தாய் மகன் மரணம்: மனநல சிகிச்சையின்மையால் விபரீதம்!

சென்னை தேனாம்பேட்டையில் மன நலம் குன்றியிருந்த தாயைக் கொலை
செய்துவிட்டு, அவரது மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த நடேசன் என்பவரது மனைவி சுந்தரவல்லி. இவரது மகன் விக்னேஷ்வரன். இவர் அருகிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வ்ருகிறார். இவர் தனது நண்பர் அருண் குமாருக்குத் திடீரென்று பணம் அனுப்பியுள்ளார். அதனை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தும்படி கூறியுள்ளார். இதனால் குழம்பிப்போன அருண்குமார், நேற்றிரவு விக்னேஷ்வரனின் வீட்டிற்குச் சென்றார். கதவைத் தட்டி நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்துள்ளார். வீட்டின் உள்ளே விக்னேஷ்வரன் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடக்க, அவரது தாயார் சுந்தரவல்லி படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தேனாம்பேட்டை போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “தாய் மீது அதிக பாசம் கொண்ட விக்னேஷ், தாயைக் கொலை செய்தார் என்பதை நம்ப முடியவில்லை. சுந்தரவல்லி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் இரவு முழுவதும் சத்தம் போட்டுக் கொண்டே இருக்கும் வேதனையை விக்னேஷ்வரனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை' என்று கூறினர் அவரது உறவினர்கள்.
தற்கொலை நடந்த வீட்டில் கடிதம் ஒன்றையும் தேனாம்பேட்டை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், "தங்களுடைய சாவுக்கு யாரும் காரணமில்லை. பயம் கொடிய நோய்" என்று எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மைண்ட் ஸோன் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவ உளவியல் நிபுணர் சுனில்குமார், உளவியல் நிபுணர் ஜெயசுதா காமராஜ் இருவரும் இந்த விவகாரம் பற்றிப் பேசுகையில், மனநலம் பாதித்தவர்களைக் கவனித்துக்கொள்ளும் நபர்களைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை என்று தெரிவித்தனர்.
“மனநலம் பாதித்தவர்களால் சாதாரண நபர்களுக்குப் பாதிப்பு கிடையாது. சாதாரண நபர்களால் தான் மனநலம் பாதித்தவர்களுக்குப் பாதிப்பு உண்டு. அவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் மனநலம் சீராக இருக்க வேண்டியது அவசியம். இந்தியாவில் யாரும் அதுபற்றிக் கவலைப்படுவதில்லை. வெளிநாடுகளில் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ளும் கேர்டேக்கர்ஸ், அந்த பொறுப்பை வேறொருவரிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வில் இருப்பர். அதன்பின், மீண்டும் நோயாளியைக் கவனித்துக்கொள்வர். அதுபோன்று செய்தால் இங்கும் இதுபோன்ற சம்பவம் நடைபெறாது” என்று தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.