கிளிநொச்சியில் மாணவர்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை!

கிளிநொச்சி கல்வி வலயத்தில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகளை
மேற்கொள்வதற்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஊடாக வட.மாகாணத்தில் கல்வி கற்கும் விசேட தேவையுடைய மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான ஆசிரியர்கள் தொடர்பாக கேட்கப்பட்டதற்கே அவர் குறித்த விபரங்களைத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக வட.மாகாணத்தின் கல்வி வலயங்களின் துறைசார் அதிகாரிகள் கீழ்வரும் விபரங்களைத் தெரிவித்துள்ளனர்.
தீவகக்கல்வி வலயத்தில் 152 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 06 ஆசிரியர்கள் உள்ளதாகவும் தீவக கல்வி வலய தகவல் உத்தியோகத்தர் சாரங்கன் தெரிவித்துள்ளார்.
மேலும், துணுக்காய் கல்வி வலயத்தில் 42 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 08 ஆசிரியர்கள் உள்ளதாகவும் துணுக்காய் கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.பிருந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன், வடமராட்சி கல்வி வலயத்தில் 48 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 08 ஆசிரியர்கள் உள்ளதாகவும் வடமராட்சி கல்வி வலய கல்விப் பணிப்பாளர் யோ. ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், தென்மராட்சி கல்வி வலயத்தில் 27 விசேட தேவையுடைய மாணவர்கள் கல்வி கற்பதாகவும், அவர்களுக்கு கற்பிக்கவென பயிற்றப்பட்ட 05 ஆசிரியர்கள் உள்ளதாகவும் தென்மராட்சி கல்வி வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் ல.லிங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடமராட்சி , தென்மராட்சி , தீவகம் , கிளிநொச்சி மற்றும் துணுக்காய் ஆகிய ஐந்து கல்வி வலயங்கள் மாத்திரமே டிசம்பர் 31ஆம் திகதி வரையில் பதில் அனுப்பியுள்ளன.
ஏனைய யாழ்ப்பாணம் , வலிகாமம் , முல்லைத்தீவு , மன்னார் , மடு , வவுனியா வடக்கு மற்றும் வவுனியா தெற்கு ஆகிய ஏழு கல்வி வலயங்கள் இன்னும் பதில் அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.