ஐரோப்பிய நாடுகளின் உத்தரவுக்கமைய, நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கத்திலேயே செயற்பட்டு வருகிறார்கள்“ என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.